தமிழ் மன்னர்களின் வைத்தியசாலையே இலங்கையின் முதல் வைத்தியசாலை யாழில்….
இலங்கைத் தீவில் பண்டைக் காலத்தில் நாட்டின் வடபகுதி யில் ஆட்சி செய்த யாழ்ப்பா ணத் தமிழ் அரசர்கள் தங்களது குடிமக்களின் நலன் கருதிப் பொதுச் சேவை களை ஆற்றியுள்ளமை வரலாற்றில் பதிவாகியுள்ளது. அவர்களின் பணிகள் காலத்தை வென்று இன்றும் நிலைபெற்றிருப்பதை அறிய முடிகின்றது.
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த யாழ்ப்பாணத் தமிழ் அரசர்களால் நிறுவப்பட்ட கோயில்களும் குளங்களும் அவர்களது சேவையை, பொதுப்பணியை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் அவர்களது மருத்துவ சேவைக்குச் சான்றாக அவர்களால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்த நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலை சான்றாக விளங்குகின்றது.
இலங்கைத் தீவிலேயே முதன்முதலாக நோயாளர்கள் தங்கியிருந்து வைத்தியம் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளுடன் நிறுவப்பட்ட வைத்தியசாலை என்ற பெருமைக்குரியது நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலையாகும். இந்நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலேயே தீவின் பல பகுதிகளிலும் நோயாளர்கள் தங்கியிருந்து வைத்தியம் பெறக் கூடிய அரச வைத்தியசாலைகள் நிறுவப்பட்டன.
ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கேயர் இந்நாட்டில் அடியெடுத்து வைத்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பே அரச ஆதரவுடன் சட்டவிதிகளுக்கமைய யாழ்ப்பாணத்தில் மேற்படி வைத்தியசாலை இயங்கியுள்ளது என்பதை ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது.
குடிமக்களுக்கு மட்டுமல்ல காயமடைந்த போர் வீரர்களுக்கு சத்திர சிகிச்சை உட்பட மற்றும் பல வைத்திய வசதிகளை வழங்குவதற்காகவே இவ்வைத்தியசாலை நிறுவப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையில் இந்து மதகுருமார் தங்கியிருந்து வைத்தியம் பெற்றுக் கொள்வதற்காக தனியான விடுதிகளும் நிறுவப்பட்டிருந்தன.
உப்பரிகை அதாவது மாடியையும், சமையலறை, சத்திர சிகிச்சைக்கூடம், பிரேத அறை என்பவற்றையும் கொண்டதாக சகல வசதிகளுடனும் இயங்கிய இந்த சித்த வைத்தியசாலை போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்திய போரின் போது சிதைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரதும், ஒல்லாந்தரதும் ஆட்சி முடிவுக்கு வந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட போது 1838 ஆம் ஆண்டு அவர்களது ஆட்சியில் மேற்படி சித்த வைத்தியசாலை மீளமைக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.
போர்த்துக்கேயரின் படையெடுப்பால் வைத்தியசாலை சிதைக்கப்பட்ட போது அங்கிருந்த வைத்திய குடும்பத்தினர் மட்டுவிலுக்குத் தப்பியோடியதாகவும் அங்கிருந்து வைத்தியப் பணியைத் தொடர்ந்து செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நடைபெற்ற அநீதிக்கெதிராக அக்கினி வைரவரை ஸ்தாபித்து வழிபாடும் செய்துள்ளனர். அவர்களால் அன்று தாபிக்கப்பட்ட அக்கினி வைரவர் ஆலயம் இன்றுமுள்ளது.
இந்து சமயத்தவரின் சமூகநல அடிப்படைக் கோட்பாட்டின்படி நிறுவப்பட்ட நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலை முற்றுமுழுதாகத் தமிழ் அரசர்களின் ஆதரவுடனேயே இயங்கி வந்துள்ளது. மன்னர் காலத்தில் வரையப்பட்ட மான் தோல் சித்திரம் அண்மைக் காலம்வரை அங்கிருந்தது.
யாழ்ப்பாணத் தமிழ் அரசில் ஆட்சி செய்த அரசர்களில் செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் போன்ற கீர்த்தி மிக்க அரசர்கள் பலர் இருந்துள்ளனர். யாழ்ப்பாண அரசின் இறுதி அரசன் சங்கிலியன் போர்த்துக்கேயரான அந்நியருக்கு எதிரான இறுதி வரை போராடியதால் வரலாற்றில் பெருமை பெற்றான். செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய தமிழ் அரசர்கள் வைத்தியத்துறையில் புலமை பெற்றவர்களாக, நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் விளையும் மூலிகைகளைக் கொண்டே மருந்து தயாரிக்க உதவியுள்ளனர். யாழ்ப்பாணத் தமிழ் அரசர்களில் பரராசசேகரன் கீர்த்தி மிகு வைத்தியராக விளங்கியுள்ளார்.
வாதரோக நிதானம், சன்னிரோக நிதானம், பாலரோக நிதானம், கெற்பரோக நிதானம் ஆகிய மருத்துவ நூல்கள் பரராசசேகர மன்னனால் ஆக்கப்பட்டுள்ளன. ஆட்சித்துறையில் மட்டுமல்ல வைத்தியதுறையுட்பட பல துறைகளிலும் இம்மன்னன் சிறந்த அறிவைப் பெற்றிருந்தான் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது.
மேற்படி நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலையில் இருந்த பெறுமதி மிக்க பல வைத்திய நூல்கள் 1995 ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த இடப்பெயர்வின் போது அழிக்கப்பட்டன. பண்டைய தமிழரின் சிறப்புமிக்க வரலாற்று ஆதாரங்கள் அப்போது அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாண அரசர்கள் வைத்திய பாரம்பரையினரை அரவணைத்து உதவியுள்ளனர். அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர் என்பதை அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள சட்டநாதர் சிவன் கோயில், சந்திரசேகரப் பிள்ளையார் கோயில், கொழும்புத்துறை வதிரிபீட விநாயகர் கோயில் ஆகியவற்றின் பாதுகாவலர்களாகவும் மேற்படி நாயன்மார் கட்டு சித்த வைத்திய குடும்பத்தினரை யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் நியமித்துள்ளனர்.
அரச கட்டளையில் வைத்தியராவதற்கான தகைமைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
சைவ சமய விதிப்படி விசேட தீட்சை பெற்றவராய், வியபிசாரம், மது மாமிச போசனம் இல்லாமை, பொய், சூது போன்ற குற்றங்களற்றவராய் நல்லொழுக்கம் உள்ளவராய் இருத்தல் வேண்டும்.
இவ்வாறான தகைமை கொண்டவர்களாக வைத்தியர்கள் இருப்பதுடன் அவர்களுக்காக கடமைகளும் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன.
நோய்கள் ஆன்மீகம் பௌதீகம் தெய்வீகம் என்று மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டே வைத்தியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரசாயனத் தொற்று நீக்கி இல்லாத அக்காலத்தில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் தையலிடுவதற்கு வெங்காயத்தில் அவித்த தும்பு நார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சித்த ஆயுள்வேத முறைப்படி கண்டறியப்பட்ட ரோகங்களின் (நோய்களின்) எண்ணிக்கை 4448 ஆகும். அத்தனை நோய்களுக்கும் ஆயுள்வேத சித்த வைத்திய முறையில் மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. எலும்பு முறிவு போன்ற உள்ளுறுப்புத் தாக்கங்களுக்கும் மேற்படி வைத்தியசாலையில் மருத்துவம் நடைபெற்றுள்ளது. இதுவும் யாழ்ப்பாண அரசர் கால வைத்தியப் பணியின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றது சான்றாயமைகின்றது.
யாழ் இராச்சியம் நிலவிய காலத்தில் அரசர் ஆட்சியின் போது அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சிறப்பாக இயங்கி வந்த நாயன்மார்கட்டு வைத்தியசாலை பண்டைய இலங்கைத் தமிழரின் பண்பாட்டின், வளத்தின், ஆளுமையின், நாகரிகத்தின் சிறப்பின் வெளிப்பாடாக அமைகின்றது. வெளியுலகத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் அரசின் இருப்பையும் வளத்தையும் தெளிவுபடுத்தி நிற்கின்றது.
ஆங்கிலேய தேசாதிபதி மனிங், சேர். பொன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் தந்தையார் போன்றோரும் அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை அங்கிருந்த ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
யாழ்ப்பாணத் தமிழ் அரசின் பெருமை, பண்டைய இருப்பு, சிறப்பு வளம், ஆளுமை உட்பட்ட அனைத்தும் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்படுவது அவசியம்.