அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவினர் தம்மை யாரென இனங்காட்டிக் கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருந்தனர். லெப். அனித்தாவும் தன்னை வெளிப்படுத்தாமல் தாயகத்துக்கான பணிகளில் ஈடுபட்டார்.
அனித்தாவின் வேலை மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டது. இருவேறு பண்பாடுகளைக் கொண்ட தமிழ், இஸ்லாமிய சமூகத்தவரிடையே பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் எளிமையான வாழ்வைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராகி நிதானத்துடனும் கவனத்துடனும் செயலாற்றத் தொடங்கினார்.
இந்திய இராணுவ வருகையின் பின் அனித்தாவின் செயற்திறன் அம்பாறைக்கும் தேவைப்பட்டது. வேலைகள் விரிவாக்கப்பட்டன. எடுத்த பணியை முடிப்பதற்காகப் பல தடவைகள் பல படைத்தளங்களைக் கடந்து அம்பாறைக்கும் மட்டக்களப்புக்குமாக அவர் போய்வரவேண்டியிருந்தது.
தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் பகைத்தளங்களைக் கடந்து போய் வருகின்ற அனித்தா 1988.11.28 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டு, தேசத் துரோகிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வழியிலேயே சயனைட் அருந்தி தன்னை அழித்துக்கொண்டார்.
ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா.