புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மாற்றிய நாள், 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார். இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் “கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார். தலைவர் பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்தார். சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல். தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல். இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.