எரிபொருள் வழங்கல் நடவடிக்கையின்போது காவியமான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின் வெற்றிக்கு பலமாக தேவையான எரிபொருளை அனைத்துலக கடற்பரப்பிற்கு ஊடாக முல்லைத்தீவு தளத்திற்கான வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் 02.11.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கதிர்காமரூபன் / பெத்தா, கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சல்மான் / இரும்பொறை, கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி மேஜர் குமாரவேல், கடற்கரும்புலி மேஜர் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் உட்பட கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள்.
“ஓயாத அலைகள் – 03” நடவடிக்கை மண் மீட்பு பெரும்போரில் விடுதலைப் புலிகளின் பல்வேறு படையணிகளும் தமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை அர்ப்பணிப்புடனும் ஓயாத உழைப்புடனும் ஆற்றியிருந்ததன் விளைவே “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் உலகை தமிழர் பக்கம் விழி உயர்த்திப் பார்க்க வைத்த பெருவெற்றி; இந்த வெற்றியின் பின்னால் கடற்புலிகளினதும் – கடற்கரும்புலிகளினதும் வீரம் செறிந்த பணி பரந்து கிடக்கிறது. இந்தவகையில் போர் நடவடிக்கையின் பல்வேறு பணிகளுக்கும் தேவைப்பட்ட பெருந்தொகையான எரிபொருளை அனைத்துலக கடற்பரப்பிலிருந்து முல்லைத்தீவு கடற்புலிகளின் தளத்திற்கு ஒரே தடவையில் கொண்டுவந்து சேர்க்கும் வழங்கல் பணி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வழங்கப்பட்டபோது அந்தப்பணியை கடற்கரும்புலிகள் அணி நிறைவேற்றுகின்ற செயற்பாட்டில் கடற்புலிகளினால் வடிவமைக்கப்பட்ட பழனி என்ற எண்ணைத் தாங்கி படகை கடலில் இறக்கி வழங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அனைத்துலக கடற்பரப்புக்கு சென்ற பழனி படகு எரிபொருள் தாங்கியபடி 02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்புலிகளின் தளம் நோக்கி திரும்புகின்றபோது இடையில் எதிரிகளுடன் சமர் மூளுகிறது; அது பாரிய கடற் போரரங்காக விரிகின்றது. இந்தப் போரரங்கில் கடற்கரும்புலிகள் வீரம் செறிந்த சமராடல், ஈகங்கள் நிகழ்கின்றன. இந்தப் போரரங்கில் எங்கள் விடுதலைப் போரின் வெற்றிக்கான பணிக்காக கடலில் கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கதிர்காமரூபன் அல்லது பெத்தா, கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சல்மான் அல்லது இரும்பொறை, கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி மேஜர் குமாரவேல், கடற்கரும்புலி மேஜர் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் ஆகியோர் வீரகாவியம் படைத்து மனமெல்லாம் நிறைந்த மறவர்கள் ஆகின்றனர். விடுதலைக்கு பலம் சேர்க்கும் இந்த எரிபொருள் வழங்கல் நடவடிக்கையில் காவியமான கடற்கரும்புலி – கடற்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்