தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1995.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…
இன்று மாவீரர் நாள்.
எமது தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இலட்சிய வேங்கைகளை நாம் எமது இதயக் கோயிலில் நினைவுகூரும் புனித நாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.
எமது மண் மீதான எதிரியின் ஆக்கிரமிப்புப் போர் என்றுமில்லாதவாறு இன்று விஸ்வரூப பரிமாணம் பெற்றிருக்கிறது. எதிரியானவன் தனது முழு படைபலத்தையும், ஆயுத பலத்தையும் ஒன்று திரட்டி தனது முழுத் தேசிய வளத்தையும் பயன்படுத்தி யாழ்ப்பாண மண்மீது பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறான். பழமையும் பெருமையும் வாய்ந்த எமது பாரம்பரிய பூமி எதிரியின் படைபல சக்தியால் அழிக்கப்பட்டு வருகிறது. ஓயாத மழையாகப் பொழியும் எதிரியின் எறிகணை வீச்சால் யாழ்ப்பாணத்தின் முகம் சிதைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தின் பொருள் வளத்தைச் சிதைத்து, பண்பாட்டுச் சின்னங்களை அழித்து, தமிழரின் தேசிய வாழ்வைச் சீர்குலைத்து விடுவதே இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படையில் நோக்கமாகும்.
இந்தப் போர், அரசு கூறுவது போல புலிகளுக்கு எதிரான போரல்ல. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கெதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர். சிங்களப் பேரினவாதத்தின் இந்த இனப்போர் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. புலிகள் இயக்கத்தின் பிறப்பிற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது. இதனைத் தொடக்கி வைத்தவர் சந்திரிகாவின் தந்தையார். இப்பொழுது சந்திரிகாவின் அரசு இந்த இனப்போருக்கு முழு வடிவம் கொடுத்திருக்கிறது. தமிழரின் உயிரையும், உடமையையும், தமிழரின் நிலத்தையும், வளத்தையும், ஒட்டுமொத்தத்தில் தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்கத்தைக் கொண்டது இந்தப் போர்.
சமாதான முகமூடி அணிந்து சமாதானத் தீர்வில் நம்பிக்கை கொண்டவர் போல நடித்து சிங்கள மக்களையும் உலக சமூகத்தையும் ஏமாற்றி ஆட்சிபீடம் ஏறினார் சந்திரிகா. அதிகார பீடத்தில் அமர்ந்ததும் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்றினார். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வை வேண்டிய நாம் அவருக்கு நேசக்கரம் நீட்டினோம்.
சுமூகமாகப் பேச்சுக்களை நகர்த்தும் நோக்கில் போர்க் கைதிகளை விடுவித்து நல்லெண்ண சமிக்கைகளைக் காட்டினோம். இந்தப் பேச்சுக்களின் போது நாம் எவ்வித கடுமையான நிபந்தனைகளையோ சிக்கலான கோரிக்கைகளையோ விடுக்கவில்லை. தமிழ் மக்கள் மீது அநீதியான முறையில் திணிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் போக்குவரத்துத் தடைகளை நீக்கி இயல்பான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும்படியே நாம் சந்திரிகா அரசிடம் வேண்டினோம். அடிப்படை வசதிகள் இன்றி அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்பட்டு பல வருடங்களாக இடர்பட்டு வாழ்ந்த எமது மக்களின் துன்பத்தைத் துடைத்து விடும்படியே நாம் கோரினோம். ஆனால் சந்திரிகா அரசு இந்த அற்ப சலுகைகளைத்தானும் தமிழருக்கு வழங்கத் தயாராக இல்லை. ஆறு மாதங்கள் வரை அர்த்தமின்றிப் பேச்சுக்கள் இழுபட்டபொழுது நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது சந்திரிகா அரசு சமாதானத்தை விரும்பவில்லை என்பதையும் சமாதான வழிமூலம் தீர்வை விரும்பவில்லை என்பதையும் நாம் உணர்ந்து கொண்டோம். சமாதானப் பேச்சுக்களின் போது இராணுவ நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைக் கண்டபோது சந்திரிகா அரசு இராணுவத் தீர்விலேயே தீவிர அக்கறை கொண்டிருக்கிறது என்பது எமக்குத் தெளிவுறப் புலனாகியது.
பெரிய எடுப்பில் யாழ்ப்பாணம் மீது நிகழ்த்தப்படும் படையெடுப்பானது சந்திரிகா அரசின் இராணுவ, அரசியல் குறிக்கோளை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியைச் சுற்றிவளைத்து மக்களோடு சேர்த்து மண்ணையும் ஆக்கிரமித்து யாழ்ப்பாணச் சமூகத்தை “விடுதலை” செய்துவிட்டதாக உலகுக்குக் காட்டும் கபட நோக்குடன் இப்படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. ஆயினும் யாழ் நகரையும் வலிகாமப் பகுதியையும் இராணுவம் முற்றுகையிடுவதற்கு முன்னராக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து சென்ற வரலாற்று நிகழ்வானது சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்கு சாவு மணி அடித்தது. அரசின் போர் நடவடிக்கைகளையும் அதற்கு அரசு கற்பிக்கும் அபத்தமான காரணத்தையும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் ஏகமனதாக நிராகரித்து விட்டனர் என்பதையே இந்த இடம்பெயர்வு நிகழ்வு எடுத்துக்காட்டக் கூடியது. சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழ தமிழ் மக்கள் இனித் தயாராக இல்லை என்பதையும், மக்களையும் புலிகளையும் வேறுபடுத்த முடியாது என்பதையும் இந்த சனப்பெயர்வானது சிங்கள தேசத்திற்கும் உலகத்தாருக்கும் நன்கு உணர்த்தியது. எனவே யாழ்ப்பாணப் படையெடுப்பின் அரசியற் குறிக்கோளை அடைவதில் சந்திரிகா அரசு தோல்வியையே சந்தித்திருக்கிறது.
இராணுவ முற்றுகையிலிருந்தும் அதன் பின்னணியிலுள்ள அரசியற் பொறியிலிருந்தும் எமது மக்கள் பாதுகாப்பாக தப்பித்துக் கொண்டமை ஒரு புறத்தில் எமக்கு ஆறுதலைத் தந்த போதும், மறுபுறத்தில் இந்தப் பாரிய இடம்பெயர்வால் எமது மக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் இடர்களும், துயர்களும், துன்பங்களும் எமக்கு ஆழமான வேதனையைத் தருகிறது.
காலங் காலமாக வசித்த பாரம்பரிய மண்ணைத் துறந்து வீடு, காணி, சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து எமது மக்கள் எதிர்கொள்ளும் தாங்கொணாத் துன்பங்கள் எமது நெஞ்சத்தைப் பிளக்கின்றது. எனினும் இத் துன்பியல் அனுபவமும் துயரமும் நிறைந்த அவலமும் எமது இனத்தின் விடுதலை எழுச்சிக்கு எமது மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பாகவே நாம் கருதுகிறோம். ஆக்கிரமிப்பாளனுக்கு அடிபணிந்து போகாமல் சுதந்திர மனிதர்களாக சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு எத்தகைய துயரையும் எதிர்கொள்ள எமது மக்கள் துணிந்து நிற்கிறார்கள் என்பதையே இந்த இடம்பெயர்வு உலகத்துக்கு பறைசாற்றி நிற்கிறது.
மக்கள் வெளியேறிய நிலையில் இடிபாடுகளுடன் சுடுகாடாய் கிடக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவப் பேய்கள் வெற்றிக் கொடியைப் பறக்க விடலாம். தமிழரின் இராச்சியத்தைக் கைப்பற்றி விட்டதாக நினைத்து தென்னிலங்கையில் சிங்களப் பேரினவாதக் கும்பல்கள் பட்டாசுகள் கொளுத்திக் குதூகலிக்கலாம். இராணுவ மேலாதிக்க நிலையை எட்டி விட்டதாக எண்ணி சந்திரிகா அரசு சமாதானப் பேச்சுக்கான சமிக்கைகளையும் விடலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றைத் தெட்டத் தெளிவாக எடுத்தியம்ப விரும்புகிறோம். அதாவது யாழ்ப்பாண மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் வரை சமாதானத்தின் கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும். இராணுவ அழுத்தத்திற்கு பணிந்து துப்பாக்கி முனையில் திணிக்கப்படும் சமரசப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபொழுதும் பங்குபற்றப் போவதில்லை. இதுதான் சந்திரிகா அரசிற்கு நாம் விடுக்கும் செய்தி. பாரிய இராணுவப் படையெடுப்பை முடுக்கி விட்டு பல லட்சம் மக்களை இடம்பெயரச் செய்து, வரலாற்றுப் பெருமை மிக்க யாழ் மண்ணை ஆக்கிரமிப்பதன் மூலம் சமாதான சூழ்நிலையும் சமரசத் தீர்வும் ஏற்பட்டு விடும் என சந்திரிகா அரசு எண்ணுமானால் அதைப் போல அரசியல் அசட்டுத்தனம் வேறேதும் இருக்க முடியாது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சந்திரிகாவின் ஆட்சிபீடம் இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இதன் விளைவாக சமாதானத்திற்கான சகல பாதைகளையும் கொழும்பரசு மூடிவிட்டதுடன் முழுத் தீவையுமே பெரியதொரு யுத்த நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. யாழ்ப்பாணச் சமரில் புலிகள் இயக்கம் பேரிழப்பைச் சந்தித்துவிட்டதென்றும், பலவீனப்பட்டுவிட்டதென்றும் அரச பிரச்சாரச்சாதனங்கள் உரிமை கொண்டாடுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தச் சமரில் புலிகள் பலவீனப் படவுமில்லை, பெரிய உயிரிழப்பைச் சந்திக்கவுமில்லை. யாழ்ப்பாணச் சமரில் புலிகளை விட இராணுவத்தினருக்கே பெரிய அளவில் உயிரிழப்பும் தளபாட இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான ஆட்பலத்துடன் பெரிய அளவிலான ஆயுத சக்தியைப் பிரயோகித்து தனக்குச் சாதகமான நிலப்பரப்பு வழியாக முன்னேற முயன்ற பெரும் படையணிகளை எதிர்த்து எமது சக்திக்கு ஏற்றவகையில் நாம் சாதுரியமாகப் போராடினோம். பெரும் இடர்கள் ஆபத்துக்கள் மத்தியில் போராடிய போதும் பெருமளவில் உயிரிழப்புக்களை நாம் சந்திக்கவில்லை. இதனால் எமது படைபல சக்திக்கும் படையணிக் கட்டமைப்புக்கும் பாதிப்பு நிகழவில்லை. மரபு வழிப் போர்முறைக்கு புலிகளை ஈர்த்து எமது படை பலத்தை அழித்து விடலாம் என எண்ணிய இராணுவத்திற்கு இது ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணச் சமர் எமக்கு ஏற்பட்ட பின்னடைவே தவிர தோல்வியல்ல. அதுவும் ஒரு தற்காலிகப் பின்னடைவேதான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்திலும் இதைவிட பெரிய பின்னடைவுகளைச் சந்தித்தோம். ஆனால் அந்தப் போரில் நாம் தோற்றுவிடவில்லை. இந்திய இராணுவமே இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. எனவே இன்றைய பின்னடைவே நாளைய வெற்றியாக மாறுவது திண்ணம்.
சிங்கள இராணுவம் யாழ்ப்பாண மண்ணில் அகலக்கால் பதித்திருக்கிறது. பெரும் படையைத் திரட்டி நிலத்தைக் கைப்பற்றுவது கடினமான காரியமல்ல. ஆனால் கைப்பற்றிய நிலத்தில் காலூன்றி நிற்பதுதான் கஸ்டம். உலகெங்கும் ஆக்கிரமிப்பாளர் எதிர்கொண்ட வரலாற்று உண்மையிது.
இந்த வரலாற்றுப் பாடத்தை சிறிலங்கா இராணுவம் படித்துக் கொள்வதற்கு வெகுகாலம் செல்லாது. படைபலத்தை அடிப்படையாகக் கொண்டே சிறீலங்கா அரசானது தமிழரின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்க முனைகிறது. தமிழ்ப் பிதேச ஆக்கிரமிப்பு மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பிய குறைந்தபட்ச தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்துவிட நினைக்கிறது. சமாதானத்திற்கான யுத்தமென்ற சந்திரிகாவின் கோட்பாடு இத்தகைய இராணுவத் தீர்வையே மூமாகக் கொண்டிருக்கிறது.
இத்தகைய தீர்வை மானமுள்ள தமிழன் எவனும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்தத் திட்டத்தை முறியடித்து தன்னாட்சி நோக்கிய எமது விடுதலைப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்வதாயின்; எமக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. நாம் எமது படை பலத்தைப் பெருக்கி போராட்டத்தைத் தீவிரமாக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது அரசியற் தலைவிதியை தாமே நிர்ணயிப்பதாயின் தமிழரின் படைபலம் பெருக வேண்டும். எமது படையமைப்பைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும். நாம் எமது இழந்த மண்ணை மீட்டெடுக்க முடியும். நாம் சொந்த இடங்களுக்கு சுதந்திர மனிதர்களாக திரும்பிச் செல்ல முடியும். தமிழர் தேசம் தமது படைபலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது இன்றைய தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக எழுந்துள்ளது. தமிழினம் சிதைந்து, அழிந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு இது அவசியம். போராடித்தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தமிழ்த் தேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் தேசியப் பணியிலிருந்து, வரலாற்றின் அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை ஒதுங்கிக்கொள்ள முடியாது. இதில் காலம் தாமதிப்பதும் எமது இனத்திற்கு பேராவத்தை விளைவிக்ககூடும். எனவே, காலம் தாழ்த்தாது எமது விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் இளம் சந்ததி எமது இயக்கத்தில் இணைந்து கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எமது போராட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.
மிகவும் நெருக்கடியான இக்கால கட்டத்தில் எவ்வித உதவியுமின்றி ஒரு இன அழிப்பு யுத்தத்தை நாம் தனித்து நின்று முகங்கொடுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உலகத் தமிழினத்தின் உதவியையும், ஆதரவையும் நாம் வேண்டி நிற்கிறோம். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் எமது உரிமைப் போருக்குக் குரல் கொடுப்பதுடன் தம்மாலான உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
எமது தேசத்தின் விடுதலைக்காக சாவை அரவணைத்து சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்களை நாம் நினைவுகூரும் இப்புனித நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலை வீரர்கள் களப் பலியானோர்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதி எடுத்துக் கொள்வோமாக.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.