யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.
பொருள்
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு
விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம்,
அவனை அணுகுவதில்லை.
குறள் #342
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
பொருள்
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
குறள் #343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
பொருள்
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
குறள் #344
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
பொருள்
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல்
பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச்
செய்துவிடும்.
குறள் #345
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை.
பொருள்
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.
குறள் #346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.
பொருள்
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன்,
வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
குறள் #347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
பொருள்
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
குறள் #348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
பொருள்
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.
குறள் #349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
பொருள்
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.குறள் #350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பொருள்
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை
நிற்கும்.
திருக்குறள் அருஞ்சொற்கள்
ஈண்டு
இப்பிறப்பில்
மயலாகும்
மயக்கத்துக்கு ஏதுவாகும்
செருக்கு
மயக்கம்
தலைப்பட்டார்
முக்தியடைந்தவர்
மற்று
பற்றுகள் அறாதபொழுது