×

அல்வாய் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987

அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987

யாழ். மாவட்டத்தில் கரவெட்டிப் பிரதேசத்தில் அல்வாய்க் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் இருநூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விவசாயக்குடும்பத்தை சேர்ந்த வள்ளிநாச்சியார் என்பவர் இந்தியாவிலிருந்து தருவித்த கருங்கற் சிலையைத் தனக்குச் சொந்தமான வேவிலந்தை என்ற காணியில் வைத்து வழிபட்டு வந்தார். ஆரம்ப காலத்தில் அச்சிலையை வழிபட்டு வந்த மக்கள் காலப்போக்கில் பெரிய ஆலயமாகக் கட்டினார்கள். வீதியின் முன்பாக பெருவிருட்ச மரங்கள் காணப்படுவதோடு, வடமராட்சிப் பகுதியில் இந்துக்களின் பிரசித்தமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது.

1987  மே இருபத்தாறாம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர் வடமராட்சிப் பகுதிமீது கூட்டுப்படைத் தளபதி சிறில் ரணதுங்க மற்றும் இராணுவ அதிகாரிகளான லலித் கொத்தலாவல,  கொப்பேகடுவ போன்றோர் தலைமையில் ஒப்பிரேசன் லிபரேசன் (Operation Liberation) என்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். பலாலி இராணுவத் தளத்திலிருந்து எறிகணை வீச்சு, கடற் தாக்குதல், ஆகாய தாக்குதல் என மும்முனைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை உலங்குவானூர்தி மூலம்

துண்டுப் பிரசுரங்களைப் போட்டதுடன், பலாலியிலிருந்து ஒலிபரப்புச் செய்யப்பட்ட வானொலிச் சேவை மூலமும் மக்களைப் பாதுகாப்பாக ஆலயங்களில் இருக்கும்படி இராணுவத்தினர் அறிவித்தார்கள்.

29.05.1987 அன்று இராணுவத்தின் இந்த அறிவிப்புகளைச் செவிமடுத்த மக்கள் அச்சமடைந்து, கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு முத்துமாரியம்மன் கோயிலில் பாதுகாப்புக்காகத் தஞ்சமடைந்தனர். இதில் அல்வாய்க் கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி இன்பருட்டி, திக்கம், வதிரி, நெல்லியடி, தம்பசிட்டி, புலோலி, கரவெட்டி ஆகிய இடங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இவ் அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். ஆலயம் பெரிய ஆலயமாகவும், விசாலாமான வீதிகள், பெரிய மரநிழல்கள் கொண்டிருந்தமையாலும் அத்தனை மக்களும் அங்கு தங்கக் கூடியதாக இருந்தது.

29.05.1987 அன்றையதினம் மாலை 7 மணிக்கு அம்மன் கோயில் உள்மண்டபம் மக்களால் நிறைந்திருந்தது. இரவு 9 மணியளவில் வெளிவீதி எங்கும் ஒரே மக்கள் கூட்டம். இரவு 11 மணியளவில் இராணுவத்தினரால் வீசப்பட்ட எறிகணை ஆலயத்தின் முன்னுள்ள வேப்பமரத்தில் வீழ்ந்து வெடித்தது. இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. அடுத்த எறிகணை உள்மண்டபத்தில் கொடிக்கம்பத்தின் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த எறிகணை வசந்த மண்டபத்தில் வீழ்ந்ததினால் அவ்விடத்திலிருந்த இளைஞர்கள் உயிரிழந்தார்கள். இவ்வாறு மூன்று எறிகணைகள் ஆலயத்தில் வீழ்ந்து வெடித்ததால், ஆலயத்தில் ஒரே அவலக்குரல் எழுந்தது. அச்சமடைந்ததால் பாதுகாப்பைத் தேடிய மக்கள் நான்கு திசைகளிலும் சிதறி ஓடினார்கள். ஆலயம் இரத்த வெள்ளமானது. இதில் யார் யார் உயிரிழந்தார்கள் என்று அடையாளம் காண முடியாதளவிற்கு உடல்கள் சிதைந்திருந்தன. இராணுவத்தின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பைத் தேடி ஆலயத்தில் தஞ்சமடைந்த பொதுமக்களில் நாற்பது பேர்வரை எறிகணை வீச்சில் உயிரிழந்தார்கள். இருபத்திரண்டு பேர் வரை காயமடைந்தார்கள்.

29.05.1987 அன்று அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் மீதான எறிகணை வீச்சில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. இரத்தினம் மாணிக்கம் (வயது 65 – வீட்டுப்பணி)
  2. நாகமுத்து சோதிலிங்கம் (வயது 63 – கடற்தொழில்)
  3. நற்குணம் சந்திரசேகரம் (வயது 08 – மாணவன்)
  4. க.சட்டநாதன் (வயது 54 – கமம்)
  5. கந்தர் மார்க்கண்டு (வயது 67 – தொழிலாளி)
  6. கதிர்காமு கிட்ணபிள்ளை (வயது 61 – வியாபாரம்)
  7. கதிர்காமத்தம்பி யோகானந்தன் (வயது 12 – மாணவன்)
  8. கதிர்காமத்தம்பி செல்வானந்தன் (வயது 14 – மாணவன்)
  9. கதிரித்தம்பி வள்ளிப்பிள்ளை (வயது 77)
  10. குமாரன் நல்லதம்பி (வயது 60 – தொழிலாளி)
  11. கணேஸ் அம்பிகாவது (வயது 48)
  12. கணேசபதி சதாகரன் (வயது 16 – கமம்)
  13. கணபதிப்பிள்ளை சின்னத்துரை (வயது 60 – கமம்)
  14. கணபதிப்பிள்ளை சிவகாமி (வயது 69)
  15. பிறேமானந்தராசா (வயது 27 – தொழிலாளி)
  16. பஞ்சாட்சரம் தர்மகுலராசா (வயது 28 – கமம்)
  17. துரைசிங்கம் கலாவதி (வயது 26)
  18. தம்பிஐயா றமணன் (வயது 18 – மாணவன்)
  19. தங்கமயில் சுஜாதா (வயது 16 – மாணவி)
  20. தவராசசிங்கம் காமலேஸ்வரி (வயது 38)
  21. தவராசசிங்கம் அனுபாமா (வயது 06 – மாணவி)
  22. தணிகாசலம் தர்மேந்திரம் (வயது 08 – மாணவன்)
  23. மார்க்கண்டு நகுலேஸ்வரன் (வயது 34 – தொழிலாளி)
  24. மார்க்கண்டு செல்லம்மா (வயது 58 – கைப்பணி)
  25. மாசிலாமணி சுதன் (வயது 01 – குழந்தை)
  26. மாணிக்கம் உசாராணி (வயது 03 – குழந்தை)
  27. மாணிக்கம் நாகேந்திரராஜா (வயது 13 – மாணவன்)
  28. மாணிக்கம் மல்லிகாதேவி (வயது 41 – வீட்டுப்பணி)
  29. யோகராசா ரதி (வயது 2.5)
  30. செல்லையா நாகம்மா (வயது 50 – வீட்டுப்பணி)
  31. சி.மாணிக்கம் (வயது 57 – தொழிலாளி)
  32. சிவனடி இராமநாதன் (வயது 22 – வைத்திய ஊழியர்)
  33. சிவலிங்கம் அன்னம்மா (வயது 65 – வீட்டுப்பணி)
  34. சண்முகம் பூலோகநாதன் (வயது 16 – மாணவன்)
  35. வ.மாரிமுத்து (வயது 54 – தொழிலாளி)
  36. விசுவலிங்கம் இராசகோபால் (வயது 30 – விவசாயம்)
  37. ரவீந்திரன் செல்லமணி (வயது 30 – வீட்டுப்பணி)

காயமடைந்தவர்களின் விபரம:

  1. இ.குணசேகரன் (வயது 12 – மாணவன்)
  2. நகுலன் (வயது 06 – மாணவன்)
  3. கு.இராசலிங்கம் (வயது 51 – கடற்தொழில்)
  4. க.குணரட்ணம் (வயது 32 – வீட்டுப்பணி)
  5. கந்தையா கலைமதி (வயது 06 – மாணவி)
  6. குலநாயகம் விஜயசோதி (வயது 35 – வீட்டுப்பணி)
  7. தம்பிஐயா புவனேஸ்வரி (வயது 46 – வீட்டுப்பணி)
  8. ம.வேல்மணி (வயது 32 – தொழிலாளி)
  9. மாணிக்கம் யோகராணி (வயது 17 – வீட்டுவேலை)
  10. மாணிக்கம் சுவேந்திரராஜா (வயது 05 – மாணவன்)
  11. ஆழ்வாப்பிள்ளை இராஜமலர் (வயது 09 – மாணவி)
  12. ஆழ்வாப்பிள்ளை சரச்சந்திரன் (வயது 13 – மாணவன்)
  13. ஜெனார்த்தனன் (வயது 07 – மாணவன்)
  14. வே.இந்திரராணி (வயது 30 – வீட்டுப்பணி)
  15. வேலுப்பிள்ளை தம்பிஐயா (வயது 46 – குருதி பரிசோதகர்)
  16. சு.கந்தசாமி (வயது 54 – தபாலதிபர்)
  17. ச.கண்ணதாசன் (வயது 08 – மாணவன்)
  18. சு.செல்வதி (வயது 24 – வீட்டுப்பணி)
  19. சு.செல்வராசா (வயது 06 – மாணவன்)
  20. ச.சண்முகதாசன் (வயது 10 – மாணவன்)
  21. சி.வசந்தாதேவி (வயது 38 – வீட்டுப்பணி)
  22. விக்கினேஸ்வரன் இந்திராணி (வயது 21 – வீட்டுவேலை)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments