×

தொலைந்து_போன_தமிழ்க் கிராமங்கள்.

அனுராதபுர மாவட்டத்தின் பண்டைய தமிழ்க் கிராமங்கள் பற்றிய ஓர் ஆய்வு-பகுதி 1

சில வருடங்களுக்கு முன்பு அனுராதபுர மாவட்டத்தில் சிவ பூமியின் சுவடுகளைத் தேடி ஆய்வொன்றை மேற்கொண்டேன். அப்போது அம்மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களின் திரிபு  போன்று இருந்தன. இப்பெயர்களை முழுமையாக ஆராய வேண்டும் எனும் ஆர்வம் ஏற்படவே அவை பற்றிய விபரங்களைத் தேடினேன். அதன் பலனாக பல ஆச்சரியமான் தகவல்கள் கிடைத்தன.

அனுராதபுர மாவட்டத்தில் பண்டைய காலத்தில்  ஏராளமான தமிழ்க் கிராமங்கள் இருந்தன. இக்கிராமங்கள் எல்லாவற்றிலும் கோயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலப்போக்கில் இங்கிருந்த தமிழ் சைவமக்கள் இக்கிராமங்களை விட்டு வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்தனர். எஞ்சியிருந்த தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டறக் கலந்தனர். இன்று அவர்களின் சந்ததியினர் சிங்களவர்களாகக் காணப்படுகின்றனர். இந்நிலையில் இங்கிருந்த கோயில்களும் பராமரிப்பின்றி சிதைந்து அழிந்து போயுள்ளன.

தமிழர்கள் வாழ்ந்த சில இடங்களில் சிங்கள பெளத்த மக்கள் குடியேறியதுடன் கோயில்கள் இருந்த இடங்க ளுக்கு அருகில் பெளத்த விகாரைகளை அமைத்து, இந்துக் கோயில்களில் இருக்கும் தெய்வங்களையும் பய  பக்தியுடன் வழிபட்டு வந்தனர். இக்கோயில்கள் “தேவாலய” என அழைக்கப்படுகின்றன. சிங்கள பெளத்த மக்கள் இங்குள்ள இந்து தெய்வங்களை கண தெவியா, கத்தரகம தெவியா, ஈஸ்வர தெவியா, விஷ்ணு தெவியா, காளி மேனியன், பத்தினி மேனியன் என அழைத்து பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

இவ்வாறு தமிழ்க் கிராமங்கள் அனைத்தும் சிங்களக் கிராமங்களாயின. அதே சமயம் பல கோயில்கள் மண்ணுள் புதையுண்டு போயின. இன்றும் சிங்களப் பெயர் கொண்டு அழைக்கப்படும் தமிழ்க் கிராமங்கள் பல இம்மாவட்டத்தில் இருக்கின்றன.

பொ.ஆ. 16 ஆம் நூற்றாண்டு முதல் இங்கு வந்த போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகியோர் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் இலங்கையிலி ருந்த நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களையும், சில பெளத்த விகாரைகளையும் அழித்தனர்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 500 கோயில்களை போர்த்துக்கேயர் அழித்ததாக பாதிரியார் குவைறோஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வெளியே வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வடமத்தி ஆகிய பகுதிகளில் மேலும் 300 கோயில்கள் வரை அழிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவற்றில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களும் அடங்குகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஐரோப்பியரால்  அழிக்கப்பட்ட கோயில்களில் ஓரிரு கோயில்களைத் தவிர ஏனைய  எல்லாக் கோயில்களும் அடையாளம் காணப்பட்டு, ஆங்கிலேயர் காலத்திலும், அதன் பின்பும் மீண்டும் அமைக்கப்பட்டன. அதே சமயம் வடக்கு, கிழக்கிற்கு வெளியே அழிக்கப்பட்ட ஆலயங்கள் மீண்டும் கட்டப்படவில்லை. இதற்குக் காரணம் அங்கு தமிழ் சைவ மக்கள் இல்லாமையே.

அனுராதபுரம் பகுதியில் 1670 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்தது பற்றி ரொபேர்ட் நொக்ஸ் “An Historical Relation of Ceylon” எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த இப்படியான பல தமிழ்க் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக் கிராமங்களில் தற்போது சிங்கள மக்களே வாழ்கின்றனர். இக்கிராமங்களின் பெயர்களின் முடிவில் “குளம்” எனும் சொல் காணப்படுகின்றது. தற்போது இப்பெயர்கள் சற்று சிங்களமயமாகி விட்டன. நொச்சிக் குளம்-நொச்சிக்குளம எனவும், காயன் கொல்லை-காயங் கொல்லேவ எனவும், புளியங்கடவை-புளியங்கடவல எனவும், மருதங்கல்லு-மரதன்கல எனவும் உருமாறியுள்ளது. எனவே இவற்றை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேசமயம் முற்றிலும் சிங்களப் பெயர்களாக மாற்றமடைந்த தமிழ்க் கிராமங்களை இன்று அடையாளம் காண முடியாமல் உள்ளது. உதாரணத்திற்கு புளியங்குளம் எனும் தமிழ்ப்பெயர் “சியம்பலா கஸ்வெவ” எனவும், விளாங்குளம் எனும் தமிழ்ப் பெயர் “திவுள் கஸ்வெவ” எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும் தமிழ்க் கிராமங்கள் என அடையாளம் காணக்கூடிய பல கிராமங்கள்  அனுராதபுரம் மாவட்டத்தில் காணப் படுகின்றன.

இம்மாவட்டத்தில் மொத்தமாக 21 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 694 கிராம சேவகர் பிரிவுகளும், 3085 கிராமங்களும் அடங்குகின்றன. இக்கிராமங்களில் 446 தமிழ்க் கிராமங்கள் அடையாளம் கண்டேன். பல நாட்கள் ஆராய்ந்து, மிகுந்த முயற்சி எடுத்து இவற்றின் தமிழ்ப் பெயர்களைக் கண்டறிந்தேன். இது மிகக்குறைந்த தொகையே. ஏனெனில் அடையாளம் காண முடியாத வகையில் பல தமிழ்க் கிராமங்கள் உள்ளன.

அடையாளம் காணப்பட்ட 446 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் படி வரிசைப் படுத்தினேன். அவையாவன.

மிகுந்தலை உதவி அரசாங்க அதிபர் பிரிவு-

53 கிராமங்கள்.

வேலன்குளம், கட்டமான்குளம், கல்மடு, சின்ன சிப்பிக்குளம், பனிச்சகல்லு, புதுக்குளம், சுருக்குளம், பெரியகேம் பிக்குளம், வெறுப்பன்குளம், மாங்குளம், முந்திரிப்பூக்குளம், நொச்சிக் குளம், கம்மல் குளம், கன்னாதிட்டி, பிராமண கோட்டை, இட்டிக்கட்டு, காசிமடு, கட்டம்புகாமம், கைப்பிட்டி, வேம்புக்குளம், குஞ்சிக்குளம், குருந்தன்குளம், மன்னயம் குளம், சிறுக்குளம், கூளன்குளம், முதலிப்பன்குளம், சங்கிலிக்குளம், அளப்பன்குளம், கல்குளம், கரடிக்குளம், மருதன்குளம், மருதன்கல்லு, சின்னக்குளம், சாய்ப்புக்கல்லு, சின்னமருதங்குளம், மரதன்குளம், பூவரசங்குளம், புதுக்குளம், நல்லபாம்புக் குளம், குருந்தன்குளம் (மிகுந்தலை), மேல் கரம்பன்குளம், கீழ் கரம்பன்குளம், காயங்குளம், கொட்டமான் குளம், குறிஞ்சான் குளம், பொத்தானை, இலுப்பைக் கன்னியா, சீப்புக்குளம், சங்கிலிக்குளம் (மிகுந்தலை), உக்குலன் குளம், காட்டுக்குளி, வெள்ளமொறானை, வேள்ளாளர் காமம்

நுவரகம் பலாத்த மத்தி-உதவி அரசாங்க அதிபர் பிரிவு –

60 கிராமங்கள்.

பசவக்குளம், சின்னப்பன்குழி, கட்டைக்காடு, ஆலங்கட்டு, பெரியசேனை, ஒட்டுப்பள்ளம், கல்பாலம், சமுளங்குளம், ஆலங்குளம், எட்டிக்குளம், புளியங்குளம்(ஆசிரிகம), சம்புக்குளம், பண்டார புளியங்குளம், புளியங்குளம், கொக்குச்சி, பிஞ்சுக்குளம், வீரன்குழி, கருக்கன்குளம், அத்திக்குளம் (கம்பிரிகஸ்வெவ), கல்குளம், இத்திக்குளம், படருக்குளம், கல்குளம் (ஹெலம்பகஸ்வெவ), குளுமாட்டுக்கடை, நொச்சிக்குளம், பாண்டிக்குளம், புதுக்குளம், வேம்புக்குளம், அத்திக்குளம், ஆலங்குளம், கரம்பை, கரம்பைக்குளம், மகா புலங்குளம், மேல்ஓயாமடு, மேல்அத்திக்குளம், மேல் புளியங்குளம், நீராவி, ஈச்சங்குளம், பெரியபங்குழி, பெருமியன் குளம், இலுப்புக்குளம், நெல்லிக்குளம், புசியன்குளம், கோப்பாகுளம், தனயன்குளம், ஆண்டியாகுளம், தெப்பன் குளம், இலுப்பன் கடவை, உலுக்குளம், புலங்குளம், கள்ளஞ்சி, திரப்பனை, மேல்புலங்குளம், நெலுங்குளம், பாண்டித்தன்குளம், பண்டத்தான்குளம், புஞ்சிக்குளம், தட்டான் குளம், சமுளங்குளம், மதுவாச்சி.

கல்னேவ உதவி அரசாங்க அதிபர் பிரிவு-

9 கிராமங்கள்.

கள்ளன்குடி, கள்ளஞ்சி, கட்டருகாமம், கருவேலமரக் குளம், சின்ன ஒத்தப்பாகம், பெரிய ஒத்தப்பாகம், நாககாமம், பத்தினிகாமம், வெறுங்குளம்.

ஹொரவபொத்தான உதவி அரசாங்க அதிபர் பிரிவு –

14 கிராமங்கள்.

ஆனைவிழுந்தான், தமிழர்குளம், உறவுப்பொத்தானை, சின்னப் புளியங்குளம், அங்குநொச்சி, முக்குவர்குளம், காயன் கொல்லை, பறங்கியர்வாடி, புளியங்கடவை, ரத்தமலை, மூக்களன்சேனை, வீரச்சோலை, மதுவாச்சி, வேலன்கல்லு.

(மிகுதி தொடரும்)

என்.கே.எஸ்.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments