×

தண்டுவான் படுகொலை – 17.07.1986

முல்லைத்தீவு-வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ளது. தண்டுவான் கிராமத்தின் பிரதான வருமானம் விவசாயம் மூலமே பெறப்படுகிறது. இக்கிராமத்திலுள்ள மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நெடுங்கேணிக்கே செல்ல வேண்டியிருந்தது.

17.07.1986 ஆம் ஆண்டு வழமைபோல முல்லைத்தீவிலிருந்து நெடுங்கேணி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மக்கள் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல்வேறு தேவைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். அன்றையதினம் நெடுங்கேணிப் பிரதேசமானது சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் கொப்பேக்கடுவ தலைமையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அதற்கு சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தியும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது.

அதேவேளை பேருந்தில் சென்ற தண்டுவான் மக்கள் தமது இடங்களில் இறங்கியபின் நெடுங்கேணிக்குப் போகமுடியாத நிலையில், ஓட்டுநர் பேருந்தைத் திருப்பி முல்லைத்தீவு நோக்கி ஓட்டிச் சென்றபோது பேருந்தைப் பின்தொடர்ந்து சென்ற உலங்குவானூர்தி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதுடன், கிட்டத்தட்ட தண்டுவான் பாடசாலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஒரு கி.மீ. தூரத்தில் வைத்து பேருந்து மீது றொக்கற் தாக்குதலை மேற்கொண்டது. இத்தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் உட்பட பதினேழு பேர் உயிரிழந்தனர். பதின்மூன்று பேர் காயமடைந்தனர்.

17.07.1986 அன்று தண்டுவான் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. சேகு அப்துல்காதர் (வயது 55 – விவசாயம்)
  2. நாகமணி தட்சணாமூர்த்தி (வயது 30 – அரச ஊழியர்)
  3. சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 28)
  4. சிவலிங்கம் விவேகானந்தம் (வயது 17)
  5. குமாரசாமி வேலாயுதம்பிள்ளை (வயது 22)
  6. முத்துக்குமார் கணேஸ்வரி (வயது 35)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments