×

ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர்

ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர் பற்றிய தெளிவான விளக்கங்களை முனைவர் கு. அரசேந்திரன் அவர்களிடம் அறிய TE-Library Team விரும்பினோம். அவர் அளித்த விளக்கங்களின் சுருக்கம் இதுவாகும்.

மேலும் விளக்கு ஏற்றுவதில் ஒரு திரி, மூன்று திரி, ஐந்து திரி, ஏழுதிரி, ஒன்பது திரி ஏற்றுவது பற்றியும் – அவர் அளித்த விளக்கங்கள் இப்பகுதியில் உள்ளன.

சுடரேற்றுவது என்பது உலகத்தில் இருபது முப்பதாயிரம் ஆண்டுகள் பழக்கமாகக் கூட இருக்கலாம். “சுடர்” என்பது இறைவணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. உலகத்தில் எல்லாச் சமயமும் கடவுளை ஒளியாகக் கண்டு போற்றிவணங்கியதாக வரலாறு கூறுகிறது.

”நான் ஒளியாக இருக்கின்றேன்”என்று இயேசு சொல்கின்றார்.  ”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி” என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார். ”எல்” என்ற சொல்லுக்கு ஒளி என்பது தமிழில் பொருள். ”எல்” என்பதுதான் எல்லா  ”அல்லா” என்று ஆனதாக ஆய்வுகள் உண்டு.

”தேய்” என்ற சொல்லுக்குத் தமிழில் ஒளி என்று பொருள். ”தேய்” என்ற   சொல்லே  தேய் – தீய் – தீ என்று ஆனது. தேய் என்ற இச்சொல்லே தேயு – தேசு – தேஜ் – தேஜஸ் என்றெல்லாம் ஆனது. தெய்வம் – தே – தேவன் ஆகிய சொற்கள் தமிழ்ச் சொற்களே. தேய் என்ற சொல்லிருந்துதான் ”deity” என்ற கடவுள் குறித்த சொல் பிறந்தது.  கடவுள் உண்மையைக் குறிக்கும் “Theism” என்ற சொல்லும் கடவுள் இன்மையைக் குறிக்கும் “Atheism” என்ற சொல்லும் தமிழின் தீ வழி உருவானவையே.

ஒளியாக இருக்கும் ஒரு பரம்பொருளை – இறையை – உலகத்தின் மூலத்தை  சிற்றொளியாக, அகல்விளக்கு ஏற்றிஅல்லது சூடம் போன்றவற்றை ஏற்றி மக்கள் வணங்கினார்கள். திரிவிளக்கு ஏற்றி வணங்குவதாக இருந்தாலும்,  திருவண்ணாமலைப் பேரொளி விளக்காக இருந்தாலும் எல்லாமும் இறையின் அடையாளமான ஒளிதான்.

நாம் நம்முடைய தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு  அவர்கள் தெய்வங்களாகி விட்டார்கள் என்ற உணர்வில் விளக்கேற்றி வணக்கம் செலுத்துகிறோம். உலக வரலாற்றில் எங்குமே காணாத எம் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாளன்று விளக்கேற்றி வழிபட்ட வரலாறு தமிழர் நெஞ்சில் எரிந்து கொண்டே இருக்கிறது.

”சுடர்”என்ற சொல் ‘சுள்’என்ற வேரிலிருந்து வந்தது. ”சுள்” என்றால் சுடுதல் என்பதுபொருள். சுல்லி, சுள்ளி சுள், சுடு, சுடர், சுட்டது இதெல்லாம் வெப்பத்தைக் குறிக்கின்ற சொற்கள். இந்தச் சுடரே பொதுச்சுடர் என்பதிலும் உள்ளது.

தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தாய் மண்ணுக்காக ஈகம் செய்தலால் அந்த மாவீரர்களுக்குஏற்றப்படும் சுடர் ‘ஈகைச்சுடர்‘ என்று கொள்ளப்பட்டது. ஈகம், ஈகை என்பனவெல்லாம் தூயதமிழ்ச் சொற்கள். தியாகம் என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இவை. ஆதலால் தியாகச் சுடர் என்பதை விட ஈகைச் சுடர் என்றே நாம் சொல்லுதல் வேண்டும்.

ஒரு நாடு என்பது பல்வேறு சமயத்தவர்களும் சேர்ந்து இருக்கக்கூடிய ஒன்று.பல்வேறு வணக்கங்களை, பல்வேறுமுறைகளை பின்பற்றுபவர்கள் ஒருநாட்டில் இருப்பார்கள். சமயப் பொதுமைதான் ஒரு நாட்டிற்கு அடிப்படை. அந்தவகையில்தான் நமது தேசியத் தலைவர் காலத்தில் அது பொதுச்சுடர், ஈகைப் பொதுச்சுடர்   என்று சரியாகச் சொல்லப்பட்டுவந்தது.

குறிப்பிட்ட சமயத்தவருக்கு என்றில்லாமல் எல்லாச் சமயத்தவர்களையும் உள்ளடக்கிய சுடராக மாவீரர்களுக்கு ஏற்றப்படும் சுடர் இருப்பதால் அதனை பொதுச்சுடர் அல்லது ஈகைச்சுடர் என்று கூறலாம். மங்கலவிளக்கு என்று சொல்வதும் சரியானதே. ”மங்கலம் என்ப மனைமாட்சி” என்று வள்ளுவர் கூறினார். ”மங்கல்” என்ற சொல், மங்கலான நிறமுடைய மஞ்சளைக் குறித்தது. மங்கல் – மஞ்சள் என்றானது என்பார் பாவாணர். மஞ்சள் மங்கலமான நிகழ்ச்சிக்குரியது. இதனால்தான் மங்கலம் என்ற சொல் சிறந்த நிகழச்சியைக் குறிப்பதற்கு உரியதாகிறது.

திருமணம் போன்ற சடங்குகளுக்கு ஏற்றப்படும் விளக்கினை மங்கலவிளக்கு என்று சொல்வது பொருத்தம். திருமணம்போன்ற இடங்கள் இல்லாமல் மாவீரர் தெய்வங்களுக்கு ஏற்றும் விளக்கினை ஈகைச்சுடர் அல்லது பொதுச்சுடர் என்று குறிப்பிடுவது பொருத்தம்.

மங்கலம் மங்கள என்ற சொல்லுக்கும் விளக்கம் தருகிறேன். செதில், செதிள் போல துலக்கம், துளக்கம் போலமங்கலம் என்ற சொல்  மங்களம் என்று லகர ளகரத் திரிபில் உருவானது. இரண்டும் சரிதான். பொது நிலையில் திருமணம்போன்றவற்றிக்கு ஏற்றுவதை மங்கல விளக்கு, மங்களவிளக்கு என்று சொல்க.

பொதுச்சுடர் ஈகைச்சுடர்ஆகியவற்றை ஒரு திரியாக மூன்று, ஐந்து, ஏழு ஒன்பது  திரிகளாக ஏற்றுவது சரியான நடைமுறைகளே. கடவுள் ஒருவனாக இருக்கின்றான் பேரொளியாக,          ஓரொளியாக இருக்கிறானென்பதற்காகத்தான் ஒரேயொரு திரியைஏற்றுகிறோம்.

மூன்று உலகத்திலும் கடவுளுடைய ஆட்சி என்பது கருதி முத்திரியினை ஏற்றுகிறோம். உலகம் ஐந்து பூதங்களால் ஆனது ஆதலின் ஐம்பூதத்திற்கும் உரிய வணக்கமாக ஐந்து திரி விளக்குகளை ஏற்றுகிறோம். அடிப்படையான கோள்கள் ஏழு. இராகு கேது ஆகிய இரண்டினையும் சேர்த்து ஒன்பது கோள்களாகக் கொள்வதும் நம் மரபு. இதனாலேயே ஏழு திரியும் ஒன்பதும் திரியும் ஏற்றும் வழக்கம் நம் மரபில் உருவானது. திரி என்ற சொல் தமிழ்ச் சொல். பஞ்சினைத் திரித்து உருவாக்குவதால் அதற்குத் திரி என்பது பெயர்.

ஒரு திரி, மூன்று திரி, ஐந்து திரி, ஏழு திரி, ஒன்பது திரி என்பனவெல்லாம் நம்முடைய மனத்தின் விருப்பங்கள். எவற்றிலும் தவறில்லை; எல்லாமும் ஒன்றுதான். ஒரு பெரிய திரியை ஏற்றினால் போதும். மூன்று திரி, ஐந்து திரி, ஏழு திரி, ஒன்பது திரி ஏற்றினால், ஒரு திரி அணைந்தால் கூட அதிலிருந்து இன்னொரு திரியைஏற்றிக் கொள்ளலாம். இப்படி வசதிக்காக ஏற்றிக்கொண்டமரபுதான் பல திரி மரபுகள். தொகுதியாக திரிகள் எரிவது காண அழகாகவும் இருக்கும்.

            நன்றி

ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments