கும்மிடிப்பூண்டி அருகே ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாம் மாணவன் யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வசித்து வருபவர்கள் ஈழத்தை சேர்ந்த ரஞ்சன்- ஜெயலட்சுமி தம்பதி.இவர்களின் மகன் திவ்வியேஷ் (16), கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் பெண் க்ருடாஸ் ருசியானாவின் உலக கின்னஸ் சாதனையான டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒருநிமிடத்தில் 24 பலூன்களை உடைத்ததை முறியடிப்பதற்காக திவ்வியேஷ் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
அந்த பயிற்சியின் விளைவாக,சமீபத்தில் திவ்வியேஷ் டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக கின்னஸ் சாதனை படைத்தார்.
உலக கின்னஸ் சாதனை படைத்த திவ்வியேஷ் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த சந்தியா ஆகியோரை,ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாம் மக்கள் மற்றும் உலக வாழ் ஈழத்தமிழர்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.