×

தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2000

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2000.

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே…,

எமது மண்ணிற்காக விடுதலை என்ற உன்னத விழுமியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த எம் உயிர் வீரர்களை நாம் நினைவு கொள்ளும் இன்றைய நாள் ஒரு புனித நாள். இந்த நன்னாளில் ஆன்மக்கதவுகளை அப் புனிதர்களுக்காக திறந்து கொள்வோம்.

நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழீழ தேசம் பெருமை கொள்கிறது.

மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச் செல்லும் ஒரு அதிசயக்காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும்.

மாவீரர்களே எமது சுதந்திரப் பயணத்தின் வழிகாட்டிகள், அவர்களது வாழ்வும் வரலாறும் எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றுபவை, அவர்களே எமக்கு ஒளிகாட்டிகள்.

மாவீரர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி அவர்களை நினைவுகொள்ளும் இந்தப் புனித நாளில், நாமும் எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டிக்கொள்வோம். எமது தேசத்தின் சுதந்திரத்திற்காக அந்த உன்னத இலட்சியத்தை அடைவதற்காக எத்தகைய இடர்களையும், எத்தகைய துன்பங்களையும், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்போமென நாம் எமக்குள் வீரசபதம் செய்துகொள்வோம்.

எனது அன்பான மக்களே,

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்று நாமொரு முக்கிய திருப்புமுனையை அடைந்திருக்கிறோம். எமது படையணிகள் ஒப்பற்ற இராணுவ சாதனைகளை நிலைநாட்டி எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன.

யாழ்ப்பாணத்தின் கழுத்தைத் திருகியபடி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து வைத்திருந்த ஆனையிறவுப் பெருந்தளம் புலிப்படை வீரர்களால் மீட்கப்பட்டமை இவ்வாண்டு நாம் ஈட்டிய மாபெரும் இராணுவ வெற்றியாகும். தகர்க்க முடியாத இரும்புக் கோட்டையாக இருபதினாயிரம் இராணுவத்தினருடன் தொடர்வலய முகாம்களால் சூழப்பட்டு பரந்தனில் இருந்து பளை வரையும் கரையோரத் தளங்களோடும் 80 சதுரமைல் நிலப்பரப்பைக் கொண்ட ஆனையிறவுப் பெருந்தளம் எம்மால் வெற்றிகொள்ளப்பட்ட நிகழ்வானது உலகப் போரியல் வரலாற்றுச் சமரில் புலிகள் வரித்த நுட்பமான போர் வியூகங்களும் திகைப்பூட்டும் தரை இறக்கங்களும் வீரம்செறிந்த தாக்குதல்களும்- தந்திரோபாயங்களும் போரியற்கலையில் எமது விடுதலை இயக்கத்தின் அபாரமான வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டியது. வெளிநாட்டில் பயிற்சி பெற்று உள்நாட்டில் களமாடி முதிர்ச்சிபெற்ற சிங்களத்தின் சிறப்புப் படையணிகள் இச்சமரில் சிதைக்கப்பட்டன. இந் நிகழ்வானது சிங்களத்திற்கு இராணுவ பொருளாதார ரீதியில் முண்டுகொடுத்து நிற்கும் உலக வல்லரசுகளை திகைப்பில் ஆழ்த்தியது.

ஆனையிறவுப் பெருந்தளத்தை வெற்றிகொண்டு தென்மராட்சியிலும் வடமராட்சி கிழக்கிலும் பெருமளவு நிலங்களை மீட்டெடுத்த அதேவேகத்தோடு கிழக்கு அரியாலை வழியாக எமது படையணி ஒன்று யாழ்ப்பாணத்தின் நகராட்சி எல்லைக்குள் பிரவேசித்தது. அதேசமயம் எமது மற்றைய படையணிகள் தனங்கிளப்பு வழியாக நாவற்குழி, கைதடி, மட்டுவில் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன. யாழ்ப்பாண நகரம் அரைப்பிறை வியூகத்தில் சுற்றிவளைக்கப்பட்டது. இதனையடுத்து, ஒரேயொரு ஆகாய விநியோக மார்க்கமாக விளங்கிய பலாலிப் பெரும்தளம் எமது பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகியது. மின்னல் வேகத்தில் நிகழ்ந்த இத்திடீர்த் திருப்பங்களின் விளைவாக, சந்திரிகா அரசு என்றுமில்லாத இராணுவ நெருக்கடியை சந்தித்தது. சந்திரிகா அம்மையார் நிலைகுலைந்து போனார். ஆயினும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சர்வதேச உலகத்தின் உதவிபெற்று நெருக்கடியை சமாளிக்கத் திட்டமிட்டார். யாழ்ப்பாணம் புலிகளிடம் வீழ்ந்தால் அங்குள்ள முப்பதினாயிரம் சிங்களப் படையினருக்கும் உயிராபத்து ஏற்படும் என உலகெங்கும் அபாயச் சங்கை ஊதினார். இந்த அபாய அறிவிப்பைக் கேட்டதுமே அனைத்துலக நாடுகளும் அம்மையாருக்கு உதவிசெய்ய முன்வந்தன.

இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்கள இராணுவத்தினரை பாதுகாப்பாக மீட்டெடுக்க இந்தியா முன்வந்தது. இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அவசர ஆயுத உதவி வழங்க முன்வந்தன. முழு உலகமுமே அம்மையாரின் பின்னால் அணிதிரண்டது. மிகவும் சக்திவாய்ந்த நவீனரக அழிவு ஆயுதங்கள் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டன. இஸ்ரேலும், ரஷ்யாவும் நவீனரக போர் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் அனுப்பிவைத்தன. அவசர அவசரமாக ஆயுத ரீதியில் சிங்கள இராணுவ இயந்திரம் வலுப்படுத்தப்பட்டது. அபாயச் சங்கை ஊதி உலகத்தின் உதவியைப் பெற்று இராணுவத்தைப் பலப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போரைத் தொடரும் சந்திரிகாவின் தந்திரோபாயம் வெற்றிபெற்றது. யாழ்பப்பாணச் சமரில் ஒருதலைபட்சமாக உலகநாடுகள் குறுக்கிட்டு சிங்களத்திற்கு உதவிகளை வழங்கியதால் எமது போர்த் திட்டங்களை தாமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.

1995ல் யாழ்ப்பாண நகரை சிங்கள ஆயுதப்படைகள் ஆக்கிரமித்தபோதும் அதன்விளைவாக ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த மாபெரும் மனித அவலம் ஏற்பட்டபோதும், உலகம் கண்களை மூடிக்கொண்டு மௌனம் சாதித்தது. ஆனால் இப்போது சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு படிப்படியாக உடைக்கப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் வரும் புறநிலைகள் தோன்றியபோது உலகநாடுகள் பதட்டமடைந்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளருக்கு உதவிகளைச் செய்வது எமக்கு ஒருபுறத்தில் ஏமாற்றத்தையும் மறுபுறத்தில் கவலையையும் கொடுக்கிறது.

யாழ்ப்பாணம் சிங்கள தேசத்திற்கு உரித்தானது அல்ல. யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது. இறையாண்மை என்பது ஒரு அரசின் தெய்வீக சொத்துரிமையல்ல. இறையாண்மையானது மக்களிடம் இருந்தே பிறக்கிறது. அது மக்களுக்கே சொந்தமானது. யாழ்ப்பாணத்தின்இறையாண்மை யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது. இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் தமிழரின் வரலாற்று மண்ணில் சிங்களத்தின் இறையாண்மையை திணித்துவிட முடியாது. தமிழரின் விடுதலைப்படை என்ற ரீதியில் நாம் எமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தகைய சக்திகள் எதிர்த்து நின்றாலும் எமது விடுதலை இயக்கம் யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தே தீரும்.

எல்லாச் சமர்களுக்கும் தாய்ச்சமராக விளங்கிய ஆனையிறவுச் சமரிலும் மற்றும் வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாண நகராட்சிப் பகுதிகளில் நிகழ்ந்த சமர்களிலும் களமாடி சாதனைபடைத்த சகல போராளிகளுக்கும், படை நகர்த்திய தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்கள். எல்லைப்படையாக அணிதிரண்ட எமது மக்கள் இந்தச் சமர்களில் நேரடியாக பங்குகொண்டு போராடியது எமது விடுதலைப் போராட்டத்திற்கு புதிய தெம்பையும் பலத்தையும் அளித்தது. குடும்பப்பொறுப்புக்களைச் சுமக்கும் இவர்கள் தேசப்பற்றால் ஈர்க்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி எடுத்து பெரும் நிலமீட்புச் சமர்களில் பங்குகொள்வது எமது தேசத்திற்கு பெருமை சேர்க்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பரந்துபட்ட பொதுமக்கள் இணைந்துகொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டம் என்ற உயர்நிலை அரசியல் பரிமாணம் பெறுகிறது. எமது ஆயுதப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு மேலும் பெருகவேண்டும் அதுதான் எமது போராட்டத்தில் பாரியதிருப்புமுனைகளை ஏற்படுத்தும், அதுதான் எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு முடிவுகட்டி எமது விடுதலை இலட்சியத்தை வெகுவிரையில் நிறைவுபெறச் செய்யும்.

எனது அன்பான மக்களே,

மீண்டும் ஆறாண்டுகாலம் சந்திரிகாவின் ஆட்சி தொடரப்போகின்றது. இந்த ஆறாண்டு காலமும் இத்தீவில் அமைதி நிலவுமா அல்லது போரும் வன்முறையும் தலைவிரித்தாடுமா என்பது சந்திரிகா கடைப்பிடிக்கப்போகும் கொள்கையிலும் அணுகுமுறையிலும் தான் தங்கியிருக்கிறது.

இந்த அரசானது, தென்னிலங்கை இனவாத சக்திகளின் ஆதரவோடுதான் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. புலிகளுக்கு எதிராக போர்முரசு கொட்டித்தான் தேர்தலை சந்தித்திருக்கிறது. மிகவும் மோசமான தேர்தல் மோசடிகள், வன்முறைகள் வாயிலாகவே வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இனவாதக் கடும்போக்காளர்களே இந்த அரசின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கிறார்கள். இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆயுத வன்முறையை பாவித்து மிகவும் கேவலமான தேர்தல் மோசடிகளைச் செய்து சனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய தமிழ்த் துரோகிகளும் இந்த ஆட்சிபீடத்திற்கு முண்டுகொடுத்து நிற்கிறார்கள். இப்படியாக இனவாதிகளையும் தமிழினத் துரோகிகளையும் நிர்வாக உயர்பீடங்களில் அமர்த்தி அவர்களது தயவில் தங்கிநிற்கும் சந்திரிகா அரசு, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை தீர்க்க துணிவான முடிவுகளை எடுக்குமா என்பது சந்தேகமே.

போர்பற்றியும் சமாதானம் பற்றியும், இனப்பிரச்சனையை தீர்ப்பது பற்றியும், இந்த அரசிடம் ஒரு தெளிவான பார்வையும், திடமான அணுகுமுறையும் இருக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களே முன்வைக்கப்பட்டுகின்றன. பல்வேறு கருத்தோட்டங்களை கொண்டவர்களும் கடும்போக்காளரும் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருப்பதால் இந்த அரசானது பல நாக்குகளால் பேசுகிறது. மிகவும் குழப்பகரமாகப் பேசுகிறது. புலிகளுடன் பேசத்தயார் என ஒரு குரலும், புலிகளைப் பூண்டோடு அழிப்போம் என இன்னொரு குரலும், புலிகள் சரணடையும்வரை போர் ஓயாது என மற்றொரு குரலுமாக ஜனாதிபதி, பிரதம மந்திரி, இராணுவத் தளபதி ஆகிய உயர் அதிகாரபீடங்களில் இருந்தே இத்தகைய முரணான குரல்கள் எழுப்பப்படுகின்றன. இந்த வித்தியாசமான குரல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்குடனேயே எழுப்பப்படுகின்றன. சந்திரிகாவும், கதிர்காமரும் வெளிநாடுகளுக்கு ஏமாற்று வித்தைகாட்ட பிரதம மந்திரியும், இராணுவத் தளபதியும் உள்நாட்டு இனவாத சக்திகளுக்கு தீனிபோட்டு வருகின்றனர்.

மேற்குல நாடுகள் சமாதானத்தை விரும்புகின்றன. சமாதான வழியில் அரசியற்தீர்வு காணப்படுவதை விரும்புகின்றன. போர் மூலமாக தமிழரின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது என்பதை வலியுறுத்துகின்றன. எனவேதான், மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் நுட்ப்பமான பிரச்சார அறிக்கைகளை சந்திரிகா வெளியிட்டு வருகிறார். சமாதானம் என்றும், பேச்சுவார்த்தை என்றும், அதிகாரப் பரவலாக்கம் என்றும், அரசியலமைப்பு என்றும் வார்த்தைப் பிரயோகங்களை கையாண்ட மேற்குலகின் கண்களுக்கு மண்தூவி வருகின்றார்.

தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரை சந்திரிகா ஒரு சமாதானப் பிரியை அல்ல. இராணுவத் தீர்வில் நம்பிக்கைகொண்ட கடும் போக்காளராகவே அவரை நாமும் எமது மக்களும் கருதுகிறோம். அவரது ஆறாண்டுகால அரசியல் வரலாறும், தமிழ் மக்களை தொடர்ந்தும் இராணுவ பொருளாதார கொடுமைகளுக்கு ஆளாக்கிவரும் அவரது அணுகுமுறையும் சமீபத்திய அவரது போர்த்தயாரிப்பு நடவடிக்கைகளுமே எம்மையும் எமது மக்களையும் இத்தகைய நிலைப்பாட்டிற்கு தள்ளியது. இராணுவச் செலவீனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும்தொகை நிதி, பாரிய அளிவிலான ஆயுதக் கொள்வனவு, இடைவிடாது படைக்கு ஆட்சேர்ப்பு, விலகிய இராணுவத்தினரை விரட்டிப் பிடித்தல் இப்படியாக இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தி போருக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது சந்திரிகா ஒரு இராணுவவாதக் கடும் போக்காளர் என்பது புலனாகும்.

இம் மாதம் ஒன்பதாம் திகதி புதிய பாராளுமன்றத்தை திறந்துவைத்துப் பேசிய சந்திரிகா, தமிழரின் இனப்பிரச்சனை குறித்து வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் சந்திரிகாவின் குழப்பகரமான பார்வையும் அணுகுமுறையும் தெளிவாகும். இந்த அறிக்கையில் தமிழரின் இனப்பிரச்சனையின் தோற்றம் பற்றி விளக்கமுனையும் சந்திரிகா, கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழருக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். ஆயினும் தமிழர் என்று குறிப்பிடாமல் சிறுபான்மை சமூதாயங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொதுப்படையாகக் கூறுகிறார். இந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார அதிகாரக் கட்டமைப்பில் பங்குகொள்வதற்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு நியாயமான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை. அதுதான் இனப்பிரச்சனையின் தோற்றப்பாட்டிற்கு உண்மையான காரணம் என்று சந்திரிகா விளக்கம் அளிக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களுக்கு எதற்காக அநீதி இழைக்கப்பட்டது? யாரால் இழைக்கப்பட்டது? எப்படி, எந்த வடிவங்களில் இழைக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு சந்திரிகா பதல் தரவில்லை. மாறாக தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநீதிகள் அனைத்திற்கும் அந்நிய காலனித்துவம் மீது பழியைச் சுமத்திவிடுகிறார். சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டங்கள் காலனித்துவ அதிகார கட்டமைப்பில் இருந்து உருவாக்கம் கொண்டவை என்றும், இவை எமது சமூகத்தில் நிகழும் புறநிலைக்களுக்கு ஏற்றதாக அமையவில்லை என்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இந்த அரசியலமைப்புச்சட்டங்களே காரணமாக இருப்பதாகவும் சந்திரிகா கூறுகிறார். சந்திரிகா அளிக்கும் இவ் விளக்கத்தில் தமிழருக்கு எதிரான சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடூரமான ஒடுக்குமுறை வரலாறு மிகவும் சாணக்கியமான முறையில் மூடிமறைக்கப்படுகிறது. அத்தோடு இந்த இன ஒடுக்குமுறை வரலாற்றில் சந்திரிகாவின் பெற்றோரது பங்கும் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அரசியலமைப்பில் குறைகாண்பது, அந்த அரசியல் அமைப்பை அந்நிய காலனித்துவத்தோடு தொடர்பு படுத்துவதும் முழுப்பூசணிக்காயை சேற்றில் மறைக்க முயலும் கேலிக்கூத்தான விடயம்.

அந்நிய காலனித்துவ தலையீடு காரணமாகவே தமிழீழ மக்கள் தமது வரலாற்று தாயகம் மீதான இறையாண்மையை இழந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆனால், தமிழினம் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறையானது இலங்கைத்தீவு ஆங்கிலக் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னரே ஆரம்பமாகிறது. இந்த ஒடுக்குமுறைக்கு காரணகர்த்தாவாக விளங்குவது சிங்கள பௌத்த இனவாதமாகும். பௌத்த மதத்தில் வேர் பாய்ச்சி, சிங்கள சமூகக் கட்டமைப்பில் விருட்சமாக வளர்ந்திருக்கும் இப் பேரினவாத சித்தாந்தம். சிங்கள அரசியல் உலகையும் ஆழமாக ஊடுருவி நிற்கிறது. சிங்கள அரசியல்வாதிகளால், படைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டங்களும் இந்த பேரினவாத சித்தாந்தத்தின் ஒரு வடிவம். ஆகவே தமிழருக்கு கொடுமை இழைத்துவருவது சிங்கள பௌத்த இனவாதமே தவிர சந்திரிகா கூறுவது போல ஆங்கில காலனித்துவ கருத்துலகம் அல்ல.

சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய அரசியல் போராட்டங்கள் அமைதி வழியில் இருந்து ஆயுதப் போராக விரிவுபெற்று இறுதியில் முழு அளவிலான போர்வடிவம் பெற்றிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் படையான விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் மத்தியில் இப்போர் நிகழ்ந்து வருகிறது. தன்னாட்சி உரிமையுடைய மக்கள் சமூகம் என்ற ரீதியில் இன அழிப்பை நோக்காகக் கொண்ட அரச அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற ஆயுதம் ஏந்திப்போராடும் உரிமை எமக்கு உண்டு. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இசைவான இந்த உரிமையின் நிலை. ஆனால், சிங்கள அரசு இந்தப் போர் பற்றிய உண்மை நிலையையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் உலகிற்கு இருட்டடிப்புச் செய்து வருகிறது. அதுமட்டுமன்றி தமிழரின் தேசவிடுதலைப் போரை “பயங்கரவாதம்” எனத்திரிபுபடுத்தி, இழிவுபடுத்தியும் வருகிறது.

தனது கொள்கைப் பிரகடன அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் மத்தியிலான போர் பற்றி சந்திரிகா குறிப்பிடும்போது, “இனப்பிரச்சினையின் ஒரு விளைவுதான் இந்தப் போர்” என்கிறார். ஆயினும் அதே அறிக்கையில் இப்போரை “ஆயுதப்பயங்காரவாதம்” என்றும் குறிப்பிடுகிறார். தமிழீழப் போரை இனப்பிரச்சனையின் வெளிப்பாடு என்று கூறும் அதே நாக்குத்தான் அதனை தமிழரின் ஆயுதப் பயங்கரவாதம் என்றும் வர்ணிக்கிறது. இனப்பிரச்சனையை சமாதான வழியில் தீர்த்து வைப்போம் என்று கூறும் சந்திரிகா பயங்கரவாதத்தை போர் மூலம் ஒழிப்போம் என்றும் முழங்குகிறார். இப்படியாக சந்திரிகா அரசு தமிழரின் போர்பற்றிய உண்மை நிலையைத் திரித்து, மறுத்து பயங்கரவாதம் எனப் பொய்சொல்லி, சிங்கள மக்களையும் உலகத்தையும் ஏமாற்றி வருகிறது.

தமிழீழப் போரானது ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் விடுதலைப் போர் என்ற யதார்த்த அரசியல் உண்மையை சிங்கள அதிகார வர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த மறுதலிப்புத்தான் தமிழரின் இனப்பிரச்சனையை சிக்கலாக்கி வருகிறது. இதுதான் போரை தீவிரப்படுத்தி வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இதுதான் இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் தீர்வு காண்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறது.

சமாதான வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேவேளை, நாம் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்றத்தயங்கவும் இல்லை. சமாதான வழிமூலம் கிட்டப்படும் தீர்வானது நியாயமானதாக, நீதியானதாக, சமத்துவமானதாக தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதாக அமையவேண்டும் என்பதே எமது விருப்பம். நோர்வே நாட்டு சமாதானக் குழுவினரை அண்மையில் வன்னியில் நான் சந்தித்தபோது எமது இயக்கத்தின் இந்த நிலைப்பாட்டை தெளிவாக, அழுத்தம் திருத்தமாக எடுத்து விளக்கினேன்.

சமாதானப் பேச்சுக்களுக்கு நாம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை. ஆயினும் பேச்சுவார்த்தைக்கு உகந்ததான நல்லெண்ண புறநிலையும், இயல்புநிலையும் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே நாம் வலியுறுத்தி வருகிறோம்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக பரஸ்பரம் பகைமையுடனும், சந்தேகத்துடனும் ஒரு கொடிய போரில் ஈடுபட்டுவரும் இருதரப்பினரும் சண்டையை தொடர்ந்தபடி திடீரென சமாதானப் பேச்சில் இறங்குவது நடைமுறைச் சாத்தியமானதல்ல. இதனால்தான் போர் நெருக்கடியை படிப்படியாகத் தளர்த்தி போர் ஓய்ந்த சமாதான சூழ்நிலையில், நல்லெண்ணப் புறநிலையில் பேச்சுக்கள் நடைபெறுவதை நாம் விரும்புகிறோம். இயல்புநிலை என்னும் பொழுது தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதாரச்சுமைகள், தடைகள் நீங்கி எமது மக்களின் வாழ்க்கை நிலை இயல்பான இருப்பிற்கு திரும்பவேண்டும் என்பதையே நாம் கருதுகிறோம். ஒரு உறுதியான தளத்தில் உகந்த புறநிலையில், நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்கள் நிகழும்பொழுதுதான் அவை ஆக்கபூர்வமானதாக அமையும். ஆகவேதான் பேச்சுக்கான நல்லெண்ண புறநிலையின் அவசியத்தையும், தேவையையும் நாம் வலியுறுத்துகின்றோமே தவிர, பேச்சுக்களுக்கு நாம் நிபந்தனைகளை விதிக்கவில்லை.

போர் நெருக்கடி தளர்ந்து இயல்புநிலை தோன்றுவதற்கு இருதரப்பில் இருந்தும் நம்பிக்கையை வளர்க்கும் நல்லெண்ண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நோர்வே அரசு சில யோனனைகளை தெரிவித்திருக்கிறது. இதனை நாம் ஆர்வமாகப் பரிசீலனை செய்துவருகிறோம். எமது மக்கள் அனுபவிக்கும் துன்பச்சுமை குறைந்து பரஸ்பர நல்லெண்ணம் நிலவும் சமாதான சூழ்நிலை தோன்றுவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். அதற்கான முன் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமானால் பதிலாக நாமும் நல்ல முடிவுகளை எடுப்போம்.

சமாதானப் பேச்சுவார்த்தை என்பது தமிழ் மக்களுக்கு ஒரு புதிதான விடயம் அல்ல. தமிழ் மக்கள் சார்பில் எமது விடுதலை இயக்கமும் எமக்கு முந்திய தலைமைகளும், சிங்ளத்துடன் எத்தனையோ தடவைகள் பேச்சுக்களை நடத்தியுள்ளன. பண்டா-செல்வா ஒப்பந்த காலத்தில் இருந்து பல தசாப்தங்களாக பல வரலாற்றுச் சூழல்களில் பல்வேறு நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆயினும் இப்பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க தவறிவிட்டன. இதனால், தமிழரின் பிரச்சனை மேலும் மேலும் சிக்கலடைந்து பெரும் போராக விஸ்வரூபம் பெற்றிருக்கிறது. இந்த துரதிஸ்ட நிலைமைக்கு பிரதான காரணம் தமிழரது பிரச்சனையின் அடிப்படைகளை, தமிழரது அரசியல் அபிலாசைகளை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான்.

தமிழரின் பிரச்சனைக்கு சமாதான வழியில் நிரந்தரமான அரசியற்தீர்வு காணப்பட வேண்டுமாயின் தமிழர் பற்றிய சில அடிப்படை உண்மைகளை சிங்கள தேசம் ஏற்றக்கொண்டே ஆகவேண்டும். அத்தோடு தமிழ் மக்கள் எத்தகைய தீர்வை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களது அடிப்படை அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்கள் தனித்துவமான இன அடையாளத்தை கொண்டவர்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு அந்த இனத்துவ பிரக்ஞையோடு வாழும் ஒரு மக்கள் சமூகம் அவர்களுக்கு வரலாற்று ரீதியான தாயக மண்ணாக சொந்த நிலமுண்டு. எமது மக்கள் விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தமது சொந்த மண்ணில் நிம்மதியாக, நிறைவாக வாழவேண்டும் என்பதுதான். மற்றவர்களது அதிகார ஆதிக்கமோ, நெருக்குவாரங்களோ இல்லாத ஒரு அரசியல் சூழலில் தம்மைத்தாமே ஆட்சி புரிந்து, கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது மக்களின் ஆழமான அபிலாசையாகும். சிங்கள மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வின் அத்திவாரத்தில் இருந்து தான் ஒரு நியாயமான, நிரந்தரமான தீர்வைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.

தமிழர் பிரச்சனையின் அடிப்படைகளை உணர்ந்து சமாதான வழியில் தமிழர்களுக்கு நீதி வழங்க சந்திரிகா அரசு முன்வருமா என்பது எமக்கு சந்தேகமே.

தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் குமுறும் இனக்குரோத வெறியாட்டங்கள், ஆட்சி அதிகாரத்தில் பேரினவாத சக்திகளின் மேலாண்மை, தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்தப்படும் சிங்களசமூகம்,மகாசங்கத்தினரின் தமிழ் விரோதப்போக்கு, அரசாங்கத்தின் இராணுவத்தீர்வுக் கொள்கை இவற்றையெல்லாம்பார்க்கும்பொழுது தமிழரின் தேசிய இனப்பிரச்சனை சமாதான வழியில் தீர்க்கப்படுமா என்பதுகேள்விக்குறியாகிறது. அத்தோடு சந்திரிகா அரசு மேற்கொள்ளும் சில குருட்டுத்தனமான அணுகுமுறைகளும்இனப்பிரச்சனையின் தீர்வுக்கு முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடுகின்றது. பெருமாளுக்கு முதலமைச்சராக முடிசூட்டி முந்திய இந்திய அரசு இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறுபோல, சந்திரிகா அரசும் தமிழ்விரோதக்குழு ஒன்றை வட கிழக்கில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியிருக்கிறது. இப்படியான நடவடிக்கைகள்மூலம் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வதுடன் இனப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விடுகிறது.

எனது அன்பான மக்களே,

எமது தேசியப் பிரச்சனை இப்பொழுது உலக நாடுகளின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்து வருகிறது. இப்பிரச்சனை சமாதான வழியில் தீர்க்கப்படவேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகிறது. உலக மனச்சாட்சியின் பார்வை எம் பக்கம் திரும்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே எமக்குத் தெரிகிறது.

நாம் சமாதானப் பேச்சுக்கோ அல்லது சமாதான வழியிலான அரசியற்தீர்விற்கோ முட்டுக்கட்டை போடவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தி வருகிறோம். சமாதானப் பேச்சுக்கு உகந்ததாக சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டையும் தமிழர்களது அடிப்படைக் கோரிக்கைகளையும் உலக சமூகம் புரிந்து வருகிறது. தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் பின்னணியில் உள்ள சக்திகள் யாரென்பதையும் உலகம் இனங்கண்டு வருகிறது.

உலக நாடுகளில் இருந்து பெறப்படும் நிதி உதவியையும், ஆயுத உதவியையும் ஆதாரமாகக்கொண்டே சிங்கள அரசு தமிழருக்கு எதிராக இந்தப் போரை நடத்தி வருகிறது. பெரியதொரு அழிவுப்போரை நடத்திக்கொண்டு, பெருமளவு அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு சமாதானத்திற்காகவே சண்டையை நடத்துவதாக சந்திரிகா அரசு உலகத்தை ஏமாற்றி வந்திருக்கிறது. ஆயினும் சந்திரிகா அரசு நடத்தும் இப்போரின் நோக்கம் என்ன என்பதையும், இப்போரினால் புலிகளை வெற்றி கொள்ளவோ அன்றி தமிழரின் பிரச்சனையை தீர்க்கவோ முடியாது என்பதையும் மேற்குலகம் இப்பொழுது உணரத் தொடங்கியுள்ளது. எனவே சிங்கள இனவாத ஆட்சியாளரை சமாதானப் பாதைக்கு திருப்பவேண்டும் என்றால் சிங்களத்திற்கு பொருளாதாரத் தீனி போட்டுவரும் உலக நாடுகளிடம்தான் அந்தக் கடிவாளம் இருக்கிறது. தென்னிலங்கைச் சமூகக் கட்டமைப்பின் சகல மட்டங்களிலும் பூதாகரமாக வளர்ந்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழ் மக்களை காருண்ணியத்துடன் அரவணைத்துக் கொள்ளும் என நாம் நம்பவில்லை. சிங்கள தேசம் இனவாதப்பிடியில் இருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.

காலமும் வரலாறும் எமது போராட்ட இலட்சியத்திற்கு நியாயம் வழங்கியே தீரும். அப்போது உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளும்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மை அழித்துக்கொண்ட மாவீரர்கள் சரித்திரமாக நின்று எமக்கு வழிகாட்டுவார்கள். அந்த தர்மத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments