
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு தனது உற்ற துணையான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்குத் தோள் கொடுத்து வலிமையோடு ஆதரவு சக்தியாக நின்ற அடேல் பாலசிங்கம் அம்மையாரிற்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்!
இவர் ஆத்திரேலியாவின், விக்டோரியாவில் உள்ள வாரகுலில் 30 சனவரி 1950 இல் பிறந்தார். தொழில்முறை செவிலியராக பணிபுரிந்த இவர் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தபோது அங்கு 1978 இல் தமிழீழத்தில் பிறந்த பிரித்தானிய குடிமகனான அன்ரன் பாலசிங்கம் அவர்களைச் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். தேசத்தின் குரல் பாலசிங்கம் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமை இராசதந்திரியாகவும் அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவும் போராட்டத்தில் பல பணிகள் ஆற்றியபோது தமிழர்க்கான நியாயங்களை எடுத்துரைத்து வந்தார்.
அடேல் பாலசிங்கம் தனது கணவருடன் தமிழ்நாட்டின் சென்னைக்குச் சென்று பின்னர் இலங்கை உள்நாட்டுப் போரின் ஆரம்ப கட்டங்களில் ஈழத்திற்குச் சென்று, போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகப் பெண்களின் நலனுக்காகவும் பாடுபட்டார்.
பின்னர் 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு பேச்சுவார்த்தை குழுக்களுடன் பல சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுங்களின் ஒரு பகுதியாக பங்கேற்றார். “விமன் ஃபைட்டர்ஸ் ஆஃப் லிபரேஷன் டைகர்ஸ்” (1993) மற்றும் அரை சுயசரிதையான “தி வில் டு ஃப்ரீடம்” உள்ளிட்ட பல புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்’ (women fighters of liberation Tigers) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் விளக்குகின்றது.
‘சுதந்திர வேட்கை’ ( The Will to Freedom) என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்து சீதண முறைமை பண்டைய தாய்வழிச் சொத்துடமை உறவு முறையுடன் தொடர்பு உடையது என்பதை நிறுவும் ஆய்வாக இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain) என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அடேல் பாலசிங்கம் ( அன்ரி) எழுதிய சுதந்திர வேட்கை என்னும் நூலில் இருந்து: முதன்முதலில் 1978ல் இலங்கை தீவைச் சேர்ந்த ஆன்டன் பாலசிங்கம் என்ற தமிழரை நான் திருமணம் செய்தபோது, ஒரு இனத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொண்டேன். தமிழர்களுடைய வீரம், தீரம், வாழ்க்கை முறை, கலாசாரம், உலகிலேயே தொன்மையான மரபு. இப்படி எண்ணற்ற விஷயங்களை அறிய எங்கள் காதல் காரணமாக இருந்தது. அப்போது எனக்கு 23 வயது. எனது அனுபவத்தில் நான் கண்டிராத பல புதிய அனுபவங்களை யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன். தினம்தினம் குண்டுமழை பொழிய, போர் பதற்றம் நிறைந்த அந்தப் பகுதியில் நான் மட்டுமே அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருந்தேன். என்னுடைய வாழ்நாளில் தமிழர்கள் குறித்து நான் பெருமைப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. தமிழர்களின் சுதந்திரத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியை நான் நேரில் உணர்ந்தவள் என்ற முறையில் சொல்கிறேன்.
முதல் காரணம் தங்களையே உரமாக்கி தமிழர்கள் விடுதலைக்காக இயக்கத்தை வளர்த்த தம்பிமார்களின் தியாகம். இதுதான் புலிகள் இயக்கத்தின் அடிநாதம். இரண்டாவது ஒரு விடுதலைப் போராட் டத்தில் அந்நிய நாட்டைச் சேர்ந்த என்னைத் தமிழர்கள் முழுமையாக நம்பினார்கள் மரியாதை செலுத்தினார்கள். எந்தச் சூழ்நிலையிலும் என்னை அவர்கள் அந்நியனாகக் கருதியது கிடையாது. எனக்கு ஒரு தமிழச்சி அங்கே தோழியாகக் கிடைத்தாள். அவள் என்னை ‘வெள்ளைத் தமிழச்சி’ என்றுதான் அன்போடு அழைப்பாள். நான் தமிழச்சி என்று அழைக்கப்பட்டது என் மூச்சு நின்று போகின்ற நிமிடம் வரையில் எனக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். வெள்ளைப் புலிமகள். தமிழச்சி. அடேல் பாலசிங்கம்.
இவரது கணவரும் ஈழத் தமிழரின் பெருமதிப்பிற்குரிய மதியுரைஞர் பாலா அண்ணா 2006 திசம்பர் 14 ஆம் நாள் இறந்த பின்பு சிறகிழந்த பறவையாக வெளி உலகிலிருந்தும் தமிழரிடமிருந்தோம் விலகி தனிமையில் தன் உலகைச் சுருக்கி வாடி வாழுகின்றார்! மறந்து போவது மனிதர்கள் குணம்! ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது வலிமையான எழுத்துகளூடாக ஆவணப்படுத்திய அம்மையார் இன்னமும் நிறையவே எழுத வேண்டும்!
அவரை அரவணைத்து போற்றி மென்மேலும் எம்மோடு பயணிக்கச் செய்யும் பெரும்பணி தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு!
வாழ்த்துகள் தாயே!