புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் புல்லுமலைக் கிராமம் பல இன்னல்களைச் சந்தித்தது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றிய இந்துக் குருக்கள் ஒருவர் கொல்லப்பட்டார். 1980ம் ஆண்டு மே மாதம் இருபதாம் திகதி இராணுவத்தினரும், ஊர்காவற்படையினரும் ஒன்று சேர்ந்து புல்லுமலையிலுள்ள கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து எரியூட்டினர். இச் சம்பவத்தின் போது கேணல் வீரதுங்கவினால் இருபத்தைந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்புக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் கொடுவாமடுவில் வைத்துக் கொலைசெய்யப்பட்டனர்.
1986ஆம் ஆண்டு எட்டாம் திகதி அக்கிராமத்திலிருந்த இராணுவத்தினரும், மகாஓயாவிலிருந்து வந்த முந்நூறிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் அக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடாத்தினர். இதன் போது பதினெட்டுப் பொதுமக்கள் நிரலில் நிறுத்தி வைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். திரு.முத்தையா உட்பட ஐம்பத்தொரு பேர் கைது செய்யப்பட்டுக் காணாமற்போயினர். பலர் குடும்பங்களாகக் கொல்லப்பட்டனர். திரு.நாகலிங்கம் இராஜரட்ணம் என்பவரின் எட்டு மாதக் குழந்தை, நான்கு சிறுவர்கள், அவரின் மனைவி என்பவர்கள் உயிரிழந்தனர். சிறுவர்கள் சப்பாத்துக் கால்களால் மிதிபட்டு உயிரிழந்தனர். பீற்றர் லக்ஸ்மி என்பவரின் வீட்டில் ஒரு குழந்தை தவிர அனைவருமே கொல்லப்பட்டனர். கந்தசாமி என்பவரும் அவரது மனைவியான ஒரு சிங்களவரும் அவர்களது குழந்தையும் உயிரிழந்தனர்.
இங்கு தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் தனிப்பட்ட முறையில் தெரிந்த இருவரை மட்டும் தப்பியோடும்படி விட்டுவிட்டனர். அவ்வாறு தப்பியவர்கள் செங்கலடியை வந்தடைந்தனர். 1986.11.10 அன்று மூன்று மாத குழந்தை, பெண்கள், இருபத்துமூன்று ஆண்கள் என இராணுவத்தின் நடவடிக்கையால் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழநத் ஆறு பெண்களில் இருவர் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். கைது செய்து காணாமல் போனோரின் இருபத்துநான்கு பேர் அடங்குகின்றனர். இந்தத் தாக்குதலை நடாத்திய இராணுவத்தினரை அடையாளம் காண்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட அடையாள அணிவகுப்பு பின்னர் இடைநிறுத்தப்பட்டது.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.