×

தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2001

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2001.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்று மாவீரர் நாள்.

விடுதலை வேண்டிக் களமாடி வீழ்ந்த எமது வீரப் புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன் நாள்.

தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள்.

விடுதலைக்காக எமது இயக்கம் கொடுத்த விலை அளப்பரியது. உலகத்தில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் புரியாத அற்புத சாதனைகளை நாம் ஈட்டினோம். ஒப்பற்ற ஈகங்களைப் புரிந்து தியாகத்தின் சிகரங்களைத் தொட்டோம். இதனால் மானிடத்தின் விடுதலை வரலாற்றில், ஒரு மகத்துவமான இடத்தைத் தேடிக்கொண்டோம். எமது இனத்தின் வீரத்திற்கும் விடுதலை உணர்விற்கும் பெருமை சேர்க்கும் இம்மகோன்னதநிலைக்கு டிம்மை இட்டுச் சென்றவர்கள் மாவீரர்களே.

மனித நாகரீகம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். அடக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக, யுகம் யுகமாக விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. உலகில் அநீதியும் அடக்குமுறையும் தொடரும்வரை விடுதலைப் போராட்டங்களும் தொடரும். ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.

இன்றைய உலக ஒழுங்கு மாறிவருகிறது. சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மனித உரிமைப் போராட்டங்கள் சம்பந்தமாக உலகின் பார்வையும் மாறிவருகிறது. அரசியற் கோட்பாடுகளிலும் தார்மீகக் கொள்கைகளிலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக நடத்தப்படும் வன்முறை தழுவிய உரிமைப் போராட்டங்கள் அனைத்திற்குமே உலக அரசுகள் பயங்கரவாதம் என்ற முத்திரையைக் குத்தியுள்ளன. இந்தக் குறுகிய வரையறையின் அடிப்படையில் உண்மையான உரிமைப் போராட்டங்களும் பயங்கரவாதத்திற்கும் மத்தியிலான வேறுபாடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அடிப்படை அரசியல் சுதந்திரங்களுக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் இரத்தம் சிந்திப் போராடும் விடுதலை அமைப்புக்களின் தார்மீக அடிப்படைகளுக்கு இதுவொரு சாவாலாகவும் எழுந்துள்ளது. இதுவொரு கவலைக்குரிய விடயம். இந்தப் புதிய போக்குக் காரணமாகச் சர்வதேச அரங்கில் எமது சுதந்திர இயக்கத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுத்து நிற்கும் உலகநாடுகள் முதலில் அரசியல் வன்முறையின் மூலவேர்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அரசியல் வன்முறையின் தோற்றப்பாடு பற்றி ஓர் ஆழமான பார்வை இருந்தால்த்தான் உண்மையான விடுதலைப் போராட்டங்களுக்கும் குருட்டுத்தனமான, பயங்கரவாதச் செயல்களுக்கும் மத்தியில் வேறுபாடு காணமுடியும்.

உரிமைப்போரின் நியாயத்தன்மை

எமது பார்வையில் அரசியல் வன்முறையில் இரு பரிமாணங்கள் உள்ளன.

முதலாவது, ஒடுக்குமுறையாளரின் வன்முறை.

இரண்டாவது, ஒடுக்கப்படுவோரின் வன்முறை. ஒடுக்குமுறையாளர் எப்பொழுதுமே ஆளும்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரம் உடையவர்கள், ஆயுதப் படைகளை வைத்திருப்பவர்கள். ஒடுக்கப்படுவோர் எப்பொதுமே ஆளப்படும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தோராக சுரண்டப்படும் மக்கள் சமூகமாக, ஏழைகளாக, அடிமைகளாக இருப்பார்கள்.

முதற்தர வன்முறையை அரச வன்முறை எனலாம்.

இரண்டாந்தர வன்முறையை அரச வன்முறைக்கு எதிரான வன்முறை எனலாம். அரச வன்முறையானது, ஒடுக்குமுறையாளரின் அடக்குமுறையான வன்முறை என்பதால் அது அநீதியானது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் வன்முறை நீதியானது. ஏனெனில் அது அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விதமான வேறுபாட்டில்தான் ஒடுக்கப்படும் மக்களது வன்முறை வடிவிலான உரிமைப் போராட்டங்கள் நியாயத்தன்மை பெறுகின்றன.

வன்முறை வடிவில் உருவகம் பெறும் அரசியல் உரிமைப் போராட்டங்கள் அரச வன்முறையின் எதிர்விளைவாகவே எழுகின்றன. உலக விடுதலைப் போராட்டங்களின் மூலத்தை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று மூலலும் அதுதான். விடுதலைப் புலிகள் இயக்கம் உத்தமமாவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே இலங்கைத் தீவில் அரச ஒடுக்குமுறை தலை தூக்கியது. இனவாதத் தீயாக மூண்ட இந்த அரச ஒடுக்குமுறை படிப்படியாக வளர்ச்சிகண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை வடிவம் எடுத்தது.

சிங்கள அரச வன்முறைக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய அகிம்சை வழியிலான அரசியற் போராட்டங்கள் அனைத்தும் அரச வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்டன. அமைதி வழிப் போராட்டங்கள் அர்த்தமற்றுப் போய்விட்ட அதேவேளை, அரச அடக்குமுறை தீவிரமடைந்து இனக்கொலைப் பரிமாணம் பெற்றதால், தமிழ் மக்கள் அரச வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்னொருவகையிற் சொல்வதானால், பேரழிவை எதிர் கொண்ட தமிழினம், தனது இருப்பிற்காக, தனது பாதுகதப்பிற்காக, ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த வரலாற்றுப் புறநிலையில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்று அரச வன்முறைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் எமது ஆயுத எதிர்ப்புப் போராட்டமானது. இன்று தமிழரின் அரசியற் போராட்ட வடிவமாக வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டிருக்கிறது. நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியற் குறிக்கோளைக் கொண்டது. ஐ.நா சாசனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் பயங்கரவாதிகள் அல்லர். மதவாத, இனவாத வெறியால் உந்தப்பட்டுக் குருட்டுத்தனமான வன்முறையில் ஈடுபடும் மனநோயளர்களும் அல்லர். மனித விடுதலை என்ற உன்னதமான விழுமியத்திற் காதல் கொண்டே நாம் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றோம். நாம் சுதந்திர தாகம் கொண்ட இலட்சியவாதிகள். நாம் சுதந்திரப் போராளிகள். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எம்மை அழிப்பதற்கு முயன்று தோல்வி கண்ட சிங்கள அரச பயங்கரவாதிகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத மூலாம் பூசிவருகிறார்கள். இந்த அரச பயங்கரவாதிகின் பொய்யான விசமத்தனமான பரப்புரைகளை நம்பி உலக நாடுகள் சில எமது விடுதலை அமைப்பையும் பயங்கரவாதிகள் பட்டியலிற் சேர்த்துள்ளன. இது எமக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. ஆயுத எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து நிற்கும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வரலாற்றையும் நியாயப் பாடுகளையும் சீர்தூக்கிப் பாராது இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பணிந்து, அவசரப்பட்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். குறிப்பாகச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களுக்கு இவை ஓர் தவறான தகவலைக் கொடுக்கும். அவர்களது விட்டுக்கொடுக்காத கடும்போக்கை மேலும் கடுமையாக்கும். அத்தோடு அவர்களது இராணுவ அடக்குமுறைக் கொள்கைக்கும் ஊக்கமளிப்பதாக அமையும். ஒட்டுமொத்தத்தில் மேற்குலக நாடுகளின் இந் நடவடிக்கைகள் சமாதான வழிமூலமான தீர்விற்குத் குந்தகம் விளைவித்து, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை மேலும் சிக்கலடையச் செய்யும். பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுத்துள்ள போரில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசுகளும் அணிசேர்ந்து நிற்கின்றன. இனவாத ஒடுக்குமுறைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் புகழ்போன பல அடக்குமுறை அரசுகளும் இந்தச் சர்வதேசக் கூட்டணியில் இணைந்து நிற்கின்றன. அதாவது, காவற்துறையினருடன் கொலைக் குற்றவாளிகள் கைகோர்த்து நிற்பதுபோல நாம் இங்கு சிறீலங்கா அரசை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

இனக்கொலைப் பரிமாணத்தில் மனித உரிமை மீறல்களை நடத்தி, உலக சாதனை ஈட்டியிருக்கும் இந்தப் பயங்கரவாத அரசு, உலகப்பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கூட்டயிணில் இணைந்து நிற்கிறது. இன்றைய சர்வதேச ஒழுங்கமைப்பில் இது ஓர் ஆபத்தான போக்கைக் குறித்துக் காட்டுகிறது. உலக ரீதியாக அரச அடக்குமுறைக்கு ஆளாகி நிற்கும் மக்கள் சமூகங்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களும் இப்புதிய போக்கானது ஓர் அச்சுறுத்தலாக அமைகிறது. பயங்கரவாத வன்முறைக்கு எதிராகப் போர்தொடுத்து நிற்கும் மேற்குலக நாடுகளின் ஆவேசத்தையும், அச்சங்களையும் நிர்ப்பந்தங்களையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையான பயங்கரவாதிகளை இனங்கண்டு தண்டிக்கும் நோக்குடன் சர்வதேச உலகம் மேற்கொள்ளும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்களை நாம் வரவேற்கிறோம். ஆயினும், அதேவேளை தீவிரவாத வெறியில் எழும் குருட்டுத்தனமான பயங்கரவாதத்திற்கும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் மத்தியிலான வேறுபாடினை விளக்கும் வண்ணம் மேற்குலக சனநாயக நாடுகள் பயங்கரவாதம் என்ற பதத்திற்கு விரிவான, விளக்கமான வரையறையைக் கொடுப்பது அவசியமாகும், உள்நாட்டில் இனக்கொலைப் பரிமாணத்திற் கொடுமைகளை இழைத்துவரும் அடக்குமுறை ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதத்தை சர்வதேச உலகம் அலட்சியம் செய்ய முடியாது. இந்தப் பயங்கரவாத அடக்குமுறை அரசுகளை இனங்கண்டு தண்டிக்க உலகம் முன் வரவேண்டும்.

விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். விடுதலைப் புலிகள் வேறு, எமது மக்கள் வேறு அல்லர். எமது மக்களும் நாமும் ஒன்றாகப் பிணைந்து, ஒன்றுபட்ட சக்தியாக ஒரே இலட்சியப் பாதையில் எமது தாயகத்தின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். எமது இயக்கத்தை எமது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சந்திரிகா அரசு வஞ்சகமான வழிகளைக் கையாண்டது. எம்மைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்து, எமது இயக்கம் மீது தடையை விதித்தது. இதனைத் தொடர்ந்து சந்திரிகாவும் அவரது வெளிவிவகார அமைச்சரான திரு. கதிர்காமரும் எமது இயக்கத்தையும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாத பூதமாகப் பூச்சாண்டிகாட்டிச் சர்வதேச அரங்கில் தீவிர பரப்புரைப் போரைத் தொடுத்தனர். இதன் விளைவாக அமெரிக்காவும் பிரிட்டனும் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கனடாவும் எமது விடுதலை அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலிற் சேர்த்துள்ளன.

நாம் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்பதும் நாம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு சுதந்திர இயக்கம் என்பதும் எமக்குப் பின்னால் எமது மக்களின் ஏகோபித்த ஆதரவு அணிதிரண்டு நிற்கிறது என்பதும் எம்மைத் தடைவிதித்த இந்நாடுகளுக்கு நன்கு தெரியும். அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காணப்படவேண்டும் என்பதும் சிறீலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணவேண்டும் என்பதும் இந்நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்நிலைப்பாடானது ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, தமிழீழ மக்களின் அரசியற் பிரதிநிகளாகவே விடுதலைப் புலிகளை இந்நாடுகள் கருதுகின்றன. அப்படி என்றால் ஏன் எமது அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இந்நாடுகள் முத்திரை குத்த வேண்டும்? எனவே, இந்நடவடிக்கையானது எந்தவகையிற் சமாதான ரீதியான ஒரு தீர்வை ஏற்படுத்த ஏதுவாக அமையும் என்பது எமக்குப் புரியவில்லை.

சிறீலங்கா அரசாங்கம் எம்மீது விதித்துள்ள தடையை நீக்கி, எமது இயக்கத்தைத் தமிழீழ மக்களின் உண்மையான, சட்ட ரீதியான அரசியற் பிரதிநியாக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நாம் சமாதானப் பேச்சு வார்த்தைகளிற் பங்குபற்றப் போவதில்லையென்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் மிகவும் உறுதியாக இருக்கிறோம். நோர்வே அரசிடமும், நாம் இதனை திட்டவட்டமாக கூறியிருக்கிறோம். விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால்தான் இலங்கைத் தீவில் சமாதானம் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. இப்படியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசின் அழுத்தத்திற்கு இசைந்து மேற்குலக நாடுகள் எம்மீது தடைகளை இறுக்கினால் அது சமாதானப் பேச்சுக்கும், சமாதான வழியிலான தீர்விற்கும் வழிகோலப் போவதில்லை. மாறாக, சமாதானப் பேச்சுக்குப் புலிகள் மீதான தடை நீங்க வேண்டும் என்ற எமது மக்களின் கோரிக்கைக்கு இந்நடவடிக்கைகள் மேலும் வலுச்சேர்க்கும்.

முழு அளவிலான போர் நெருக்கடியாக வெடித்துள்ள தமிழரின் தேசிய இனப்பிரச்சினை, அடிப்படையில் ஓர் அரசியற் பிரச்சினை என்பதை நாம் அறிவோம். இனப்பிரச்சினையைச் சமாதான வழிமுறைகள் மூலமாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை இன்னும் எம்மிடம் முற்றாக இடிந்து போகவில்லை. சிங்கள அரசியல் தலைமைகள் உண்மையாக, உறுதியுடன் மனம் வைத்தால் சமாதானமும் இணக்கப்பாடும் ஏற்படும் சாத்தியமுண்டு.

இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் கிடைத்து ஐம்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகியும் சிங்கள அரசியல் தலைமைகள் இன்னும் இனவாத சித்தாந்தச் சக்திக்குள்ளிருந்து வெளிவரவில்லை. இதனால் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை யதார்த்தமாக, புறநிலை நோக்குடன் அணுகித் தீர்க்கும் மனப்பக்குவம் அடையவில்லை. அடக்குமுறையாலும் ஆயுதப் பலத்தாலும் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்ற மனநிலையே சிங்கள அரசியல் உலகில் மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாக எந்தவொரு சிங்களக் கட்சிகசியிடமும், தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் அணுகுமுறையோ, கொள்கைத் திட்டமோ இருக்கவில்லை. இந்த உண்மை சர்வதேச சமூகத்திற்குத் தெரியாததல்ல. தமிழர் பிரச்சினைக்குச் சமாதான வழிமூலமான தீர்வை வலியுறுத்தும் உலக நாடுகள், அதேசமயம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்தும் சிறீலங்காவின் இராஜதந்திர நகர்வுகளுக்கும் போர் முயற்சிகளுக்கும் முண்டுகொடுத்து உதவத் தவறவில்லை. உலக நாடுகளின் இந்த விசித்திரமான அணுகுமுறையும் தமிழரின் பிரச்சினை தீராது இழுபடுவதற்கு ஒரு காரணம் எனலாம்.

சமாதானத்தின் கதவுகளை நாம் தட்டியவண்ணமே இருக்கிறோம். ஆனாற் சந்திரிகா அரசு சமாதானத்தின் கதவுகளைத் திறக்க மறுக்கிறது.

சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் நாம் நோர்வேயின் தூதுவர்களைச் சந்தித்து உரையாடியதையடுத்து சமாதான முயற்சியை முன்னெடுக்கும் நோக்குடன் நான்கு மாதங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தம் செய்தோம். சந்திரிகா அரசு எமது அமைதி முயற்சியைக் கேலிசெய்து நிராகரித்ததுடன் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. இறுதியாக எமது போர்நிறுத்தம் முடிவடைந்த ஒரு சில மணி நேரத்திற்குள் “அக்கினிச் சுவாலை” என்ற பாரிய படையெடுப்பை மேற்கொண்டது. இப்படையெடுப்பை முறியடித்து நாம் நடத்திய மூர்க்கமான எதிர்த் தாக்குதல் சிங்கள அரசுக்கு ஓர் உண்மையைப் புலப்படுத்தியது. அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய சக்தியாக இருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஆள்பலத்தோடும் ஆயுதப் பலத்தோடும் நாம் வலுமிக்க போராட்ட சக்தியாக வளர்ச்சிகண்டு நின்றபோதும் சமாதான வழிமுறைக்கு வாய்பளிக்கும் நோக்குடன் இவ்வாண்டு தரைமார்க்கமாகப் பாரிய படை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வில்லை. நோர்வே அரசின் சமாதான முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கி வந்தோம். இந்தச் சூழ்நிலையில் தான் நோர்வேயின் சமாதானத் தூதுவரான திரு. எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்குப் பக்கசார்பானவர் எனப் பொய்க் குற்றம் சாட்டி, சந்திரிகா அரசு அவரை ஓரம் கட்டி ஒதுக்கியது. இதனை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நோர்வே அரசின் சமாதான முயற்சிக்குத் தடை ஏற்பட்டது. இதற்குப் பொறுப்பாளி சந்திரிகா அரசுதான். மிகவும் நெருக்கடியான வரலாற்றுத் திருப்பத்தில் இலங்கைத் தீவில் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாம் பாராளுமன்றத்திற்குப் புறம்பாக நின்று போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலை அமைப்பு என்பதால் நாம் தேர்தல்களில் அக்கறை காட்டுவதில்லை. எனினும் எதிர்வரும் பொதுத்தேர்தல் தமிழீழத்திலும் தென்னிலங்கையிலும் விடுதலைப் புலிகளை மையப் பொருளாகக்கொண்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதன்மையான பிரச்சினையாக முனைப்புற்று நிற்கும் தமிழரின் தேசிய இனச்சிக்கலானது சமாதானம், போர் என்ற இரு முரண்பட்ட துருவங்களில் அரசியல் சக்திகளை ஈர்த்துவருகிறது. சமாதானம் வேண்டிநிற்கும் சக்திகளுக்கும் சமாதானத்திற்கு விரோதமான தீவிரவாத சக்திகளுக்கும் மத்தியிலான போட்டியாக இத் தேர்தல் நடக்கிறது. எனவே எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவவேண்டுமா போர் தொடரவேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காதவரை அவர்களது அரசியல் அபிலாசைகள் நிறைவேறாதவரை இத்தீவில் சமாதானமும் இன ஒத்திசைவும் பொருளாதார மேம்பாடும் ஏற்படப்போவதில்லை என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் சிங்கள மக்களுக்கு விரோதிகள் அல்லர். எமது போராட்டமும் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள இனவாத அரசியல் வாதிகளின் அடக்குமுறைக் கொள்கை காரணமாகவே தமிழ், சிங்கள இனங்கள் மத்தியில் முரண்பாடு எழுந்து போராக வெடித்திருக்கிறது. ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமைகொள்ள முனையும் அரசுக்கும் அரச படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்துவருகிறோம். இந்தப் போரானது தமிழ் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களையும் ஆழமாகப் பாதித்து வருகிறது. என்பது எமக்குத் தெரியும்.

போர் வெறிகொண்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக் கொள்கையால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிச் சிங்கள இளைஞர்களும் அநியாயமாகக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி, இப்போரினால் எழும் பொருளாதாரப் பளுவை சிங்களப் பொது மக்களே சுமக்க வேண்டியுள்ளது என்பதும் எமக்குத் தெரியும். எனவே இக்கொடிய போருக்கு முடிவுகட்டி, நிரந்தரச் சமாதானத்தை நிலைநாட்டுவதாயின் போர் வெறிகொண்ட இனவாத சக்திகளை இனம்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நீதி வழங்கவும் சிங்கள மக்கள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாகத் தாம் வாழ்ந்துவந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாக கௌரவத்துடன் வாழவிரும்புகிறார்கள். அவர்களது அரசியற் பொருளாதார வாழ்வை அவர்களே நிர்ணயித்துக்கொள்ள விரும்புகிறார்கள். தம்மை நிம்மதியாகத் தம்பாட்டில் வாழவிடுமாறு கேட்கிறார்கள். இதுதான் தமிழர்களது அடிப்படையான அரசியல் அபிலாசை இது. பிரிவினைவாதமோ, பயங்கரவாதமோ அல்ல தமிழர்களது இக்கோரிக்கை சிங்கள மக்களுக்கு எந்த வகையிலும் ஓர் அச்சுறுத்தலாக அமையவில்லை. சிங்கள மக்களது அரசியற் சுதந்திரங்களையோ அல்லது அவர்களது சமூக பொருளாதார, கலாச்சார வாழ்வையோ இக்கோரிக்கையானது எவ்வகையிலும் பாதிக்கவில்லை. தமது சொந்த நிலத்தில் தம்மைத் தாமே ஆளும் ஆட்சியுரிமையோடு வாழ வழிவகுக்கும் ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியற் தீர்வு அமையவேண்டுமென அவர்கள் வலியுறுத்துவதும் இதைத்தான்.

தமிழ் மக்களின் அடிப்டையான அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யும் அரசியல் தீர்வுதிட்டம் குறித்துச் சிங்கள அரசுடன் பேச்சுக்களில் பங்குபற்றுவதற்கு எமது இயக்கம் தயாராக இருக்கிறது. நாம் சமத்துவமாக, சுதந்திரமாகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகைமையுடன் அவர்களது உண்மையான போராட்டச் சக்தி என்ற அங்கீகாரத்துடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதாயின், எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும். தமிழீழ மக்களது ஒட்டுமொத்தமான அபிலாசையும் இதுதான். இதனைச் சிங்கள அரசியற் தலைமைகளும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

பரஸ்பரம் நம்பிக்கையூட்டும் ஒரு நல்லெண்ணச் சூழ்நிலையில் பேச்சுக்கள் நிகழவேண்டும். போர் நெருக்கடியும் பொருளாதாரத் தடைகளும் நீங்கிய இயல்பான, அமைதியான சூழ்நிலையில்தான் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் என நாம் காலங்காலமாக வலியுறுத்தி வருகின்றோம். இந்த நிலைப்பாட்டையே நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழி மூலம் தீர்வுகாணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில் ஆனந்தமாக ஒத்திசைவாக ஒன்றுகூடி வாழ முடியும். ஆயினும், அதேவேளை சமாதான மார்க்கமாகப் பிணக்கைத் தீர்ப்பதற்கு சிங்கள தேசம் இணங்க மறுத்தால் தமிழர்களாகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.

சிங்களத்தின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இனவாதம் நீடித்து நிலைக்குமானால், அந்த இனவாதமே தமிழீழத் தனியரசு பிறப்பதற்கான புறநிலையை அமைத்துக்கொடுக்கும்.

தமிழீழத் தனியரசு உதயமாவது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி என்றால் எந்தவொரு சக்தியாலும் அதனைத் தடுத்துவிட முடியாது. என்றோ ஒரு நாள் தமிழீழத் தனிநாடு பிறந்து எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments