×

எம்மைப் பற்றி

ஒரு நாட்டை அழிக்கப் படைகள் தேவையில்லை. அதன் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்தால் போதும். அந்த மக்கள் தாமாகவே பிறருக்கு அடிமை ஆகி விடுவார்கள்.

அத்தகைய நிலை எப்போதும் வரக்கூடாது என்பதற்காகவே அகவாழ்க்கையை இலக்கியமாகவும், புற வாழ்க்கையை கோட்டை கட்டி போர் பயிற்சி பெறும் வீர வாழ்க்கையாகவும் தமிழர்கள்  பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைத்துக்கொண்டார்கள். பண்பாட்டைப் போற்றிக் காக்கும் இசையும் நாடகமும் சேர்த்து முத்தமிழாக வளர்த்தார்கள்.

இன்றைய தமிழர் வரலாறு அழிவின் விளிம்பில் இருக்கிறதே என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். உடல்நலம் குறைந்தால், தக்க மருந்தும் சத்துணவும் கொடுத்து தேற்றுவது போல, ஏற்றமான வாழ்விலிருந்து தாழ்ந்த தமிழனை மீண்டும் உலக அரங்கில் உயர்த்துவதற்கு பழந்தமிழரின் வரலாற்று ஏணி துணை புரிய காத்திருக்கிறது. தமிழனை விழிப்படையச் செய்வதற்கான வரலாற்று விடிவெள்ளிச் சான்றுகள் சிலவற்றை நாம் அறிவது நலம். அதனால்தான் தமிழர்கள் வரலாற்றை தமிழரின் தனிச் சொத்து என்கிறோம்.

தமிழ் இனத்தை உயர்ந்த பண்பாடு உடைய இனமாகவே கட்டிக் காப்பதற்கு பல மன்னர்கள் தன் முதல் கடமையாக எல்லோருக்கும் கல்வியை அளித்தார்கள். இலக்கியம் பண்பாட்டைக் காத்து, இசைத்தமிழ் அனைத்து உயிர்களையும் கவர்ந்து, நாடக தமிழ் பிற மொழியாளர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை புலப்படுத்தியது.

தமிழீழத்தின் மிகவும் பொக்கிசமான கட்டிடக்கலை மற்றும் தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றின் மிக மதிப்புமிக்க ஆவணங்கள் உடைமைகளைக் கொண்டிருந்த யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு 40  ஆண்டுகள் ஆகின்றன. தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் சிங்கள இனவாதத்தால் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

தென்னாசியாவிலேயே மூன்றாவது பெரிய நூலகமாக சிறந்து விளங்கிய இந் நூலகம், ஈழத்தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியமிக்க மருத்துவக் குறிப்புகள், ஓலைச்சுவடிகள் போன்ற 97 ஆயிரத்திற்கும் மேலான விலை மதிக்க முடியாத பொக்கிச நூல்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. தமிழர் வரலாற்றின் அடையாளாச் சின்னமாக விளங்கிய யாழ் பொது நூலகம் 31 மே 1981 நள்ளிரவு 10 மணியளவில் தீ மூட்டப்பட்டது.

சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட இந்த கொடிய வன்செயல் தமிழர்களின் அடையாளங்கள், கலாச்சார அழிப்பாக மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாகவும் அமைகிறது.

அந்த வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு உயர்வு நல்கும் நன்னாளாக மலரும் என எதிர்பார்க்கலாம். எனவே, தமிழா! “உன் வரலாற்றைத் திருப்பிப் பார், உலகம் உன்னைத் திரும்பிப் பார்த்துப் பாராட்டும்.”

வரலாற்றை அறிவோம்!
இனத்தைக் காப்போம்!

இலச்சினை

தமிழ் பண்டைய பாரம்பரிய மொழி அதனை உலகத்திற்கு அடையாளப்படுத்தியது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அனைவருடைய வாழ்வுக்குமான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உள்ளது.

உலகமெங்கும்  வாழும் 77 மில்லியன் தமிழர்களையும் ஒன்றிணைப்பது தமிழ்மொழி அம்மொழி “அ” என்ற எழுத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.  அதே போல் எமக்கும் இந்த வலைத்தளம் “அ” போன்று ஆரம்ப புள்ளியாக காணப்படுகிறது.

அறிவு என்பது எமக்கான அடித்தளம் இந்த இலட்சனையை பார்த்தால் எமக்கு தோன்றுவது உலகப்பொதுமறையை ஒரு நூலினுள்  உள்ளடக்குவது போன்று தான் எங்களுடைய வரலாறுகள்,கலாச்சாரங்கள், பண்பாடுகளை பாதுகாக்க நாம் புரட்சி செய்யவேண்டும் என்பதை சிவப்பு கோடு குறிக்கின்றது யாழ் பொது நூலகம் தமிழரின் கல்விக்கான ஓர் அங்கமாக இருந்தது அதனை 1981 ல் நெருப்பால் அழித்தார்கள்.

இது ஒரு இன அழிப்பு. இதனை நாம் ஒரு போதும் மறக்க கூடாது, அதே நேரம் நாம் எங்களுடைய அடையாளங்களையும், எங்களுடைய தியாகங்களையும், எங்களுடைய இலக்கினையும் இந்த மெய்நிகர் நூலகத்தின் ஊடாக எங்களுடைய அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வோம். எங்களுடைய இலட்சணைக்குரிய நிறங்களாக நாம் தேர்ந்தெடுத்தவை எமது தாய்நாடு, மண்ணின்செழுமை, இயற்கை, மற்றும் தமிழரின் கலாச்சாரங்கள், பண்பாடுகளை குறித்து நிற்கின்றன.