×

ஓயாத அலைகள் 3 – போரியல் ஆய்வு கட்டுரை 2

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 ( கட்டம் 3, 4)

போரியல் ஆய்வு  கட்டுரை 2

முந்தைய பதிவின் இறுதியில் அமெரிக்க இராணுவத்தின் Historical Minimum Planning Ratios, எதிரி தற்காப்பு முறையை (defensive) எடுக்கும்போது அவர்களின் நிலை prepared and fortified ஆக இருந்தால், தாக்குதல் (attack)  நடத்தும் படைகள் மூன்று மடங்கு எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என கூறுகிறது என குறிப்பிட்டிருந்தேன்.

அமெரிக்க இராணுவத்தின் Historical Minimum Planning Ratios அடிப்படையில் கணக்கிட்டால், ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பில் இருந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified  நிலைகளை தாக்கி வீழ்த்துவதற்கு விடுதலை புலிகள் தரப்பு குறைந்தது 51000-75000 போராளிகளையாவது கொண்டிருக்கவேண்டும்.

ஆனால் வெறும் 7000 இற்கும் குறைவான போராளிகளை கொண்டுதான் இந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified  ஆன ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு வீழ்த்தப்பட்டது.

விடுதலை புலிகளால் இதை எப்படி நிகழ்த்தமுடிந்தது?

இதற்கு நாம் போரியலோடு தொடர்புடைய அறிவியல் பூர்வமான விடையை கண்டுபிடிக்கவேண்டும்.

அந்த அறிவியல்பூர்வமான விடை எது?

போரியலில் Force Multiplier எனும் தியரி உண்டு.

இந்த தியரியை எளிமையாக்கி சுருக்கமாக தருகிறேன்.

Force Multiplier என்பது, பலமடங்கு எண்ணிக்கையால் மட்டுமே சாத்தியப்படும் சாதனைகளை குறைவான எண்ணிக்கையை கொண்டே சாதிப்பதற்கு உதவுபவை என போரில் சில காரணிகள் அடையாளம் காணப்பட்டன. அந்த காரணிகளே force multiplier என அழைக்கப்படுகின்றன.

In military science, force multiplication or a force multiplier refers to a factor or a combination of factors that gives personnel or weapons (or other hardware) the ability to accomplish greater feats than without it.

இதை இன்னும் எளிமையாக விளக்குகிறேன்.

உதாரணமாக ஒரு இராணுவ ரீதியான இலக்கை எட்டுவதற்கு  100 பேர் கட்டாயம் தேவை எனில், அதை பத்து பேரை கொண்டே எட்டுவது. இந்த 10 பேரை கொண்டே இலக்கை எட்டுவதை சாத்தியப்படுத்தும் காரணிகள்தான் force multiplier என அழைக்கப்படுகின்றன.

போரியல் ஆய்வாளர்கள் அத்தகைய force multiplier காரணிகள் என சிலவற்றை பட்டியலிடுகிறார்கள். அவையாவன

Morale

Mobility

Technology

Intelligence

Deception

Military Tactics

Military strategy

Geographical Features

Weather

இப்பொழுது விடுதலை புலிகள் 7000 இற்கும் குறைவான போராளிகளை கொண்டு  17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified ஆன ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பை வீழ்த்திய சாதனையை இந்த Force Multiplier தியரியின் ஊடாக புரிந்துகொள்ளலாம்.

விடுதலை புலிகளின் இந்த சாதனைக்கு பெரும் காரணமாக இருந்த Force Multiplier காரணிகள் எவை?

முதலாவது Morale (மன உறுதி)

இதை மன வலிமை, உயிர் தியாகத்திற்கு எந்த கணமும் சித்தமாயிருத்தல், ஓர்மம் என பலவகைகளில் அர்த்தப்படுத்த முடியும்.

போரியல் காரணிகள் தமக்கு எதிராக இருந்தும், 26 வருடங்கள் போர் களத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்ததற்கு விடுதலை புலிகளின் இந்த Morale பிரதான காரணம்.

போராளிகளின் மன உறுதி தலைவர் பிரபாகரனிடம் இருந்து வந்தது. போராளிகளின் எண்ணற்ற தியாகமும், அதற்கான ஊற்றும் தலைவர் பிரபாகரன்தான்.

இன்னும் நுட்பமாக சொல்வதாயிருந்தால், தமிழீழம் என்ற சுதந்திர தேசத்தை நேசித்த அதேயளவு தலைவர் பிரபாகரனையும் விடுதலை புலிகள் உளமார நேசித்தார்கள்.

காரணம் அந்த ஒற்றை மனிதனின் நேர்மை,இலட்சிய உறுதி,தியாகம், தலைமைத்துவ பண்பு என்பவைகளால் ஆன போராட்ட வாழ்வை அவர்கள் தம் கண்முன்னே தினமும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

அதனாலேயே கரும்புலிகள் தாக்குதலுக்கு முன்பும் சிரித்த முகத்துடன் அவர்களால் செல்லமுடிந்தது. மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பும் கூட ‘அண்ணை பத்திரம்’ என்ற வார்த்தைகளைத்தான் உச்சரித்தன.

“The moral is to the physical as three to one”

– Napoleon Bonaparte

மற்றைய Force Multiplier காரணிகள் 

விடுதலை புலிகளின் Intelligence,deception, Military Tactics, Military strategy  என்பவை. இவைகளை பற்றி இந்த பதிவின் முன்னைய பகுதியிலே விலாவரியாக விவரித்திருக்கிறேன்.

அதே நேரம் ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு இருந்த நிலப்பரப்பின் அம்சம் வெட்ட வெளியாக (Geographical Features) விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும்.

இனி நேரெதிரான போரியல்முறை

முன்னைய பகுதியிலே மரபு வழி போரில் ‘நேரெதிரான’ அணுகுமுறையில் போரிடும் உத்திக்கும் ஒரு போரியல் பெயர் உண்டு என கூறியிருந்தேன்.

இனி அதைப்பற்றி.

மேற்குலகின் இராணுவ போரியல் ஆய்வாளர்கள் ஒரு போரை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகள் என சில தியரிகளை முன்வைக்கிறார்கள்.

அவற்றுள் மிக முக்கியமானதொன்று.

Material Resources, sometimes referred to as #Force Ratios.

Here victory goes to the side that has more troops, and more and better weapons. Since resources have to be brought into action, a related component is logistics, and further back in the causal chain, economic capacity of a society. Material resource theories emphasize both immediate preponderance of forces on the battlefield, and long-term application of resources for a campaign or war; over the longer time periods, these are theories of attrition, wearing down enemy resources until the larger force wins.

இந்த தியரியை எளிமையாக பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்.

எனது பல பதிவுகளிலும் குறிப்பிட்டது போல ஆளணி, ஆயுத பலம், சூட்டுவலு, தொழில்நுட்பம், படைகளுக்கான வழங்கல் கட்டுமானம் (troop strength,firepower, weapons technology and logistics) என்பவைதான் போரின் முடிவை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகள்.

இத்தகைய காரணிகளை ஒரு தரப்பு ஒப்பீட்டளவில் தனது எதிரியை விட பல மடங்கு கொண்டிருக்கும்போது, எதிரியின் வளங்கள் முற்று முழுதாக வற்றிப்போகும் வகையில் நேரெதிரான போரியல்முறையை கைக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது.

அந்த நேரெதிரான போரியல்முறை Attrition warfare என அழைக்கப்படுகிறது.

எவ்வாறு எதிரியின் வளங்கள் முற்று முழுதாக வற்றிப்போகும்’ வகையிலான தனது இலக்கை  Attrition warfare நிறைவேற்ற முயல்கிறது?

Attrition warfare  எதிரிகளையும் , அவர்களின் வளங்களையும் முற்று முழுதாக அழிப்பதற்கு பெரும் முக்கியத்துவம் தருகிறது. இங்கு எதிரிகள் என்பது அவர்களின் உயிர்களை குறிக்கிறது. இதற்கு  body count எனும் சொல்லாடலை Attrition warfare போரியல்முறை பயன்படுத்துகிறது.

தொடர்ச்சியாக எதிரியின் மீது தாக்குதல் நடத்தும்போது, இழப்புகள் தம் தரப்பில் அதிகமாக இருந்தாலும் , வளங்கள் ஒப்பீட்டளவில் தம்தரப்பில் பலமடங்கு  அதிகமாக இருப்பதால், ஒரு கட்டத்தில் எதிரியின் வளங்கள் தீர்ந்துவிடும் என்ற புள்ளியை நோக்கி நகர்வது இதன் அணுகுமுறை.

In the firepower attrition model of warfare, belligerents seek to wear down the physical forces of the enemy through favorable exchange rate. The focus is on the tactical level, since enemy casualties are the goal, and success is measured by “body counts.”

It does not matter where tactical success takes place as long as casualties are inflicted.Deployments tend to be broad and linear.Objectives are generally defined in terms of terrain. Set piece frontal attacks are the norm and both sides usually suffer high casualties.

The side with the most resources has the best chance to win.

இந்த Attrition Warfare போரியல் முறையை விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான போரை உதாரணமாக வைத்தே உங்களுக்கு விளக்குகிறேன்.

முந்தைய பகுதியில் 1999-2000 காலப்பகுதியில் இருந்த படைவலு நிலவரத்தை தந்திருந்தேன். இலங்கை இராணுவத்தின் மொத்த ஆளனி குறைந்தது 150000. விடுதலை புலிகளின் மொத்த ஆளணி அதிகபட்சம் போனால் 14000.

இந்த கணக்குப்படி Force Ratio (1:10) .

அதாவது ஒவ்வொரு விடுதலை புலி போராளிக்கும் எதிராக குறைந்தது 10 இலங்கை இராணுவம் இருக்கிறது. மேலே தந்திருக்கும் தரவுகள் அன்றைய காலகட்டத்தில் இருந்த Military Participation Ratio (MPR) வை பிரதிபலிக்கின்றன.

அது என்ன Military Participation Ratio (MPR)?

அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் மொத்த சனத்தொகை தோராயமாக 2கோடி. அதில் சிங்களவர்கள் ஒன்றரை கோடி பேர். மொத்த சனத்தொகையில் 75%.  முஸ்லீம் இன மக்கள் 19 லட்சம். மொத்த சனத்தொகையில் 9%.  இலங்கை தமிழர்கள் கிட்டத்தட்ட 22 லட்சம் பேர். மொத்த சனத்தொகையில் 11%. இந்த சனத்தொகையின் வீதத்திற்கு ஏற்பவே படைவலுவும் இருக்கும்.

இதை Military Participation Ratio (MPR) அளவுகோலை வைத்து விளங்கிகொள்ள முடியும். இந்த MPR என்பது மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு எத்தனை பேர் military இல் இணைகிறார்கள் என்ற வீதத்தை காட்டுவது. 90 களின் இறுதிபகுதிகளில் வட கிழக்கு பகுதிகளில் இருந்த இலங்கை தமிழர்களின் சனத்தொகை தோராயமாக 17 லட்சம் பேர்( 1981 இற்கு பிறகு,  2011 ஆம் ஆண்டுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை).

இவர்களில் இலங்கை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த தமிழர்கள் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்.  மீதி 12 லட்சம் தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் மற்றும்  அவர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த பிரதேசங்களிலும் இருந்தார்கள் (areas controlled by the LTTE or where the army is not present).  இந்த 12 லட்சம் பேரில் இருந்துதான் விடுதலைபுலிகள் தங்கள் இயக்கத்திற்கான ஆட்திரட்டலை ( recruitment) நடத்தவேண்டும்.

இலங்கை இராணுவம், 1995 இல் விடுதலை புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 ஆயிரம் அளவிலேயே இருக்கும் என மதிப்பிட்டிருந்தது.

(The Directorate of Military Intelligence (DMI), according to a recent publication, had estimated in 1995 that there were fourteen thousand fighting members in the Liberation Tigers) .

போரியல் அறிஞரான தராகி சிவராமும் இந்த மதிப்பீடு கிட்டத்தட்ட சரியானதே என தனது நீண்ட ஆய்வு கட்டுரையின் மூலம் நிறுவியிருந்தார். இந்த ஆய்வு கட்டுரையில் தமிழர்களின் Military participation ratio (MPR) 1.1 சதவீதம் என நிறுவியிருந்தார். அதனுடைய பொருள், புலிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் தொகையில் இருந்து  போராளிகளாக மாற்றிய வீதம் 1.1 (LTTE’s recruitment ratio as a percentage of the base population was 1.1).

அதாவது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்களில், நூறு பேருக்கு 1.1 என்ற வீத அடிப்படையில் புலிகளில் இணைந்திருக்கிறார்கள்.

இந்த 12 லட்சம் பேரிலிருந்து கிட்டத்தட்ட 14 ஆயிரம் போராளிகளைத்தான் புலிகளால் திரட்ட முடியும் என்றால் இது எதனை காட்டுகிறது? அவர்கள் தங்களது ஆட்திரட்டலை அரசியல் பரப்புரை , போராட்ட விளக்க கூட்டங்கள் மூலமே (persuasive method ) திரட்டியிருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதாவது ஒரு தனி நபர் புலிகளின் பரப்புரையில் ஈர்க்கப்பட்டு சுயவிருப்பத்தின் பேரில் இணைந்திருக்கிறார் என அர்த்தம். அதாவது volunteer soldiers.

விடுதலை புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை (Conscription) நடத்தி இந்த MPR 10 வீதத்திற்கு உயர்த்தியிருந்தால்அவர்களின் போராளிகளின் எண்ணிக்கை 120000 ஆகியிருக்கும். ஆனால் விடுதலை புலிகள் அதை செய்ய விரும்பவில்லை. 

அத்துடன் கட்டாய ஆட்சேர்ப்பு என்பதில் பல பாதக அம்சங்கள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். போராளியின் மனப்பூர்வமான பங்களிப்பு, போராட்ட குணம், தியாக சிந்தை, மன உறுதி என்பன சிதிலமடைந்து விடும்.

இதைப்போல இலங்கை இராணுவத்தை எடுத்து கொண்டால் அவர்கள் தங்களது 150000 படையினரை தங்களது ஒன்றரை கோடி சிங்கள இன மக்களிலிருந்தும், 19 லட்சம் இருந்த முஸ்லீம் இன மக்களிலும் இருந்து திரட்டினார்கள். அதாவது 16,900,000 மக்களில் இருந்து 150000 படையினர். அதாவது MPR 0.9 வீதம். இந்த MPR இன் படி விடுதலை புலிகளுக்கு எதிராக  Force Ratio (1:10) என்ற விகிதத்தில் இருந்தது.

விடுதலை புலிகள் ஒருவேளை கட்டாய ஆட்சேர்ப்பு  நடத்தி MPR ஐ 10% இற்கு உயர்த்தியிருந்தால் கூட, இலங்கை இராணுவமும் கட்டாய ஆட்சேர்ப்பை நடத்தி அந்த Force Ratio (1:10) என்பதை தக்கவைத்திருக்க முடியும். ஆக எப்படி சுற்றி வளைத்து பார்த்தாலும், சிங்களவர்கள் (75%) உம் , முஸ்லீம்கள் (9%) உம் சேர்ந்து 84% ஐ வைத்துக்கொண்டு ஒரு புலி போராளிக்கு குறைந்தது 10 இராணுவம் என்ற Force Ratio ஐ தக்கவைத்துக்கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு விடுதலை புலிகளுக்கு எதிராக Force Ratio (1:10) என்ற விகிதத்தில் இருக்கும்போதுதான், Casualty Exchange Ratio எனும் அளவுகோல் பெரும் முக்கியத்துவம் உடையதாகிறது. இதற்கு பின்னேதான் Attrition Warfare இன் இலக்கு ஒளிந்திருக்கிறது.

Casualty Exchange Ratio என்பது என்ன?

இரு தரப்புக்கும் இடையிலான போரின் உயிரிழப்பு விகித்தை இது சுட்டி காட்டுகிறது. நம்மில் ஒருவரின் உயிரிழப்பிற்கு எதிராக எதிரி தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற விகித கணக்கு. இலங்கையில் விடுதலை புலிகளின் பெரும் வெற்றிகரமான அழித்தொழிப்பு சமர்களை எடுத்து கொண்டால், Casualty Exchange Ratio என்பது 1-to-4 அல்லது 1-to-5 என்ற விகிதத்தில் இருந்தது.

உதாரணமாக முல்லைத்தீவு இராணுவ தளம் மீது விடுதலை புலிகள் நடத்திய ஓயாத அலைகள் – 1 அழித்தொழிப்பு சமரில் இலங்கை இராணுவத்தினர் குறைந்தது 1500 பேர் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகளின் தரப்பில் 330 போராளிகள் உயிரிழந்தனர். இதனது Casualty Exchange Ratio கிட்டத்தட்ட 1-to-5 . அதாவது ஒரு விடுதலை புலி போராளியின் உயிரிழப்பிற்கு பதிலாக 5 இராணுவத்தினர் உயிரிழந்தி்ருக்கிறார்கள்.

அதேபோன்று கிளிநொச்சி Military Complex மீதான விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் – 2 அழித்தொழிப்பு சமரில் இலங்கை இராணுவத்தினர் குறைந்தது 1200 பேர் கொல்லப்பட்டனர். இதில் 684 இராணுவத்தினரின் உடல்களை International Committee of the Red Cross (ICRC) மூலமாக விடுதலை புலிகள் கையளித்தனர்.

விடுதலை புலிகளின் தரப்பில் 240 போராளிகள் கொல்லப்பட்டனர். இதிலும் Casualty Exchange Ratio கிட்டத்தட்ட 1-to-5 .

அதேபோல் இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்த பல ஆபரேசன்களிலும் Casualty Exchange Ratio விடுதலை புலிகளுக்கு சாதகமாக

1-to-2 அல்லது 1-to-3 ஆகவே இருந்தது. அதாவது ஒரு விடுதலை புலி போராளியின் உயிரிழப்புக்கு  இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகவே இலங்கை இராணுவத்தினரின் உயிரிழப்புகள் இருந்தன. ஆனால் இலங்கை இராணுவத்தின் பெரும் பலம் அதனது எண்ணிக்கை பலம் ( numerical superiority).

அதனால் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக விடுதலை புலிகளுடன் போரிடும்போது, Casualty Exchange Ratio இன் படி தமது தரப்பில் அதிக இழப்புகளை சந்தித்தாலும், ஒரு கட்டத்தில் விடுதலை புலிகளின் வளங்களை ‘முழுமையாக வற்றச்செய்து விடும்’ என கணிப்பிட்டார்கள். அன்றைய படைவலு தரவுகளை வைத்தே இதை எளிமையாக உங்களுக்கு விளக்குகிறேன். அன்றைய கட்டத்தில் விடுதலை புலிகளின் போராளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 14000. இலங்கை இராணுவத்தின் ஆளணி குறைந்த பட்சம் 150000.

விடுதலை புலிகளின் மிக வெற்றிகரமான அழித்தொழிப்பு சமர்களில் இருந்த Casualty Exchange Ratio  என்பது 1-to-5 .இந்த தியரியின் படி அலசினால், 1-to-5 இன் படி இலங்கை இராணுவம் உயிரிழப்பை சந்தித்தாலும், தனது தரப்பில் 70000 இராணுவத்தை இழந்தால் விடுதலை புலிகளின் 14000 போராளிகளை அழித்துவிட முடியும். அதாவது Body counts.

அதன் பின்னரும் இலங்கை இராணுவத்தின் வசம் 80000 படையினர் இருப்பார்கள். காரணம் Casualty Exchange Ratio வை விட Force Ratio பெரிதாக இருப்பதுதான். அதனாலேயே Attrition Warfare போரியல் முறை,தனது இராணுவ வளங்களின் numerical superiority ஐ தனக்கு சாதகமாக வைத்து கொண்டு எதிரியுடன் நேருக்கு நேர் மோதி, எதிரிகளின் Body Counts ஐ அதிகரிக்க முயல்கிறது.அதற்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறது.

இன்னொன்றையும் உங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.இந்த Attrition Warfare போரியல் முறையை  உங்களுக்கு விளங்கவைப்பதற்கே போராளிகள் 14000, படையினர் 150000 என்ற எண்ணிக்கையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறேன்.

இந்த எண்ணிக்கையை நிலையான எண்ணிக்கையாக வெறும் தட்டையாக எடுத்துகொள்ளவேண்டாம். இரு தரப்பும் எத்தகைய ஆட்சேர்ப்பை நடத்தினாலும் போராளிகளுக்கும் , இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான Force Ratio பலமடங்கு இலங்கை இராணுவத்திற்கே சாதகமாக இருக்கும்.

இதற்கான அடிப்படை காரணம் சிங்கள , முஸ்லீம் இன மக்களின் மொத்த சனத்தொகையில் 84%.  இலங்கை தமிழர்கள் 11%. இதற்கேற்ப அமைந்திருந்த MPR. இந்த சனத்தொகை பரம்பல் என்பது விடுதலை புலிகளின் கைகளில் இல்லை.

இலங்கை இராணுவத்தின் திட்டமிடல்

இலங்கையில் இரண்டாம் ஈழப்போர் (1990) தொடங்கிய காலத்திலிருந்து 2009 வரை, இலங்கையின் இராணுவ திட்டமிடலாளர்கள் Attrition Warfare போரியல் முறையையே பெரிதும் பயன்படுத்தினார்கள். இந்த Attrition Warfare போரியல் முறையின் உள்ளார்ந்த இலக்கை முழுமையாக அறிந்திருந்த தலைவர் பிரபாகரன், இதை எதிர்கொள்ளும் விதமாக தமக்கு தேவையான போர் களத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.

இலங்கை இராணுவம் புலிகளின் Body counts ஐ கூட்டுவதற்காக புதிய புதிய போர் முனைகளை திறந்த போதும், தமக்கு எந்த போர் களம் இராணுவரீதியில் கேந்திர முக்கியத்துவம் உடையதோ அதை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

முக்கியத்துவம் உடைய கிட்டு பீரங்கி படையணி

இலங்கை இராணுவம் Attrition Warfare போரியல் முறையை பயன்படுத்தி, Body counts ஐ அதிகரித்து புலிகளின் வளங்களை ‘முழுமையாக வற்றச்செய்து விட’ முனைந்தார்கள் என மேலே குறிப்பிட்டிருந்தேன். இதை எதிர்கொள்ள உதவியதில் புலிகளின் கிட்டு பீரங்கி படையணி முக்கிய பங்கு வகிக்கிறது.

விடுதலை புலிகள் ஆர்ட்டிலறிகளை இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றியதை முந்தைய பகுதியில் விவரித்திருந்தேன். இதை கைப்பற்றுவதற்கு முன்பான காலகட்டங்களில், இலங்கை இராணுவத்தின் தளங்களை அழித்தொழிப்பதற்கு கணிசமான போராளிகளை இழக்கவேண்டியிருந்தது.

காரணம் கடுமையான பலப்படுத்தலுடன் இருந்த இராணுவ தளங்களின் முன்னரங்குகளை உடைத்து நுழைவதற்குள் கணிசமான இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இலங்கை இராணுவத்தின் கனரக ஆயுதங்களை போராளிகள் எதிர்கொள்ளவேண்டிய நிலை.

ஆனால் கைப்பற்றிய ஆர்ட்டிலறிகள், மோட்டார்களை கொண்டு  தனியாக பீரங்கி படையணியை அமைத்த பிறகு, இராணுவ தளங்களின் மீதோ, Command and control (C2) மீதோ ,Logistical bases மீதோ அல்லது சூட்டாதரவு நிலைகளின் மீதோ நீண்ட தொலைவில் இருந்தே மிகத் துல்லியமான concentrated artillery fire ஐ நடத்த முடிந்தது.

இவ்வாறு புலிகளின் பீரங்கி படையணி தாக்குதலை நடத்தியதனால், இராணுவ தளங்களிற்குள் உடைத்து கொண்டு செல்லும் புலிகளின் படை குறைவான இழப்புகளையே சந்தித்தது. இந்த குறைவான இழப்புகளை ஓயாத அலைகள் 1 இற்கு பின்னரான சமர்களில் தொடர்ச்சியாக காணலாம்.

அதாவது இலங்கை இராணுவம் புலிகளின் Body counts ஐ அதிகரிக்க Attrition Warfare போரியல் முறையை கையாளும்போது, விடுதலை புலிகள் தமது தரப்பிலான உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் துல்லியமான தாக்குதலை நடத்தக்கூடிய பீரங்கி படையணியை கட்டமைத்தார்கள்.

ஓயாத அலைகள் 3 ( கட்டம் 3,4) நடந்த யாழ்குடா நிலப்பரப்பில் விடுதலை புலிகளால் கைப்பற்றப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பை பற்றி முந்தைய பகுதியில் விவரித்திருந்தேன். எத்தனை இராணுவ பெருந்தளங்கள், இராணுவ முகாம்கள், மினி முகாம்கள் அழிக்கப்பட்டன என்பதை விலாவரியாக விவரித்திருந்தேன். இவைகள் அனைத்தையும் மிக குறைவான போராளிகளின் இழப்புகளுடன் கைப்பற்றியதற்கு புலிகளின் கிட்டு பீரங்கி படையணியின் பங்களிப்பு மிக முக்கிய காரணம்.

மிகப்பெரும் இராணுவ சாதனையான குடாரப்பு தரையிறக்கத்தை நடத்திய தளபதி பால்ராஜை விட்டுவிட்டு , ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றிய பிறகு அங்கு கொடியேற்ற கிட்டு பீரங்கி படையணியின் தளபதி பானுவை தலைவர் பிரபாகரன் பணித்ததற்கு ஓயாத அலைகள் 3 ( கட்டம் 3,4) இல் கிட்டு பீரங்கி படையணி ஆற்றிய பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருக்கலாம்.

க.ஜெயகாந்த்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments