ஈழத்துத் தமிழ் வரலாற்றில் தமிழ், சமயம், கலை, இலக்கியம், அரசியல், சமூகம் என்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சியிற் பங்காற்றியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களில் இருபதாம் நுற்றாண்டிலும் வாழ்ந்து இந்த நு}ற்றாண்டிலும் வாழ்ந்து ஈழமண்ணிற்தடம் பதித்த திரு கண்ணன் அவர்களின் வாழ்க்கையையும் இசைப்பணியையும் எனக்குத் தெரிந்தவரை இக்கட்டுரை மூலம் தர முயல்கின்றேன்.
திரு கண்ணன் அவர்கள் ஈழத்தில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் என்னும் இடத்தில் 1943 03 29 ல் பிறந்தவர் இவர் தனது ஆரம்ப இசைப்பயிற்சியைப் புலவர் சண்முகரட்ணம் அவர்களிடமும் நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் பெற்றார் பின்னர் சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடமும் வேலணை சங்கீதபூஷணம் இராஜலிங்கம் அவர்களிடமும் வாய்ப்பாட்டினை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.
தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு முழு நேரமும் தன்னை இசையில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். இசைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அவருடைய எண்ணத்திற்கமையச் சூழலும் உருவாகியது. அறுபதுகளிற் தென்னிந்தியக் கலைஞர்களின் வருகை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தென்னிந்தியக் கலைஞர்கள் குழுவாகச் சென்று இலங்கையில் முகாமிட்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. இச்சூழல் கண்ணன் அவர்களுக்கு மிகச் சாதகமாக அமையவே அவரும் இசைக்குழுவை உருவாக்கத் தீவிரமாக முயற்சி செய்தார். தான் எவ்வாறு இசைக்குழுவை ஆரம்பித்தார் என்பதைக் ஊடக நிறுவனத்திற்கு அவர் அளித்த செவ்வியிற் பின்வருமாறு கூறுகின்றார்.
அந்தக்காலத்தில் ‘தினகரன்’ இசைப் பத்திரிகையினால் தினகரன் விழா ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. இது பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் யாழ்ப்பாணம் எங்கும் விழாக்கோலம் பூண்டு காணப்படும் இந்த விழாவில் வர்த்தக விளம்பர பவனியும் இடம்பெறும் சிறந்த விளம்பரப்பவனிக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. அந்த வர்த்தக விளம்பர பவனியில் நானும் கலந்து கொண்டேன். ஒரு வாகனத்தில் வீடு போன்றதோர் அமைப்பினை உருவாக்கி இசைக்குழுவிற்காக ஒன்று சேர்ந்த கலைஞர்களும் நானும் அந்த வாகனவீட்டிற் பவனிவந்த படியே எமது முதலாவது இசை நிகழ்ச்சியினை நடாத்தினோம். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு முதற்பரிசினையும் எமக்குப் பெற்றுத்தந்தது. எமது இசைக்குழுவிற்கு உறுதியானதொரு ஆரம்பமாகவும் இந்நிகழ்வு அமைந்து விட்டது.
மேலும் இந்நிகழ்வின்போது அறவிப்பாளராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்த திரு நடராஜா என்பவர் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியைத் தயாரித்துத் தரும்படி வேண்டினர். யாழ்ப்பபாணக் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு கர்நாடக சங்கீதபாணியில் இலகு சங்கீதமாக இசை அமைத்துப் பத்துப் பாடல்களை அந்த நிகழ்வில் வழங்கியிருந்தோம். இந்நிகழ்வு யாழ்ப்பாண மக்கிடையே மட்டுமல்லாது தென்இலங்கை மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஈழத்து மெல்லிசை அமைப்பாளராகக் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆகவே கொழும்பில் இருந்தபடியே இசைக்குழுவையும் நடாத்திவந்தேன் என்னுடன் “நேசம்” என்பவரும் இணைந்து கொண்டதால் எமது இசைக்குழு “கண்ணன் நேசம்” இசைக்குழு என்ற பெயரைப் பெற்றது.
ஈழத்து மெல்லிசைப்பாடல்கள், பொப்இசை, றொக்இசை, ஆங்கில இசை, தென்னிந்தியத் திரைஇசை, பக்திப்பாடல்கள் போன்றவை எமது இசைக்குழுவால் இசைக்கப்பட்டன.
90களில் விடுதலைப்புலிகள் எழுச்சியடைகிற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக அல்லது போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமிக்கின்றன. இந்தப் பரிமாணத்திலும் கண்ணனின் பங்களிப்பு கனதியானதாகும்.வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் என்ற பாடலை அறியாதவர் இருக்கமுடியாது. கண்ணன் ‘1996’ என்கிற வெளிவராத குறும்படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருந்ததை இங்கு நினைவு கூரலாம் .
இசைவாணர் கண்ணன். இவ்வாறு மூன்று தசாப்தங்களாக தொடர்கிறது கண்ணன் அவர்களின் இசைப்பயணம.
இசைவாணர் கண்ணனின் புதல்வரான சாயிதர்சன் தந்தையின் முதுமரபை உள்வாங்கி, நவீன தொழில்நுட்ப கணணி உலகுக்குள் நுளைந்து ஈழத்து மெல்லிசையை புதிய உலகிற்குள் கொண்டு வருகிறார்.