1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் அதன் அன்றைய இயக்குனராக இருந்த இரா.நாகசாமி அவர்கள் வெளியிட்ட தனது ‘மாமல்லை’ எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார், ‘பல்லவர்கள் யார் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. வட இந்தியாவில் இருந்த பஹலவர்களே, பல்லவர்கள் என்று ஒரு சாராரும்; மணிபல்லவம் என்ற தீவிலிருந்து வந்தவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் “கி.பி. முதல் இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் தட்சிணப் பகுதியில் சாதவாகனர்கள் என்ற மன்னர்கள் ஆண்டார்கள்; அவர்களுடைய பிரதிநிதிகளாகப் பல்லவர்கள் முதலில் இப்பகுதிக்கு வந்து, பிறகு தனியாட்சியை ஏற்படுத்தினார்கள்” என்று கருதுகின்றனர். இதற்குச் சான்றாகக் காஞ்சிபுரத்திலும், தெற்கே கடலூர் வரையிலும் சாதவாக மன்னர்களுடைய காசுகள் கிடைத்திருக்கின்றன என அவர் கூறுவர். முற்காலப் பல்லவர்களுடைய செப்பேடுகள் எல்லாம் பாகத(பிராகிருதம்) மொழியில் உள்ளன. தெலுங்கு, கன்னடப் பகுதிகளிலேயே இவை இதுகாறும் கிடைத்துள்ளன. பகாப்பிடுகு போன்ற பெரும்பிடுகு, இவர்களுடைய பட்டங்கள் தெலுங்கு கன்னடப் பகுதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன என்றும் கருதுவர். பல்லவர்கள் தமிழ்நாட்டு மக்களே. சங்க காலத்தில் ஆண்ட திரையர் வழிவந்தவர்களே என்று மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் பின் வரும் காரணங்களைக் குறிப்பர்.
“திரையர்களுக்குத் தொண்டைமான் என்ற பெயருண்டு. பல்லவர்களுக்கும் தொண்டைமான் என்ற பெயர் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் எடுத்தாளப்படுவதைக் காண்கிறோம். தொண்டைமான் இளந்திரையனும், வேங்கடத்தை ஆண்ட புல்லி என்பவனும் நெருங்கிய உறவினர்கள். புல்லி என்பவன் கள்வர் பெருமகன் என்று சங்க நூல்கள் குறிக்கும். இன்றும் கள்ளர் குலப் பெருமக்கள் தங்களைத் தொண்டைமான்கள் என்று அழைத்துக் கொள்வதைக் காணலாம். பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற பட்டம் சிறப்பாகக் குறிக்கப்படும். கள்ளர் குலப் பெருமக்களுக்கும் காடுவெட்டிகள் என்ற பெயர் இன்றும் உள்ளதைக் காண்கிறோம். எனவே பல்லவர்க்கும் கள்ளர் குலத்துக்கும் உள்ள தொடர்பு புலனாகும் என்பர்.
பல்லவர்கள் பிராகிருதம், தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் உபயோகித்தனர். அது அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப அமைந்ததே. தமிழ் வேந்தர்களின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும், சமஸ்கிருதத்தை உபயோகித்து இருக்கிறார்கள் அல்லவா? தெலுங்கு மன்னர்களாகிய விஜய நகரப் பேரரசர்கள், தமிழ் மொழியில் ஏராளமான கல்வெட்டுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள் அல்லவா! இவை அனைத்தும் அன்று நிலவிய சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்தவையே. எனவே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் வடமொழியை உபயோகித்திருக்கின்றனர் என்ற காரணத்தால் தமிழ் மக்கள் அல்ல என்று கூறுவது பொருத்தமல்ல. உண்மையில் பல்லவர்களது ஆட்சியில் தமிழ் மொழியே சிறந்த வளப்பம் பெற்றது என்பது கண்கூடு. சிறந்த சமண, பௌத்தக் காப்பியங்களும், தேவார திவ்யபிரபந்தங்களும் அக்காலத்தில்தான் தோன்றின.
அவர்களுடைய பல கல்வெட்டுகளில் தூய தமிழ்பாக்கள் உள்ளதைக் காண்கிறோம். எனவே தமிழகத்தில் ஆண்ட திரையர்களே பல்லவர்கள் ஆவர்” என்று கூறுவர். எது எப்படியிருப்பினும், பல்லவர்கள் ஆளத்தொடங்கியது காஞ்சியிலிருந்துதான் என்பது வெளிப்படை. இவர்கள் தங்களுடைய வலிமையினால் தெலுங்கு கன்னடப் பகுதிகளில் பெருபகுதியைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். அங்கு ஆண்ட அரசர்களின் பெண்களை மணந்தனர். எனவே தெலுங்கு-கன்னடப் பகுதிகளுக்கும், தமிழ் நாட்டுக்கும், ஒரு பெரும் இணைப்பை ஏற்படுத்தியவர்கள் பல்லவர்கள் என்பது தெளிவாகும்’.