கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள். 1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை 322 கரும்புலிகள் கடலிலும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் வீரச்சாவடைத்துள்ளார்கள். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர். பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் வீரச்சாவடைத்துள்ளார்கள்.
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
விடுதலைப்புலிகளின் முதல் தற்கொடைத் தாக்குதல் 1987 சூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது.
கரும்புலிகளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் பலவற்றில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு கரும்புலி மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது. டென்மார்க்கில் இருபதாவது ஆண்டு கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 24.08.2013 அன்று நடத்தப்பட்டது