×

உன்னதமான நிகழ்வு

20.04.2003 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அரசியல்துறை நடுவபப்ணியகத்தில் ஒரு உன்னதமான நிகழ்வு நடந்தேறியது. அன்றைய நாளில் ஒடுக்கு முறைக்குட்பட்ட தமிழினத்திற்கு தனது ஐம்பதுவருட வாழ்வை அர்ப்பணித்து மருத்துவப்பணியாற்றிய வைத்தியக் கலாநிதி கெங்காதரன் அவர்களையும், அவரது பொதுவாழ்விற்குத் துணை நின்ற குடும்பத்தினரையும் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்கள் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

உண்மையில் வைத்தியக் கலாநிதி கெங்காதரன் அவர்களின் மருத்துவப்பணி உன்னதமானது. விடுதலைக்குத் தீக்குளித்த எமதினத்தின் எல்லாச் சுமைகளையும் தாங்கிக்கொண்டு, அதனுள்ளயே வாழ்ந்து கொண்டு மக்களுக்கு அவர் ஆற்றிய, ஆற்றி வரும் பணி உயரியது. அவர் தனக்காகக் கிட்டிய ஆடம்பர வாழ்விற்கான வாய்ப்புகளையெல்லாம் உதறி எறிந்துவிட்டு மனிதத்துவத்துடன் தன் மக்களுக்கு பணியாற்றினார்.

இரண்டாம் ஈழப்போர் காலத்தில் யாழ் குடாநாடு சிங்களத்தின் கொடிய முற்றுகைக்குள் சிக்கியிருந்தது. கொடுமைகளின் காலமது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் முற்றுகையை உடைக்கும் முக்கியத்துவமான சமர்கள் எம்மால் நிகழ்த்தப்பட்டன. கோட்டைச்சமர், ஆ.க.வெ. யாழ்தேவி முறியடிப்புச்சமர், தவளை நடவடிக்கை என பெரும் சமர்கள் நடந்து நூற்றுக்கணக்கான போராளிகள் விழுப்புண் அடைந்தபடி தினமும் மருத்துவமனைக்கு வந்து சேருவார்கள்.
அத்தகையதொரு நெருக்கடி மிகுந்த காலத்தில் ஓய்வுபெற்ற நிலையிலும் யாழ் குடாநாட்டிலேயே தங்கியிருந்து மருத்துவக் கலாநிதி கெங்காதரன் அவர்கள் மக்களுக்கும், போராளிகளுக்கும் சேவையாற்றினார்.

மூன்றாம் ஈழப்போர் காலம் முக்கியமான திருப்பங்களின் காலம். அப்போது அவர் தனது மானுட வாழ்வில் ஏழு தசாப்தங்களை நிறைவு செய்திருந்தார். மருத்துவப் பணியில் இருந்து மட்டுமல்ல மானுட வாழ்வில் இருந்தே விடைதேடும் வயது அது. ஆனால், போரில் திருப்பம் நிகழ்ந்து போராட்டம் வன்னித் தளத்திற்கு இடம் பெயர்நத போது மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளியாக மருத்துவக் கலாநிதி கெங்காதரன் அவர்களும் தனது குடும்பத்தவரோடு வன்னிக்கு வந்து சேர்ந்தார். அபாயகரமான மருத்துவப் பிரச்சனைகளை எதிர்கொண்ட வன்னிப் பெருநிலத்தில் மகத்தான பணிபுரிந்தார். முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, மல்லாவி ஈறாக பெருநிலம் எங்கும் இடையறாத சேவையை மக்களுக்கு ஆற்றினார். தொடர்ச்சியாக இடப்பெயர்வுகளைச் சந்தித்து மாறி மாறி நோய்களால் வதையுண்ட நிலையில் மக்கள் வாழ்ந்தபோது அவர் ஆற்றிய மருத்துவப்பணி எவராலும் மறக்கப்படக்கூடியதல்ல.

மக்களுக்காக சேவையாற்றியது மட்டுமல்லாது, எப்போதும் நூற்றுக்கணக்கான போராளிகளை சராசரியாகக் கொண்டிருந்த போர்மருத்துவமனைகளிலும் தனது அறிவையும்

அனுபவத்தையும் ஊட்டி, வன்னியின் மருத்துவமனைகளிலும், போர்க்களங்களிலும் இருந்த மருத்துவப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் தலைவரின் திட்டத்திற்காக உழைத்தார்.
வைத்ததியர் கலாநிதி கெங்காதரன் அவர்கள் தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டது அறிந்ததும் ஒரு போராளி இவ்வாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

”நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது கெங்காதரன் டொக்டர்தான் அம்மாவிற்கு பிரசவம் பார்த்தது. பிறகு ஆனையிறவுச் சண்டையில் நான் காயப்பட்டு காலுடைந்து கிடந்தபோது வைத்தியம் செய்ததும் அவர்தான். இப்போது எனக்கு பிரசவமும் பார்க்கப்போகிறார்.”

இவ்வாறு வைத்தியக்கலாநிதி கெங்காதரன்அவர்களின் மருத்துவப் பணிபற்றி இந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் மக்களும், போராளிகளும் தமது நினைவுகளைப் பகிர்வர். தனது ஐம்பது வருட சேவைக்காலத்தில் அவர் அத்தனை உன்னதமான சேவைகளை ஆற்றியிருக்கிறார். தற்போதும் தன்னால் இயன்றவரை ஆற்றி வருகிறார். அவரது ஐம்பதுவருட சேவைக்கால நிறைவு நாளில் சில பொழுதுகள் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவித்ததை எண்ணி தமிழீழ தேசமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் பெருமகிழ்வு அடைகிறது. அவர் இனியும் நலமோடு வாழ வாழ்த்துகிறது.

உன்னதமான நிகழ்வு

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments