×

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை

கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளது. இக்கிராமம் மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமாகும். 1985 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இந்தப் பாடசாலை தமிழ் மக்களின் முகாமாக இயங்கி வந்தது.

கிராமசபை இயங்கி வந்த காலங்களில் மல்லிகைத்தீவு கிராமசபை பெரும்பான்மையான தமிழ்க் கிராமங்களையும், சில சிங்களக் கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது. அவற்றில் தெகிவத்தை, நீலாப்பொல போன்ற சிங்களக் கிராமங்களில் இருந்த மக்களில் பலர்  ஊர்காவற்படைக்கு இணைக்கப்பட்டு பணிக்கமர்த்தப்பட்டனர். இவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்கள் அழிப்பில் ஈடுபட்டனர். ஊர்காவற் படையில் அந்தந்தக்  கிராமத்தவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் ஆரம்ப காலங்களிலிருந்தே தமிழ் மக்களோடு ஒன்றாகப் பழகியிருந்தமையால் கிராமத்தவர்கள் சம்பந்தமாக பூரணமாக அறிந்திருந்தனர்.

15.07.1986 அன்று தெகிவத்தை, நீலாப்பொல கிராமத்திலிருந்த ஊர்காவற் படையினருடன் இராணுவத்தினர், பொலீசாரும் இணைந்து நள்ளிரவுவேளை பெருவெளி அகதிகள் முகாமைச் சுற்றியிருந்த பகுதிகளில் மறைந்திருந்தனர். முகாமைச்  சூழவிருந்த பெருவெளி மணல்வெளிக் குடியிருப்புகள், இரணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்டிருந்ததால், இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதில்லை, இதனால் இரவு வந்த இராணுவத்தினரின் நடமாட்டம் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பொழுது புலர்ந்து வந்து கொண்டிருந்த

வேளையில் முகாமிற்குள் புகுந்த இராணுவத்தினர் சுடத்தொடங்கினர்கள். அத்தோடு தத்தமது இருப்பிடங்களுக்குக் காலையில் திரும்பிய மக்கள் மீதும் ஒளிந்திருந்த இராணுவத்தினரும் காவற்றுறையினரும் சுட்டார்கள். திகைப்படைந்த மக்கள் நாலாதிசையும் பாய்ந்து ஓடத்தொடங்கினர். பயந்தேடிய மக்களை மறைந்து நின்ற படையினர் சுட்டுக்கொன்றனர். அவ்வாறிருந்தும் பெருமளவு மக்கள் ஓடித் தப்பிக்கொண்டனர். குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் உட்பட மொத்தமாக நாற்பத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். இருபது பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டனர். இந்தப் படுகொலைச் சம்பவம் நண்பகல் ஒரு மணிவரை நீடித்தது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த நலன்விரும்பிகளும் தொண்டர் நிறுவனங்களும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போதிருந்த மூதூர் பிரசைகள் குழுத்தலைவர் அமரர் மு.கனகசபையும் வேறு சிலரும் அவ்விடத்திற்கு விஜயம் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மூதூர் அரசினர் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்று மறுநாள் பெருவெளி சேமக்காலையில் அடக்கம் செய்தனர்.

முருகப்பன் தங்கராஜா (பெருவெளி வட்டவிதானையார்)

1986 ஆம் ஆண்டு பெருவெளியில் அகதி முகாம் ஒன்று இருந்தது. இராணுவத்திற்குப் பயந்த மக்கள் அனைவரும் அங்கு தங்கியிருந்தார்கள். 15.07.1986 அன்று இரவு விடியற்காலை 3.00 மணியளவில் அந்த இடத்தை இரவோடு இரவாக வந்த இரன்டுவத்தினர் சுற்றிவளைத்தார்கள். விடிந்தவுடன் கண்ணில்பட்ட அனைவரையும் சுட்டுக்கொன்று பல அட்டகாசங்களைச் செய்தனர். நன்கு விடிந்தவுடன் முகாம்களுக்குள் புகுந்து குடிசைகள் அனைத்திற்கும் நெருப்பு வைத்துவிட்டு அந்த வீடுகள் பத்தி எரிந்துகொண்டிருக்கும் பொழுது பொதுமக்களைப் பிடித்துச் சுட்ட பின்னர் காலிலும் தலையிலும் பிடித்து எரியும் நெருப்புக்கு மேல் தூக்கி வீசினர். உயிரோடு இருந்தவர்களைக் கூட எரியும் நெருப்புக்குள் தூக்கிப் போட்டார்கள். இப்படியாக காணும் இடமெல்லாம் எரிந்துகொண்டிருந்தது.

அந்த நேரம் வெடிச்சத்தத்திற்குப் பயந்து இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து சில வீடுகளிற் கூடியிருந்தார்கள். அப்படியிருந்தவர்களில் ஆண்களை எல்லாம் பிடித்து அங்கிருந்தோர்க்கு முன்னாலேயே வைத்து சுட்டும் வெட்டியும் கிணற்றுக்குள் போட்டார்கள். அப்படிச் சுடப்பட்டு இறந்தவர்களின் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சடலங்களை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டுபோய் முகங்களிற்கு அசிட் ஊற்றி யாரென அடையாளங் காண முடியாதளவிற்கு அவர்களுடைய முகாம்களுக்குக் கொண்டுபோய் வைத்திருந்துவிட்டு மூன்று நாட்களிற்குப் பின்னர் அச்சடலங்களை உறவினர்களுக்குக் கொடுத்திருந்தார்கள்.

அந்தவேளை இங்கு சுட்டுக் கொல்லப்பட்டவர்களது சடலங்களைக் கிணறுகள், மதகுகள் போன்ற இடங்களிளெல்லாம் ஆங்காங்கே இராணுவத்தினர் போட்டிருந்தார்கள். எத்தனை மக்கள் இறந்தார்கள் என்பதுகூட சரிவரத் தெரியவில்லை. அந்தளவிற்கு காணுமிடமெல்லாம் சடலமாக இருந்தது. இவற்றுள் வேறு ஊர்களிலிருந்து தொழிலிற்காக வந்தவர்களும் இறந்திருந்தார்கள்.

வழமையாக இராணுவத்தினர் வரும்போது வரும் திசையிலிருந்தே வெடிச்சத்தம் கேட்கும். அந்த நேரம் நாங்கள் எல்லோரும் ஓடிச்சென்று காடுகளுக்குள் ஒளிந்துகொள்வோம். ஆனால் அன்றைய தினம் வழமைக்கு மாறாக நடந்ததால்தான் பல மக்கள் அகப்பட்டுக்கொண்டார்கள். இராணுவத்தினர் சென்ற பின்னர் ஊருக்குள் சென்று பார்த்தபோது யார் யாரைச் சுட்டிருக்கிறார்கள், எந்தெந்தக் கிணற்றில் சடலம் இருந்தது எனத் தெரிந்தது. அகதி முகாமில் இருந்தவர்களைத் தான் நிறையக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

சுடப்பட்டவர்களைத் தவிர உயிருடன் பிடித்துச் சென்றவர்களை பின்னர் முழுமையாக மனிதர்கள் மாதிரி விடவில்லை. கைகளைக் கால்களை வெட்டி நடமாட முடியாதளவிற்கு கொடுமைப்படுத்தி விட்டிருந்தார்கள். அந்தநேரத்திலும் ஊருக்குள் நிற்கப் பயம். திரும்பவும் இராணுவம் வரலாம் என்ற அச்சம் இருந்தது. தனித் தனிக் கிடங்குகள் வெட்டி சடலங்களைப் போட முடியவில்லை. சடலங்கள் கூட பார்க்கமுடியாதளவு அழுகிய நிலையில் இருந்ததால் பெரிய கிடங்கு ஒன்று வெட்டி அத்தனை சடலங்களையும் ஒருமித்துப் போட்டு மூடினோம்.

இந்த நிலையிலும் கிராமத்தை விட்டு யாரும் வெளியேற முடியாத நிலையிருந்தது. இராணுவத்தினர் கண்டால் உடனே சுட்டுவிடுவார்கள் என்ற பயம் இருந்தது. நாங்கள் யாராவது வீட்டை விட்டு வெளிக்கிட்டால் திரும்ப வந்தால்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரியும். இல்லாதுபோனால் எந்த முகாமில் பிடித்து வைத்திருக்கிறார்கள், எங்காவது வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா என்று எதுவும் தெரியாத நிலை இருந்தது. இந்த முகாமிற்கு நடந்த கொடுமையைப் போல் நான் எங்கும் பார்த்ததில்லை. இதை நேரடியாகப் பார்த்தவர்களிற் சிலர் பைத்தியமாகக் கூட இருந்தார்கள். நாற்பத்தெட்டுப் பேர் வரை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை விட உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக

இருக்கிறார்கள்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments