
வீர வணக்கம்.! யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988
வீர வணக்கம்.! யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை, எதிரியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ் மாவட்ட தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்று. இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள்.
அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள். கேணல் கிட்டு அவர்களின் தலைமையில் யாழ் மாவட்டம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது, சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டபோது, அங்கிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர்.
சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் ஒருவரான இம்ரான் அவர்கள் உள்ளே நுழைந்த போது எதிரியின் சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பெரிய காயம் ஏற்பட்டது. கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கேணல் கிட்டு அவர்களின் தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்.
அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப்படுகின்றார். தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாக, பொறுப்பாளர்களாக, தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.