திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை செய்தனர். இதில் அனைவரும் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மேன்காமம், கங்குவெளி, மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களிலிருந்து இராணுவத்தின் அச்சுறுத்தல், படுகொலை சம்பவம் அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்புத் தேடி அகதிகளாக வந்தவர்களாவர்.
மன்னார் மாவட்டத்தில் மாந்தைமேற்குப் பிரதேசசெயலர் பிரிவில் அடம்பன் கிராமம் அமைந்துள்ள விவசாயக் கிராமமாகும். கிராமத்தில் வசித்து வருகின்ற மக்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்திற்கு அருகேயமைந்துள்ள தள்ளாடி இராணுவ முகாமினால் பல சொல்லொணாத் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
12.10.1986 அன்று அதிகாலை 4மணிக்கு தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினர் மாளிகைத்திடல் கிராமத்தினூடாக வந்து அடம்பன் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். பின்னர் அடம்பன் கிராமத்தில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்களைச் சுட்டுப் படுகொலை செய்ததுடன், அடம்பன் சந்தியிலுள்ள கடைகளையும் எரித்தனர். அதிகாலை 5மணிக்கு கிராமத்தினுள் நுழைந்த இராணுவத்தினர் மு.ப. 11மணிவரை அடம்பன் கிராமத்தில் தாக்குதலை நடத்திவிட்டு இறந்தவர்களின் சடலங்களை வீதிகளிலும், வயல்களிலும் வீசிவிட்டு இராணுவ வாகனங்களில் தள்ளாடி இராணுவ முகாமிற்குச் சென்றனர்.
இச்சம்பவத்தில் இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பல வியாபார நிலையங்கள், கடைகள் என்பனவும் எரிக்கப்பட்டன.
கதிரன் சௌந்தரராஜன்:
1986 ஆம் ஆண்டு தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து வெளிக்கிட்டு வந்த இராணுவத்தினர். திருக்கேதீஸ்வரம் வந்து அதன்வழியாக மாளிகைத்திடல் வந்து அதனூடாக தாமரைக்குளம் வரை வந்து தியாகு மற்றும் கோபாலு என்ற குடும்பஸ்தர்கள் இருவரையும் சுட்டுக் கிணற்றுக்குள் போட்டனர். பின்னர் அங்கிருந்து அடம்பன் வந்த இராணுவத்தினர் அக்கிராமத்தைச் சேர்ந்த நோபோட் என்ற பத்தொன்பது வயதுடைய ஒருவரையும் சீலன் என்ற பதினாறு வயது இளைஞனையும் பசுமை என்பவரையும் சுட்டுக் கொன்றார்கள். அந்தவேளை அடம்பன் கடை வீதிவழியால் வந்த இராணுவத்தினர் முத்துவேல் என்ற இளைஞனையும் அந்தோனிச்சாமி என்ற இளம் குடும்பஸ்தரையும் சிறி என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் வாழ் நெல் வியாபாரியையும் பிடித்துச் சென்று நெடுங்கண்டல் கோயிலடியில் சுட்டுப் போட்டனர். அதன் பின்னர் அவ்வீதி வழியால் வநத் இராணுவத்தினர் 22 வயதுடைய மனோகரன் என்பவரையும் பத்தொன்பது வயது ஜெகதீஸ்வரன் என்பவரையும் மாந்தையைச் சேர்ந்த நெல்லுக்கடை உரிமையாளரான உதயன் என்பவரையும் உலக்கையால் அடித்து சாகாத நிலையில் அடம்பன் கடற்கரையிற் போட்டுச் சசுட்டிருந்தார்கள். இவ்வாறு சுடப்பட்ட அனைவரினதும் கழுத்துகளில் நஞ்சைக் கட்டி உழவு இயந்திரத்தில் ஏற்றி உள்ளித்தாழ்வுப் பகுதியால் தள்ளாடி முகாமிற்கு ஏற்றிச் சென்றார்கள். பின்னர் சடலங்கள் அனைத்தும் அடையாளங்காண முடியாத நிலையில் இருந்ததால் யாரும் சடலங்களை கையேற்க முன்வராத நிலையில் இராணுவத்தினரே ரயர்களைப் போட்டு எரித்தார்கள்.
இந்தச் சம்பவத்தில் பதினாறு பேர் வரை இறந்திருந்தார்கள். இச்சம்பவத்தின்போது எந்தவித வயது வேறுபாடின்றி அறுபது வயது முதியவர்களிலிருந்து இருபது வயது இளைஞர்கள் வரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தள்ளாடியிலும், உயிலங்குளத்திலும் இராணுவ முகாம்கள் இருப்பதனால், இராணுவத்தினரின் தாக்குதல் நேரங்களில் வேறு பகுதிகளிற்குப் போகமுடியாத நிலை ஏற்படும். அப்படி வெளியேறினால் காயப்படவோ அல்லது இறக்கவோ நேரிடும். இதேபோன்று தான் ஆண்டான்குள மக்களுக்கும் பாதிப்புக்கள் இருக்கிறது. இந்தத் தள்ளாடி இராணுவ முகாமால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் தள்ளாடி முகாமிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கிற நாங்களாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் எறிகணைத் தாக்குதலையும் உலங்குவானூர்த்தித் தாக்குதலையும் இம்முகாம் இராணுவத்தினர் மேற்கொள்வார்கள்.
12.10.1986 அடம்பன் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.