×

அதிகாரம் 91 – பெண்வழிச் சேறல்

குறட் பாக்கள்

குறள் #901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

பொருள்
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

குறள் #902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

பொருள்
எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

குறள் #903

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

பொருள்
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

குறள் #904

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

பொருள்
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

குறள் #905

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

பொருள்
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

குறள் #906

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்.

பொருள்
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

குறள் #907

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

பொருள்
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.

குறள் #908

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.

பொருள்
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.

குறள் #909

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.

பொருள்
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.

குறள் #910

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

பொருள்
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

இமையார் 

தேவர்

பாடிலர் 

ஆண்மையற்றவர்

நட்டார் 

நண்பர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments