×

கற்சிலைமடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டிசுட்டான்

கற்சிலைமடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்துக்கட்பட்ட ஒரு கிராமமான கற்சிலைமடு போத்துகேயர் ,ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் தம் படை நபவடிக்கையின்போது அஞ்சி நடுங்கிய வன்னி இராசதாணியின் மிக முக்கியமான ஓர் பிரதேசமாக கற்சிலைமடு விளங்கியது, முல்லைநிலமும் மருதமும் கைகோர்த்து வளம்தர ,வீரமிக்க வன்னிராசதாணியின் செழிப்போடும் ,மாவீரன் பண்டார வன்னியனின் தூபியையும் தாங்கி உயர்ந்து நிற்கும் கற்சிலைமடு, ஈழ விடுதலைப்போராட்ட காலத்தில் கற்சிலைமடு வீரத்திலும், தியாகத்திலும் தன்னை சுற்றியுள்ள இயற்கை வளத்தைப்போல அள்ளிக் கொடுத்தது.

வயல் நிலங்களும், வான் பயிரும், காடுசார் பொருளாதாரமும், பண்ணை வளர்ப்பும், சிறு தானிய உற்பத்தியும் இப்பிரதேச பொருளாதார பலமாக உள்ளது. பல படைப்பாளிகள், அறிஞர்கள் ,கல்வியாளர்களை உருவாக்கிய பெருமையோடு உயர்ந்து நிற்கிறது கற்சிலைமடு. “கற்சிலைமடு” என்ற பெயர் வரக்காரணம் என்ன? கற்சிலைமடு என்ற பெயர் வரக்காரணம் பண்டாரவன்னியனின் கல்வெட்டு கற்சிலைமடுவில் அமைந்திருப்பதே என பலரும் கூறுகின்றனர். கற்சிலைமடு பண்டாரவன்னியனின் மிக முக்கிய மையமாக விளங்கியிருக்கின்றது. ஆனால் கற்சிலைமடு என்ற பெயருக்கும் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக கூறும் கல்வெட்டுக்கும் சம்பந்தமில்லை.

1803இல் கற்சிலைமடுவில் வைத்து கப்டன் வொன் றிபேக்கினால் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட போதும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளின் பின்னர் அதாவது 1904-1905 காலப்பகுதியில் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரச அதிபராக இருந்த ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவரால் தோற்கடித்த இடத்தை அடையாளம் கண்டு அவ்விடத்தில் வொன் றிபேக்கினால் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதை உறுதிப்படுத்த கல் நாட்டப்பட்டதாக ஜே.பீ.லூயிஸ் அவர்களினால் 1913ம் ஆண்டு வெளியிடப்பட்ட “இலங்கையிலுள்ள நடுகற்களும், நினைவுச்சின்னங்களும்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1904 இல் நடுகல் நாட்டப்பட்டபோதும் 1895 இல் வெளியான “A Manual of Vanni Districts” எனும் நூலில் மேல்பற்று வடக்கின் மிகச்சிறந்த கிராமம் கற்சிலைமடு (Kachchilaimadu is the best village in the pattu) என கச்சிலைமடு எனும் பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் கல்வெட்டு நாட்டப்பட முன்னரே இப்பெயரை பயன்படுத்தியிருக்கின்றனர்.

அத்துடன் பாரம்பரியம் மிக்க இக்கிராமத்தின் பெயர் 1904ம் ஆண்டுக்கு பின்னர் வருவதற்கு சாத்தியமில்லை ஏனெனில் கற்சிலைமடுவில் 1817இல் 49 பேரும், 1839இல் 119 பேரும், 1881இல் 87பேரும், 1891இல் 145 பேரும் வசித்திருக்கிறார்கள். அவ்வாறெனில் கற்சிலைமடு என்ற பெயர் எவ்வாறு வந்தது என்றால் கற்சிலைமடுக்குளத்தின் கீழே காடுகளில் காணப்பட்ட சிதைவடைந்த ஆலயத்தின் பகுதிகள், அதிகளவான சிலைகள், இலிங்கங்களே காரணமாகும். இதனை வன்னி வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரை அவர்களும் தெளிவாகக்கூறுகின்றார். A manual of Vanni district நூலிலும் சிலைகள், ஆலயச்சிதைவுகள் கற்சிலைமடுக்குளத்தின் கீழ்க்காணப்பட்டதென குறிப்பிடப்படுகின்றது. பின்னர் இப்பிரதேச வாசிகளாலேயே இச்சிலைகளின் உள்ளே ஏதாவது பெறுமதியான பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடைக்கப்பட்டிருக்கின்றது. வ.ஆதவன் தனது கட்டுரையில் மேற்கண்டவாறு கூறுகிறார்.

வட்டக்கச்சி வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments