
தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழம்.
நவம்பர் 27, 1993.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…
இன்று மாவீரர்நாள்.
எமது சுதந்திர இயக்கத்தின் சரித்திர சிற்பிகளான விடுதலை வீரர்களை நாம் நினைவுகூரும் நன்நாள்.
ஆண்டாண்டு காலமாக அடிமை விலங்கில் முடங்கிக் கிடந்த எமது தாயகத்தை வீறுகொண்டு எரியும் விடுதலைக் களமாக மாற்றிவிட்ட வீரமறவர்களை நாம் நினைவு கொள்ளும் புனிதநாள்.
எமது நாடு எமக்கே சொந்தம் என்ற உரிமைக்குரலை உலகெங்கும் முழங்கச் செய்த உன்னத தியாகிகளை நாம் எமது நெஞ்சுப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள். மாவீரர்நாள் எமது தேசத்தின் துக்கதினம் அல்ல நாம் கண்ணீர் சிந்தி கவலைகொள்ளும் சோகதினம் அல்ல; இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சி தினம் அல்ல. எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சி தினம்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது. ஆறாயிரத்துக்கும் அதிகமான இலட்சிய வேங்கைகளின் சத்தியவாக்காக இந்த விடுதலை முழக்கம் கேட்கிறது. இந்த விடுதலை முழக்கத்தில் எழுச்சிகொண்டே எமது இலட்சியப் பயணம் தொடர்கிறது. இரத்தம் சிந்தும் அரசியலாக எமது போராட்ட வரலாறு நீண்டு செல்கிறது. எமது விடுதலை இயக்கம் ஆரம்பமாகிய காலத்திலிருந்து இன்றுவரை இந்த நீண்டகால இடைவெளியில் நாம் எத்தனையோ நெருக்குதல்களையும், சோதனைகளையும், ஆபத்துக்களையும் சந்தித்த போதும் எமது அடிப்படையான அரசியல் இலட்சியத்திலிருந்து என்றுமே நாம் தளர்ந்ததும் இல்லை; தடுமாறியதும் இல்லை.
தமிழீழ தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும், தெளிவும் உண்டு. எமது நிலைப்பாட்டை எமது எதிரி மட்டுமல்ல முழு உலகமும் நன்கறியும், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தனியரசு அமைப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறுவழியில்லை எனத் தீர்மானங்கள் நிறைவேற்றி மக்களிடம் மனுப்பெற்ற கட்சிகளும், ஆயுதப் போராட்டம் மூலமே தனியாட்சி நிறுவமுடியுமென ஆர்ப்பரித்த ஆயுதக் குழுக்களும் எப்பொழுதுதோ தமது அரசியல் குறிக்கோளைக் கைவிட்டு தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைத்து நிற்கிறார்கள்.
எமது இயக்கம் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை வரித்துக்கொண்ட குறிக்கோளில் இருந்து வழி தவறியதில்லை. தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் அல்ல.; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக எந்தெந்த சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்குத் தெரியாததல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த பொழுதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விழிம்புக்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் எங்கள் கொள்கையைக் கைவிடவில்லை. ஆதிக்க சக்திகளின் ஆவேசப்புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.
தார்மீக அடிப்டையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்துக்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்து விடமுடியாது. நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கம் இருக்கும் போது நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்கவேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதிவரை போராடும் மக்கள்தான் விடுதலையை வெல்கிறார்கள்.
இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத் தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிலை நிர்ணயிக்கிறது. சர்வதேச அரசியலும் சரி, ராஜதந்திர உறவுகளும் சரி இந்த அடிப்படையில்தான் செயற்படுகிறது. இந்த நிலையில் எமது போராட்டத்தின் தார்மீக நியாயப்பட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்து விடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரவேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும்; ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்கும் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எமது பக்கம் திரும்பும். உண்மையில் எமது போராட்டம் உலகத்தின் கைகளில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது, எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது.
நீதியும், நியாயமும் எமது பக்கம் இருந்தால் மட்டும் போதாது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். போராடும் திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். தளராத உறுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எமது எதிரியான சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் பிரச்சினையை நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையில் தீர்க்க விரும்பவில்லை. பலாத்கார பிரயோகத்தின் அடிப்படையிலேயே தமிழர் பிரச்சினைக்கு முடிவுகட்ட முனைகிறது. சிங்களப் பேரினவாதத்தின் ஈவிரக்கமற்ற இராணுவப் போக்கு காரணமாக தமிழரின் இனப்பிரச்சினை நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாகத் தீர்வின்றி, முடிவின்றி இழுப்படுகின்றது. நீண்ட நெடுங்காலமாக தீர்வு கிடைக்குமென காத்திருந்த தமிழர்கள் சாவையும், அழிவையும், தாங்கொணாத துன்பத்தையும் சந்தித்ததைத் தவிர வேறொன்றும் காணவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரச்சினைக்கு சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை வழங்கப் போவதில்லை என காலங்காலமாக நாம் வலியுறுத்தி வந்த அரசியல் உண்மையை எமது மக்கள் இன்று ஆழமாக உணரத் தொடங்கியுள்ளனர்.
எமது இயக்கம் என்றுமே சமாதானப் பாதைக்கு குறுக்காக நிற்கவில்லை. சிங்கள அரசுக்கு நாம் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வழங்கினோம். திம்புவில் தொடங்கி கொழும்பு வரை பேச்சுவார்த்தையில் பங்குகொண்டோம். ஆனால் சிங்கள அரசு தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதனையும் முன்வைக்க மறுத்தது. சமரச வழியைக் கைவிட்டு போர்க் களத்தில் பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்பட்டது. 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் இரண்டாவது கட்டமாக தமிழீழப் போர் ஆரம்பமாகிய காலந்தொட்டு எமது விடுதலை இயக்கம் சமாதானத்திற்கான கதவுகளை அகலத்திறந்து வைத்தது. பேச்சுவார்த்தைக்கு இணங்கி நாம் நேசக்கரத்தை நீட்டியபொழுதெல்லாம் சிங்களப் பேரினவாதம் அதைப் பற்றிக்கொள்ள மறுத்தது.
யுத்த நிறுத்தம் செய்து பொருளாதாரத் தடைகளை நீக்கி, சமாதானத்துக்கான சூழ்நிலையை உருவாக்குமாறு நாம் மாறி மாறி விடுத்த கோரிக்கைகளையும் நிராகரித்து. சமாதானத்துக்குப் பதிலாக யுத்தத்தையும் அமைதிக்குப் பதிலாக அழிவையும் பேரினவாத அரசு எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது. இறுதியில் தமிழரின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனச் சித்தரித்துக்காட்ட முனைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இனப்பிரச்சினை இல்லவே இல்லையென பகிரங்கமாகவே பிரகடனம் செய்துள்ளது. இராணுவப் பலத்தைக் கொண்டு தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற இறுமாப்பில் சிங்கள ஆளும் வர்க்கம் சமாதானத்தின் கதவுகளை இறுக்கச் சாத்திவிட்டது. தமிழ் மண்ணை ஆக்கிரமித்து தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற குறிக்கோள் முன்பிருந்ததைவிட தீவிரப்போக்கை எடுத்தது. இந்த இராணுவவாத கடும்போக்கின் வெளிப்பாடாகவே யாழ்ப்பாண குடாநாடு மீது படையெடுப்புக்களை நடத்தவும் அரசு திட்டம் தீட்டியது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் நாம் சிங்கள போர் அரக்கனுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கத் தீர்மானித்தோம். மண்கிண்டிமலையிலும், புலோப்பளையிலும், இறுதியாகப் பூநகரியிலும் நாம் திட்டமிட்டு நிகழ்த்திய வெற்றிகரமான தாக்குதல்கள் சிங்கள இராணுவவாதத்திற்கு கொடுக்கப்பட்ட பேரடிகளாகும். இதில் பூநகரிச் சமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. போர்க்கலையில் புலிகள் இயக்கத்தின் படிநிலை வளர்ச்சியின் உயர்கட்ட பரிணாமத்தை இந்தச் சமர் எடுத்துக் காட்டுகிறது. பெரும் படையணிகளை நுட்பமாக நகர்த்தி எதிரியின் பாசறையின் பல மூலைகளை ஊடுருவிப் பெரும் கூட்டுப்படைத் தளங்களைக்கூட துரிதகதியில் அழிக்கவல்ல அபாரமான சக்தி புலிகளிடம் உண்டு என்பதை நாம் சிங்களப் பேரினவாதத்துக்கு நன்கு உணர்த்தியுள்ளோம். இனப்பிரச்சினையே இல்லாமல் போய்விட்டது என்று கூறியவர்களுக்கு இனப்பிரச்சினையின் விஸ்வரூபத்தைக் காட்டியுள்ளோம். இந்தச் சமர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப் படையினர் அழிக்கப்பட்டுள்ளனர்.
எமது தாயக மண்மீது படையெடுப்பை நடத்தலாம்; ஆக்கிரமிப்பை நிகழ்த்தலாம்; அகலக்கால் வைக்கலாம் எனக் கற்பனை செய்துவரும் இராணுவவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்கும் புலிகள் இந்தத் துணிகரத் தாக்குதல்கள் தகுந்த பாடமாக அமையுமென நினைக்கிறேன். இராணுவத் தீர்வு என்ற பாதை எத்தகைய பயங்கரமான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கொழும்பிலிருந்து ஆட்சி புரிபவர்கள் இனியாவது உணர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
சிங்களப் பேரினவாத அரசு போன்று நாம் இன்னும் சமாதானக் கதவுகளை அடைத்துவிடவில்லை. சமரசப் பாதைக்கு முட்டுக்கட்டை போடவில்லை. ஆனால், சிங்கள ஆட்சிபீடம் தனது இராணுவ அணுகுமுறையை இறுகப்பற்றிக்கொண்டு எமது மண்மீது படையெடுப்பை நிகழ்த்தினால் அல்லது எமது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடருமானால் எமது விடுதலை இயக்கம் சமாதானத்தின் கதவுகளை நிரந்தரமாவே மூடிவிடும் என்பதை நான் இங்கு தெட்டத்தெளிவாகக் கூறவிரும்புகிறேன். சிங்களப் பேரினவாதப் போக்கில் மாற்றம் ஏற்றப்படும் என நான் என்றுமே நம்பியதில்லை. அந்த மாற்றம் ஏற்படாதவரை தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை.
சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறது. அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறுவழி எதுவுமில்லை. இந்தப் பாதை வழியேதான் எமது விடுதலை இயக்கம் தனது இலட்சியப் பயணத்தை தொடகிறது. இந்தப் பாதை மிகவும் கடினமானது. கற்களும், முட்களும் நிறைந்தது. விலங்குகளும், விச ஜந்துக்களும் நிறைந்தது. ஆயினும் நாம் இந்தப் பாதை வழியே எமது பயணத்தைத் தொடர்கிறோம். எமது மாவீரர்கள் இந்தப் பாதை வழியாகவே நடந்தார்கள். எமக்கு வழிகாட்டியாக எமக்கு முன்னே சென்றார்கள். கற்களையும், முட்களையும் அகற்றிப் பாதையைச் செப்பனிட்டுத் தந்தார்கள். விலங்குகளையும், விச ஜந்துக்களையும் கொன்றொழித்தார்கள். அந்தப் பாதை வழியே விளக்கேற்றி வைத்தார்கள். எமது மாவீரர்கள் ஏற்றிவைத்த அந்தச் சுடரொளியில் தெளிவாகப் புலப்படும் அந்த சுதந்திரப் பாதை வழியாக நாம் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோமாக.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.