வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் பதவியா செல்லும் வீதியில் அண்ணளவாக ஐந்து கி.மீற்றர் தூரத்தில் ஈட்டிமுறிஞ்சான் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களில் அனேகர் விவசாயிகளும், கூலித் தொழிலாளிகளுமாவர். இக் கிராம மக்கள் ஆரம்ப காலங்களில் விவசாயத்தின் மூலம் தன்னிறைவான வாழ்வை வாழ்ந்து வந்தனர்.
இத்தகைய சூழலில் 1970களில் மலையகத்திலிருந்து சிங்களக் குழுக்களால் கலைக்கப்பட்ட தமிழ் மக்கள் டொலர் பாம், கென் பாம், சிலோன் தியேட்டர் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். பின்னர் 1980களின் நடுப்பகுதியில் இங்கிருந்தும் இவர்களை இராணுவத்தினர் விரட்டிவிட்டு தென்பகுதிச் சிறைகளிலிருநத் ஆயுட் கைதிகளைக் கொண்டுவந்து , விரட்டிய மக்களின் வீடுகளில் குடியமர்த்தி ஆயுதங்களையும் அவர்களுக்கு வழங்கினார்கள்.
இவ்வாறு குடியேறிய சிங்களக் குழுக்கள் அயலில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்ற மக்களின் விவசாய உற்பத்திப் பொருட்கள், கால்நடைகள், வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் திருடினார்கள். பின்னர் இராணுவத்தினருடன் சேர்ந்து அங்கு வாழ்ந்து வந்த மக்களைத் தாக்கினார்கள்.
19.03.1986 அன்று இராணுவமும் சிங்களக்குழுக்களும் காடுகளுக்குள்ளால் கவசவாகனங்கள், டிராக்டர்கள் மூலம் ஈட்டிமுறிஞ்சான் கிராமத்திற்குள் பிற்பகல் 4.30 மணியளவில் நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் தங்களது கண்களிற் தென்பட்ட மக்களையெல்லாம் சுட்டதுடன், மக்கள் வாழ்ந்து வந்த வீடுகளை எரித்ததுடன், வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துச் சென்றார்கள்.
மறுநாள் 20.03.1986 அன்று அதிகாலையில் நெடுங்கேணிப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்த இராணுவமும், சிங்களக் குழுக்களும் அங்கும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், கூலி வேலைக்காக வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் என எல்லோரையும் சுட்டார்கள். இரண்டு நாள் சம்பவங்களிலும் இருபது பொதுமக்கள் உயிரிழந்தார்கள். அத்துடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இதனை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு விமானப் படையின் உலங்குவானூர்தி வானிலிருந்து தாக்குதல் நடத்தி ஒத்துழைப்பு வழங்கியது. உலங்குவானூர்தியின் தாக்குதலினால் நெடுங்கேணியிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள பெரியகுளத்திலிருந்த வீடுகளும் தீப்பற்றி எரிந்ததால், நெடுங்கேணிப் பிரதேசம் முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளித்தது. அச்சமடைந்த மக்கள் காடுகளுக்குள் சென்று தஞ்சமடைந்தனர். பின்னர் தம் உறவுகளின் உயிரற்ற உடல்கள் சிலவற்றைத் தம்முடன் எடுத்துச்சென்று காடுகளுக்குள் அடக்கம் செய்தனர். சில உடல்களை அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர்.
19,20.03.1986 அன்று ஈட்டிமுறிஞ்சான் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.