×

தமிழீழ வைப்பகம்

தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம்.

பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின.

தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம்.

மேதகு வே.பிரபாகரன்,
தேசியத்தலைவர்

தமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும்.

எந்தவொரு தேசத்தைப் பொறுத்த வரையிலும் அங்குள்ள வங்கிகளில் உள்ள வாடிக்கையாளரின் வைப்புக்களிற்கு அந்நாட்டு அரசுகளே உத்தரவாதமளிக்கின்றன. அது போலவே தமிழீழ வைப்பகத்தின் வழமைதாரர்களது வைப்புக்களிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது.

1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம்.

திரு. ம.வீரத்தேவன்,
மேலாண்மைப் பணிப்பாளர்,

தமிழீழ வைப்பகத்தின் கிளைகள்

கிளைகள் ஆரம்ப நாள்
யாழ்ப்பாணம் 23-05-1994
கிளிநொச்சி 05-06-1995
நெல்லியடி 14-09-1995
முல்லைத்தீவு 14-05-1996

ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள்
மாங்குளம் 07-07-1997
விசுவமடு 01-06-2001
புளியங்குளம் 24-07-2002
பளை 14-03-2003
முழங்காவில் 14-01-2004

பணிகள்

நிலையான வைப்புகள் Fixed Deposits
தேட்ட வைப்புகள் Savings Deposits
நடைமுறைக் கணக்குகள் Current Accounts
தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates
ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits
வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange
கடன்கள் Loans
மேலதிக வரைவுகள் Overdrafts
நகையடைவு Pawn Broking
காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities
வாடகைக் கொள்வனவு Hire Purchase
நிலையான கட்டளைகள் Standing Orders
பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service

நிலையான வைப்புத்திட்டங்கள்

Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 08.50 %
12 மாத நிலையான வைப்பு 08.00 %
06 மாத நிலையான வைப்பு 07.00 %
03 மாத நிலையான வைப்பு 06.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %

வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தேட்ட வைப்புத்திட்டங்கள்
Savings Deposit Schemes

தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம்
வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50%
நல்லைத் தேட்டம் 06.00%
நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50%
சிறார் உண்டியல் திட்டம் 06.50%
ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
அமுதம் சிறார் தேட்டம் 06.50%
பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50%

கடன் திட்டங்கள்
Loan Schemes

கடன் திட்டங்கள் வட்டி வீதம்
நகையடைவுக் கடன் திட்டம் 18.00%
வாணிபக் கடன் திட்டம் 16.00%
மேம்பாட்டுக் கடன் திட்டம்
வேளாண்மைக் கடன் திட்டம் 15.00%
கடற்றொழில் கடன் திட்டம் 15.00%
கைத்தொழில் கடன் திட்டம் 15.00%
சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00%
சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00%
கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%

(Based on the data retrieved on Jan 08 2008 from http://www.bankoftamileelam.net)

தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்!
இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகம்’ திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை. இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது. இந்த வங்கி 1994 ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத்தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

36 வயதாகும் வீரத்தேவன, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார். தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும். இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது.

“சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் வீரத்தேவன். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும் இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர்.

2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன். தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன்.

தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன. தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைதாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர்.

தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை. தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது.

சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை. இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம்… அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்… “யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன்.

முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும்

102. Tamileela Bank – 01 copy

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments