ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் எனுமிடத்தில் உள்ளது. இத்தொல்லியல் களம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்களம் கிமு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது.
இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தொல்லியல் களத்தை முதலில் 1903-04களில் பெருமளவில் அகழாய்வு செய்தவர் அலெக்சாண்டர் ரியா ஆவார். இவர் 1890களில் ஆய்வு செய்து 1800 பொருட்களை முதல் கட்ட ஆய்வில் கண்டுபிடித்தார். இந்த ஆய்வு 1904 வரை தொடர்ந்து நடந்தது. அதில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை அவர் கண்டறிந்து காட்சிப்படுத்தினார். அப்போதிருந்த அறிவியல் வளர்ச்சியை கொண்டு அவர் ஆதிச்சநல்லூரின் காலத்தை கிமு 3000 – கிமு 1500 எனக் கணித்தார். அவரின் ஆய்வை “prehistoric antiquities of tinnevelly” என ஆய்வுக் கட்டுரையாகவும் வெளியிட்டார்.
பின்னர் நூறு வருடங்கள் கழித்து, 2004-05 இல் திரு சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் நான்கு கட்டமாக ஆய்வு செய்யப்பட்டது. வெண்கலப் பொருட்கள் அதிகம் கிடைத்தன. அலெக்சாண்டர் ரியா செய்த ஆய்விலும் வெண்கலப் பொருட்கள் இரும்பு பொருட்கள் அதிகம் கிடைத்திருந்தன. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரியவந்துள்ளது.
(விக்னேஷ் சீனிவாசன் (தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்)