யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கா வரை பாய்மரக் கப்பலில் பயணம் செய்த வீரத்தமிழர்களின் கடல் பயணம் யாழ்ப்பாணம் கப்பல் கட்டும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டதென்பது உங்களுக்குத் தெரியுமா ? நம் முன்னோர்கள் திறமையான கடலோடிகள் என்பதோடு, அவர்கள் தாமாகவே பாய்மரக் கப்பல்களை உருவாக்கினார்கள்.
அத்தகைய ஒரு கப்பலான “அன்னபூரணி அம்மாள்”, நம்பமுடியாத மிக நீண்ட கடல் பயணத்தை அமெரிக்காவை நோக்கி மேற்கொண்டிருந்தது. இந்த நீண்ட கடல் பயணம் தமிழர்களின் ஆற்றலுக்கும் துணிச்சலுக்கும் சான்றாக விளங்குகிறது. 1937 ஆம் ஆண்டு, ஐந்து வீரத் தமிழ்க் கடலோடிகள் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்குத் தாம் செய்த பாய்மரக் கப்பலில் பயணம் செய்தார்கள். எவ்வித நவீன உபகரணங்களும் இல்லாமல், ஒரு எளிய பாய்மரக் கப்பலில் உலகின் மிக ஆபத்தான அத்திலாந்திப் பெருங்கடலைக் கடந்தார்கள். ஒரு திரைப்படத்தின் காட்சி போல் தோன்றினாலும் இது நமது சொந்த வரலாறு.
Tamils from Jaffna to America in a Wooden Raft!
வல்வை மக்கள் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க சிறந்த கடலோடிகளாகவும் கப்பற் சொந்தக்காரர்களாகவும் இருந்தார்கள். இதை இலங்கையின் முதலாவது பிரதமர் D.S.சேன நாயக்காவும் குறிப்பிட்டுள்ளார் என்பதை மறக்கமுடியாது. “அன்னபூரணி அம்மாள்” வல்வை சுந்தரமேஸ்த்திரி அவர்களால் 1930ம் ஆண்டு கட்டப் பட்டது. இக்கப்பல் இந்தியாவின் கரை யோரப் பட்டினங்களுக்கும் பர்மா, பாக்கிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடு பட்டு வந்தது. உலகத்தை சின்னவள்ளத்தில் உல்லாசப்பிரயாணமாக மேற்கொண்டு வந்த திரு.றொபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தப் பிரபு அன்னபூரணியை பார்க்கநேர்ந்தது. இவர் பிரபல நாவலாசிரியரும் ஆராய்ச்சியாளரும் கடலோடியுமாவார். அன்னபூரணி உள்ளுர் வேப்ப மரத்தைக்கொண்டு அழகுறவமைக்கப்பட்டது. இந்தப்பாய்மரக்கப்பலின் அழகிய அமைப்பையும், அதன் உறுதியையும், எந்தநீரோட்டத்திலும் இலகுவாய்பயணம்செய்யும் தன்மையையும்கண்ட திரு.றொபின்சன் அதை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றால் அது காட்சிப்பொருளாகவும் நூத னமாகவும் இருக்குமென விரும்பினார். 1936ம் ஆண்டு அன்னபுரணியை விலை கொடுத்து வாங்கி னார். அவர் இக்கப்பலை வல்வை யைச்சேர்ந்த திரு.கே.கதிரிப்பிள்ளை என்பவரின் தலைமையில் திரு,தா.சபாரெத்தினம், திரு.ஐ.இரத்தினசாமி, திரு.சி.சிதம்பரப்பிள்ளை, திரு.க.நடராஜா, திரு.சேது நவரத்தின ராசா, திரு.ஐ.தில்லையம்பலம், திரு.சான்டோசங்கரதாஸ், திரு.பூ.சுப்பிரமணியம் ஆகியோரின் உதவியோடு அமெரிக்கா கொண்டுசெல்லத்தீர்மானித்தார். அமெரிக்கா புறப்படமுன் திரு.W.A.றொபின்சன் கொழும்பு வாக்கஸ் ஸ்தாபனத்தாரிடம் பெற்றுக்கொண்ட டீசல் இயந் திரமொன்றை முன்னேற்பாடாக கப்பலுக்குப் பொருத்தினார். அன்னபூரணி என்ற அக்கப்பலுக்கு திரு.றொபின்சன் தன் மனைவியின் பெயரான “பிறிகன்ரைன் புளோரன்ஸ்சி றொபின்சன்” என்னும் பெயரைச் சூட்டினார்.
இதைத்தொடர்ந்து அவர்களுடைய வரலாறுபடைத்த அந்த நீண்டபயணம் ஆரம்பமாகியது. திரு.றொபின்சன் அமெரிக்காவில் தங்கிநின்றபொழுது பிரபல கப்பல்தலைவரான திரு.டொனால்ட் ஏ.மக்குயிஷ் என்பவரைச்சந்தித்து அன்னபூரணிஅம்மாள் என்றகப்பல் கிரேக்கத்திற்கு வரும்போது அதைச்சந்திக்கும்படி கூறினார்.
கொந்தளிப்பும், புயலும் நிறைந்த பயங்கரமான மத்தியதரைக் கடலையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் தாண்டும்வரை அக்கப்பலை வழிநடத்துமாறு கூறினார். கப்பல் ஏடனில் இருந்து கிறிக் துறைமுகத்தை வந்தடைந்ததும் கப்டன் மக்குயிஷ் அக்கப்பலில் ஏறிக்கொண்டார்.கப்டன் மக்குயிஸ் நீராவிக்கப்பலில் 42 வருட அனுபவமுடைய சிறந்த கடலோடியும் குளோசெஸ்டரின் அதிசிறந்த தலைவர்களில் ஒருவருமாவார். ஆனால் இவர் பாய்க்கப்பலைச் செலுத்துவதில் அனுபவம் இல்லாதவராகவும் காலநிலை சீராக இருக்கும்பொழுதே எல்லாப் பாய்களையும் கப்பலைச் செலுத்திய இலங்கை மாலுமிகளைப் பொறுத்தவரையில் பதட்டப்பட்டவராகவும் காணப்பட்டார்.
கப்பல் ஜிபிரேல்றரில் இருந்து புறப்பட்டதும் அதற்கருகாமையில் ஓர் பயங்கரப்புயற் காற்று பெரும் இரைச்சலுடன் கப்பலை அதன்வழியிலிருந்து 250 மைல்களுக்கப்பால் இழுத்துச்சென்றது. வல்வையின் ஆறு மாலுமிகளும் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தனர். ஜிபிரேல்றரை அடைந்த பொழுது திரும்பவும் பயணத்தைத் தொடர அனு கூலமான காற்றெதுவும் இல்லை. கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததினால் அவர்கள் முழுக்க முழுக்க காற்றின் உதவியையே நாடவேண்டியதாயிற்று ஓர் அமெரிக்கச் சரக்குக் கப்பலில் கறுப்பரான மாலுமிகள் அன்னபூரணி அம்மாளில் இருந்த கறுப்பரான இலங்கை மாலுமிகளைக் கண்டவுடன் இனத்துவேச வார்த்தைகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்படி ஒரு நிலை இருந்தும் இழுவைக்கான அன்னபூரணி அம்மாளை அந்த அமெரிக்கக்கப்பலுடன் தொடுத்துவிட்டனர். ஆனால் ஜிபிரேல்றர் துறைமுகத்தைவிட்டு அதிகதூரம் நீங்கமுன்னரே சரக்குக்கப்பலின் பின்தளத்திற்கு அண்மை யிலுள்ளகயிறு துண்டாயிற்று. இரண்டையுமிணைத்திருந்த தொடுவைகயிறு வேண்டும் என்றே வெட்டப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து “புளோரன்சி ரொபின்சன்” என்ற இரட்டைப் பாய்மரக் கப்பல் அங்கு வீசிய காற்றின் உதவியுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிது காலம் ஓடியது. இதே காலநிலை அவர்களுக்கு எவ்வளவு காலம்தான் நீடித்திருக்கும் ?
திரும்பவும் நடுச்சாமத்தில் காற்று அவர்களைக் கை விட்டதினால் எத்தனையோ நாட்களை அவர்கள் வீணே அவர்கள் கழிக்கவேண்டியதாயிற்று பீப்பாக்களில் சேகரித்து வைத்திருந்த நீர் கெட்டு குடிப்பதற்கு கூடாததாக இருந்தது. உணவு முடிந்து அங்கே பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. ஓரளவு காற்றின் வேகம் குறையத்தொடங்கியது. நாற்பத்தியொரு நாட்களின்பின்பு “புளோரன்சி ரொபின்சன்” ஹெமில்டனை வந்தடைந்தபொழுது அவர்களுக்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது.
ஒன்பது நாட்களின்பின்பு அவர்கள் குளோசெஸ்டர் நோக்கிப் பயணமானார்கள். அப்பொழுது இதமானகாற்று மந்தநிலையில் கழிந்த நாட்களை ஈடுசெய்தது. ஆனால் கடல் மட்டம் வரைக்கும் கீழே தொங்கிக்கொண்டிருந்த மூடுபுகார் படலம் ஒரு பெரும் ஆபத்தைக் கொண்டுவந்தது. இப்புகார் மண்டலத்தின் காரணமாக “பிரிக்கன்ரைன்” நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்த போது. வேறொரு பாரியகப்பலுடன் மோதுண்டு நொருங்கக்கூடிய நிலை ஏற்பட்டது. கப்டன் மக்குயிஸ் தனதுஊது குழலினால் உரத்த சத்தமாக ஊதினார். கப்பல் தளத்தில் நின்ற அனைவரும் தம்மால் இயன்றவரைக்கும் தமதுபலம் அனைத்தும் ஒன்றுசேர்த்துக் கத்தினார்கள். இவையேதும் உணராததுபோல் அப்பாரிய கப்பல் விரைந்து வந்துகொண்டிருந்தது. அவர்களால் வேகமாகவரும் அக்கப்பலின் உயரமான பாய்மரங்களையும் அதன் பக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அப்படியி ருந்தும் அந்தவேளையில் ஒன்றும் புரியாதநிலையில் தவித்தனர். இரண்டாவது தடவையாக இலங்கைக்குழுவினர் இறைவனைப் பிரார்த்தித்தனர். கணணிமைக்கும் பொழு தில் சிலஅங்குல இடைவெளியில் அக்கப்பல் விலகிச்சென்றதால் தெய்வாதீனமாக ‘பிறிகன்ரைன் புளோரன்சிறொபின்சன்’ அமெரிக்காவின் பிரபலம்வாய்ந்த ‘குளோ செஸ்டர்’ துறைமுகத்தை வந்தடைந்தது.
திரு.வில்லியம் அலபேட்றொபின்சன், கப்பலில் வந்த குழுவை அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் களை மிக உயர்ந்த கட்டிடத்திலுள்ள “சென்மொறிஸ் ஒன்தி பார்க்” என்ற நவீன வசதிகள் அமைந்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். அங்கு அவர்கள் அரசவிருந்தினர்களாகவே கௌரவிக்கப்பட்டார்கள். உள்ளுர் மரமான வேப்பமரத்தில் செய்யப்பட்ட அக்கப்பல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இரவு பகல் அதில் ஏறிப் பார்வையிட்ட வண்ணம் இருந்தனர். சில சமயங்களில் வேட்டியுடுத்த மாலுமிகள் தியானத்திலும் அமர்ந்திருப்பதை அவதானித்த மக்கள் ஆச்சரியமடைந்து புகைப்படங்களும் எடுத்து சில நாட்களின் பின்னர் வல்வை மாலுமிகள் அங்கிருந்து நீராவிக்கப்பலில் சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்பி னார்கள்.
1938 ஆகஸ்ட் 2ம் திகதி வெளியாகிய அமெரிக்கத் தினசரியான “த பொஸ்ரன் குளோப்” (The Boston Globe) என்ற பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியாக அதன் நிருபர் ஏ.பரோஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்.
ஆர்வம் மிக்க மாலுமிகள் 89அடி நீளமுள்ள புளோறன்சி றொபின்சன் என்னும் கப்பலில் இன்று வந்த பொஸ்ரன் துறைமுகத்தை அடைந்தனர். இந்த ரகக்கப்பலில் பாய்களின் உதவியுடன் மாத்திரம் மேற்கு சமுத்திரத்தைக் கடப்பது இதுவே முதற்தடவையாகும். கடைசித்தடவையாகவும் இருக்கும். ஐந்து இந்துக்களான இலங்கையரையும், தாடி வளர்த்த அமெரிக்க இளம் கடலோடி ஒருவரையும் கொண்ட பிறிகன்ரைன் ஆனது ஜிபிரோலில் இருந்து பேமுடா வழியாகப் புறப்பட்டு இத்துறைமுகத்தை வந்தடைந்தது. பெருமை வாய்ந்த பல வருகைகளைக் கண்ட பிரசித்திபெற்ற இத்துறைமுகமானது 100வருடங்களாகக் கண்டிராத அளவுக்குக் பெருந்தொகையான கப்பற்தலைவர்களையும் படகோட்டிகளையும் உல்லாசப் பிரயாணமுகவர்களையும் கண்டுகளிப்பதற்கென தன்பால் கவர்ந்தது அக்கப்பல். வெறுங்காலுடன் பாய்மரங்களில் விரைவுடன் ஏறிடும் இந்துக்களை அங்கு குழுமியிருந்த மக்கள் வியப்புடன் அவதானித்தனர். உள்துறைமுகத்தை வந்தடைந்ததும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக சுமார் 20 படகுகள் அக்கப்பலின் மருங்குகளைச் சென்றடைந்தனர். 1840 வருடத்து பிரித்தானிய சண்டைக்கப்பலை ஒத்த இக்கப்பல் எட்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் செய்யப்பட்டு அங்கிருந்து புறப் பட்டு இத்துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. கடலோடிகளின் நகரான வல்வெட்டித்துறையிலிருந்து இக்கப்பலில் புறப்பட்ட மாலுமிகளில் ஒருவர் மாத்திரமே இடைவழி யில் வீடு திரும்பினார்.
“The Boston Daily Glob” August 2nd 1938.
“Daily Times” August 2nd 1938.
Reopening of a North Ceylon Port, Page 8 – 20.
வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் முதற் பதிப்பு -1997 , இரண்டாம் பதிப்பு – 2006 – ந.நகுலசிகாமணி.