×

சமரும் மருத்துவமும் -தூயவன்-

அருகிலிருப்பவற்றையே அவதானிக்க முடியாத அந்தகார இருள். அதற்கு வலுசேர்ப்பதற்காக வானத்து நட்சத்திர ஒளிவருகைக்குத் தடைவிதிக்கும் மழைமேகங்கள். அவைதெளிக்கும் நன்னீர்த்துளிகள் உடலைக் குளிர்விக்கும் நேரம் தங்கள் பாதம் பதியும் அன்றி மூச்சுவிடும் ஓசையோ அவர்கள் செவிகளையே சேரக்கூடாத அவதானத்துடன் கரும்புலிகள் அணியொன்று ஆனையிறவுத்தளத்தை ஊடறுத்துச் செல்கின்றது. அவர்களின் இதய ஓசை மட்டுமே அவரவர் செவிப்பறையை அதிர்விக்கின்றது. தங்கள் சிறு அவதானமின்மையும் எதிரியை உசாரடையச் செய்துவிடலாம். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது இவர்களுக்கு மட்டுமன்று இவர்களால் பெற்றுக் கொடுக்கப்பட இருக்கும் வெற்றித் தேவதைக்கும் என்பது அனுபவங்களின் பாடம்.

மேற்படி எண்ணங்களால் சூழப்பட்ட வண்ணம் அவ்வணி நகர்கின்றது. அப்பொழுது அவர்களில் ஒருவர் காலில் பாம்பு ஒன்று தன் பல்வரிசையைப் பதிக்கின்றது. ‘பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர்.’ ஆனால் இவர்களிற்குப் பயம் மறந்து பல காலமாகிவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட ஆபத்துக்களை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில் இலகுவானதே. இதற்கமைய பாம்பினால் கடியுண்டவர் களமருத்துவர் ஒருவருடன் இணைந்து இருவருமாகப் பற்றையொன்றினுள் புகுந்து பதுங்கிப் பாதுகாப்பாகத் தம்மை உரு மறைத்துக் கொள்கின்றனர்.

தரைவாழ் பாம்பினங்களில் 70வீதமானவை நஞ்சற்றவை. எனவே கடித்த பாம்பு ஆபத்தற்றதாக  இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். ஆயினும் அதனை உறுதிப் படுத்தல் வேண்டும். நஞ்சினால் நரம்பு மண்டலம் தாக்கப்படவில்லை என்பதனை மேலெழுந்த வாரியாக உறுதி செய்யலாம். குருதியானது பத்து நிமிடமளவில் உறைவதனை அவதானிப்பதன் மூலமே குருதியிழையமும் தாக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்யலாம். இதனைச் செய்வதற்கு வெளிச்சம் வேண்டும். எதிரியின் குகையினுள் ஏற்படுத்தப்படும் சிறு வெளிச்சமும் மலைமேல் விளக்காகும் கற்பனை கடந்த ஆபத்துக்களை கண்ணெதிரே கொண்டு வரும். எனினும் செயற்பட்டேயாக வேண்டும். ஒருவாறு மெல்லிய ஒளிக்கதிரின் உதவியுடன் நாளமொன்றிலிருந்து வெளியெடுக்கப்பட்ட குருதியானது உறையவிடப்படுகின்றது. கடித்த பாம்பு நஞ்சற்றது என்பது உறுதி செய்யப்படுகின்றது மேற்படி கரும்புலியணியின் பலம் மீளவும் உறுதிசெய்யப்படுகின்றது. இதனால் இவ்வணி தனது தாக்குதல் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றி இழப்புக்கள் எதுவுமின்றி மீள்கிறது. ஓயாத அலைகள் -2 இன் வெற்றி எமதாகின்றது.

01.02.1998 அதிகாலை அம்மருத்துவ முகாம் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. முதல் நாள் இரவு கிளிநொச்சி இராணுவத்தளம் மீதான வலிந்த தாக்குதலின் போது காயமுற்றவர்களுக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைந்து வரும் வாகனங்களில் இருந்து இறக்கப்படுபவர்களுக்கு முதலுதவியழித்தல், சிறுசிறு சத்திரசிகிச்சைகள் செய்தல், குருதி திரவ ஊடகம் ஏற்றுதல், அவர்களை உடனுக்குடன் இடம் மாற்றுதல் போன்ற பல்வேறுபணிகள் வேகமாக இடம்பெற்ற வண்ணமுள்ளன. அப்போது வானில் வட்டமடிக்கும் கிபீர் குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் விட்டுவிட்டு தரையையும் வானையும் அதிர்விக்கின்றது. இம்முகாம் தாக்கப்படலாம் என்ற ஐயம் எழுகிறது. உடனேயே எல்லோரும் காயமடைந்தவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் நிலக்கீழ் பதுங்குகுழியினுள் கொண்டு செல்லவும் முயற்சிக்கின்றனர். அதற்குப் போதிய அவகாசம் இல்லாமலேயே மருத்துவ முகாம் வான் தாக்குதலுக்குள்ளாகின்றது. இதன் போது பூநகரி வெற்றித் தாக்குதல் முதல் இன்று வரையான சமர்களில் பல போராளிகளின் உயிர் காத்த இராணுவ மருத்துவர்களான மேஜர் சுசில், மேஜர் ரோகினி மற்றும் களமருத்து பொறுப்பாளர்களான மேஜர் திவாகர், மேஜர் எஸ்தர் உட்பட 43 பேர் வீரச்சாவடைகின்றனர். மேற்படி கசப்பான அனுபவங்கள் தொடராமல் இருப்பதற்காகத் தொடர்ந்த தாக்குதல் திட்டமிடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இது ஓயாதஅலைகள் -2 இல் வெளிப்படுத்தப்பட்டது.

ஆகாயக் கடல்வெளித் தாக்குதல், தவளைப்பாய்ச்சல் தாக்குதல் போன்ற சமர்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் காயமடைந்தனர். இவர்களைத் தன்னுள் அரவணைத்துக் காத்தது யாழ். போதனா வைத்தியசாலை, இதன்போது இங்கு பணியாற்றிய நூற்றிற்கு மேற்பட்ட மருத்துவர்களும் ஆயிரத்துக்கு அதிகமான பணியாளர்களும் தங்கள் உயிர்காக்கும் பணிக்கு சிகரம் வைத்தனர். இவ்வளம் எம் போரிடும் ஆற்றலுக்கு பெரும் வலுச் சேர்த்துக் கொண்டிருந்தது. இதனையும் இதுபோன்ற ஏனையவற்றையும் இல்லாதொழிப்பதற்கு எதிரி தன்னாலான எல்லாவற்றையும் செய்வான் என்பதில் ஐயம் இருக்கவில்லை இதற்கான மாற்றீடுகளைப் பெறுவதற்கான தலைவர் அவர்களின் திட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னரேயே செயல் வடிவம் பெறத் தொடங்கியிருந்தது. 1993இல் மணலாற்றில் நடைபெற்ற கொக்குத்தொடுவாய்த் தாக்குதலின்போது களமுனையிலிருந்து யாழ்.மருத்துவமனையினை சென்றடைவதற்குப் பல பத்துமைல் பவனிக்க வேண்டியிருந்தது. கிளாலி நீரேரியைக் கடக்கவும் சில மணிநேரம் செலவழிக்கவேண்டியிருந்தது. இதன்போது காப்பாற்றப்படக்கூடியவர்கள் எனக் கணிக்கப்பட்டவர்கள் வீரச்சாவடைந்தமை, பாதிப்பிற்குள்ளான குருதிக்கலன்கள் காலதாமதம் காரணமாக திருத்த முடியாமல் போனதால் பலர் தம் அங்கங்களை இழந்தமை, பயண இடர்பாடுகளின்போது அவர்கள் அனுபவித்த மேலதிக வேதனைகள் எனப்பல காரணிகள் எம்மனங்களை உறுத்தின. பலமாகச் சிந்திக்கவைத்தன. நாங்கள் போர்ச் சத்திரசிகிச்சை செய்வதில் கணிசமான அளவு முன்னேறுவோமாயின் மேற்படி பின்னடைவுகளை தவிர்க்கலாம் என உணர்ந்தோம்.

முல்லைச்சமரில் விழுப்புண்ணடைந்த போராளி ஒருவர் தமது எண்ணவோட்டங்களைப் பின்வருமாறு கூறினார். நாங்கள் பிரச்சனை இல்லாமல் நகர்ந்து எங்களுக்குரிய இடங்களில் நிலையெடுத்துவிட்டோம். மற்ற இடங்களும் குழப்பின மாதிரித்தெரியவில்லை. அதனால் இந்தத் தாக்குதலில் பூரணமாக வெல்வோம் அதில் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் காயமடைந்தால் என்ன செய்கிறது? முந்தியெண்டாலும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி இருந்தது. பல நூறு போராளிகள் காயமடைவர் என்பது வெளிப்படையானது. இதனால் இப்படியான மனநிலை அவர்களுக்கு ஏற்படுவது இயற்கையானதே. இத்தாக்குதல் நடைபெற்ற முதல் இரண்டு நாட்களிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதன்போது ஏற்பட்ட மருத்துவப் பளுவிற்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தோம் இதனால் மருத்துவம் தொடர்பாக எம்மவர் மத்தியில் இருந்த சந்தேகம் தீர்க்கப்பட்டது. இது அவர்களுக்கு மேலதிக உளவியல் பலத்தை கொடுத்தது. இச்சமரினைத் தொடர்ந்து சத்ஜெய, ஜெயசிக்குறுய் சமர்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவான சிறப்புத் தேர்ச்சி எம் இராணுவ மருத்துவர்களின் செயற்பாட்டில் வெளிப்பட்டது. இது எம் போரிடும் ஆற்றலின் பரிணாம வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. உதாரணமாக வேவுப்புலிகளுடன் இராணுவ மருத்துவர்களும் நகர ஆரம்பித்தனர். பல நாட்களாக எதிரியின் பிரதேசத்தினுள் தங்கிநின்று வேவுஎடுத்தல், சிறு – சிறு அதிர்ச்சியூட்டும் பதுங்கித் தாக்குதல்கள் செய்தல் இராணுவப் பொறுப்பதிகாரிகளைத் தேர்ந்து கொல்லுதல் போன்ற உபசமர்ச் செயற்பாடுகளின்போது பல போராளிகள் காயமடைவர் இவர்களை உடனடியாக எமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு கொண்டு வருவதென்பது முயற்கொம்பாகும். அவர்களின் உயிரைத் தக்க வைக்க வேண்டுமாயின் எதிரியின் தளங்களினுள் வைத்தே சிகிச்சைகள் மேற்கொள்ளல் வேண்டும். மேற்படி போராளிகளுக்கு  வனமரங்களின் மறைவில் பாதுகாப்பின்மையிலும் பாதுகாப்பை உணர்த்துதல் வேண்டும். இப்பணிக்காக சிறு சத்திரசிகிச்சைக் கூடமொன்றையே தம் தோள்களில் சுமந்தவண்ணம் காடுகளில் திரிவர் எம் இராணுவ மருத்துவர்கள். இவ்வாறான பணியில் ஈடுபட்டிருந்த வேளை 10.11.97 அன்று மேஜர் சந்திரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

சமரும் மருத்துவமும் எனக் கருத்துக்களைப் பதிக்கையில் எம் மக்களின் மகத்தான பங்களிப்பைக் குறிப்பிடல் அவசியமாகின்றது. சமர்கள் விரிவடைந்த போதிலெல்லாம் இவர்கள் காலமறிந்து, தேவையறிந்து செய்த உதவிகள் ஞாலமறிந்தவை. சொற்களினால் ஏற்படுத்தப்படும் விரிப்பு வரையறையைத் தாண்டியவை. பொருளாதாரத் தடை, மருந்துத்தடை, எனப்பல தடைகளின் பாதிப்பைத் தாண்டி தம் போராளிகளுக்காக இரத்ததானம் செய்தனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் காயமடைந்தவர்களை விரைவாக இடம்மாற்ற உதவுதல், அறுசுவை உணவுகளைப் பதமறிந்து செய்துதருதல், இரகசியப்பாதுகாப்பிற்கு ஒத்துழைத்தல், சொந்த பந்தங்களைத் துறந்தவர்கள் விழுப்புண் வேதனையில் துடிக்கையில் தாதியாய்ப் பராமரித்து, தாயாய் பாசமழை பொழிந்து அவர்தம் வேதனையைக் குறைக்க உதவியமை எனப் பட்டியல் விரிக்கலாம். இத்தனைக்கும் மேலாய் இவர் தம் சொந்தப் பாதுகாப்பை கவனத்திற் கொள்ளாமை எமை மெய்சிலிர்க்கவைத்தது. வாகனச் சாரதிகளாக வந்தவர்கள் எறிகணை மழையிலும், வான் தாக்குதலுக்கிடையேயும் தம் வாகனங்களை லாவகமாகச் செலுத்தியமை எமக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் தங்கள் உயிரை சமர்த் தேவைக்கு அர்ப்பணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

10.06.98 காலை சுதந்திரபுர கிராமம் வழமைபோலவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. திடீரென வான்பரப்பை ஆக்கிரமித்த கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் மக்கள் குடிமனைகளை துவம்சம் செய்கின்றன. ஆனையிறவு இராணுவ முகாமில் இருந்து ஏவப்பட்ட ஆட்லெறிகளும் துணையாகச் சேர்ந்து கொள்கின்றன. விளைவு பல பொதுமக்கள் உடல்கள் சின்னாபின்னமாகச் சிதம்பிக்கிடக்கின்றன. இன்னும்பலர் படுகாயமடைந்து ஈனக்குரல் எழுப்புகின்றனர். தாக்குதல் சிறிது ஓய்ந்தவுடன் மீட்புப் பணியில் பொதுமக்களும், போராளிகளும் ஈடுபடுகையில் மீண்டும் அக்கிராமம் வான், ஏறிகணைத் தாக்குதல்களினுள் சிக்கிக் கொள்கிறது. வானையும் மண்ணையும் புகைமண்டலம் இணைத்திருக்க அதனூடு மீட்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொதுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். பெருமளவில் மக்கள் காயமடைந்திருந்தனர். எல்லோருக்கும் சிகிச்சையளிக்கப் போதிய வசதி அம் மருத்துவமனையில் இருக்கவில்லை. அதனால் அவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். அவசர அவசரமாக உயிர்காத்தலுக்கான சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இவ்வாறு எதிரி பெருமெடுப்பில் எம்மக்கள் மீது திடீரெனத் தாக்குதல் தொடுக்கும் போது பெருமளவில் மக்கள் காயமடைவர். மேலும் விரைவான உறுதியான வெற்றிகள் வேண்டி இராணுவ விஞ்ஞானத்தினுள் இதுவரை இணையாத பல முறைகளில் எதிரி மீது தாக்குதல் தொடுக்கும்போது ஒருசில மணிகளினுள் பலநூறு போராளிகள் பலவகைக்  காயங்களுக்கு உள்ளாவார். இதன் பொழுது இவர்களிற்கும் உயிர்காத்தலுக்கும் முன்னுரிமை கொடுத்து சிகிச்சையழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. எங்களின் மருத்துவ மற்றும் ஏனைய வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஒவ்வொருவருக்கும் நீண்டகால நோக்கில் பூரண திருப்தி தரக்கூடிய வகையில் சிகிச்சை செய்ய முடிவதில்லை. இதனால் பொருந்தும் என்புகளில் ஒழுங்கின்மை அறுந்த நரம்புகள் சீரிய முறையில் பொருத்தப்படாமை, முகம் போன்ற பகுதிகளில் அவலட்சணம் தரும் தோற்றங்கள் காணப்படுதல் போன்ற பாதிப்புக்கள் பலரில் தொடர்கின்றன. இவ்வாறான பாதிப்புக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு துறைசார் நிபுணத்துவ உதவி தேவைப்படுகின்றது. மேற்படி செய்தியை போர்ச்சிலுவை சுமக்கும் மக்கள் சார்பில் உலகெங்கும் பரந்துவாழும் எம்மினிய உறவுகளின் கவனத்திற்கு கொண்டுவர ‘களத்தில்’ முனைகின்றது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments