×

ஈகைச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் சிந்தனைகளிலிருந்து…

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும். விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.

மக்கள் அனைவரும் எழுட்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது. நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே!

உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும். எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், கருதப்படும்.

நான் ஆத்மரீதியாக உணர்கிறேன்; இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எனது மக்கள் நிச்சயமாக விடுதலையடைவார்கள். ஒரு மாபெரும் சதிவலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்கவேண்டும். என் போராட்ட வரலாற்றுச் சாதனைகளையிட்டு நான் மாபெரும் மகிழ்ச்சியும் பூரண திருப்தியும் அடைகிறேன்.

எமது போராட்டத்தை அமைதி தழுவியதாகவே அல்லது இரத்தம் தோய்ந்ததாகவோ அமையவேண்டுமெனத் தீர்மானிக்கவேண்டியவர்கள் இங்குள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களே! சுதந்திரத்திற்கு விலையாக எங்கள் உயிரையே கொடுக்கத் தயாராக உள்ளோம். மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தை எனது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து இறந்த ஏனைய போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.

மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? இறப்புக்குப் பயந்து இனத்தை அழியவிட முடியுமா?இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் போது, இந்தியா எமது நிலைப்பாட்டை ஆதரிக்கவேண்டி ஏற்படும்

எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள். எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள்.

நன்றி: எரிமலை சஞ்சிகை (புரட்டாதி, 1994).

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments