×

அதிகாரம் 82 – தீ நட்பு

குறட் பாக்கள்

குறள் #811

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

பொருள்
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.

குறள் #812

உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

பொருள்
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?.

குறள் #813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

பொருள்
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.

குறள் #814

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

பொருள்
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.

குறள் #815

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.

குறள் #816

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

பொருள்
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.

குறள் #817

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

பொருள்
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

குறள் #818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

பொருள்
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.

குறள் #819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

பொருள்
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.

குறள் #820

எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

பொருள்
தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

அமரகத்து 

போர்க்களத்து

ஏதின்மை 

பகைமை

குறுகுதல் 

குறைதல்

ஓம்பல் 

தவிர்த்தல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments