×

மாமனிதர் விக்னேஸ்வரன்

மாமனிதர் விக்னேஸ்வரன் அவர்களின் நினைவு நாள் இன்று

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்

08.04.2006

தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக நின்று முனைப்புடன் செயற்பட்ட ஒரு தமிழினப் பற்றாளர் எதிரியின் கோரமான தாக்குதலுக்குப் பலியாகிவிட்டார். இந்த உன்னத மனிதரை இழந்து இன்று எமது தேசம் ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கின்றது.

திரு வ.விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். உயர்ந்த குணவியல்புகள் கொண்டவர். அனைவரையும் கவர்ந்து கொள்ளும் ஆளுமை படைத்தவர். தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு தேசப்பற்றாளர். இவரது இழப்பு தமிழர் தேசத்துக்கு என்றுமே ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.

தமிழீழத் தனியரசே தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். தமிழரின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்து, தமிழரின் நிலத்தையும் வளத்தையும் சூறையாடி, ஒட்டுமொத்தமாக தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்குடன் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனஅழிப்பு போரை இவர் முழுமையாக எதிர்த்து நின்றார். இந்த அழிவில் இருந்து தமிழீழ மக்கள் முழுமையாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதையே தனது குறிக்கோளாக வரித்துக்கொண்டார். வரித்துக்கொண்ட குறிக்கோளில் உறுதி தளராது, பாதை விலகாது பயணித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று, தமிழீழ விடுதலைப் போராட்டதிற்குப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்தார்.

இவரது வாழ்வு திருமலை மண்ணோடும் மக்களோடும் ஒன்றியதாக இருந்தது. இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமைக் குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார். சிங்களப் பேரினவாதிகளின் கெடுபிடிச் செயல்கள் ஒருபுறமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மறுபுறமுமாக தினம் தினம் எத்தனையோ நெருக்குதல்களையும் சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து நின்றபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான துணிச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார். திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இருந்து அந்த மாவட்டத்தில் தமிழ்த் தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெற்று, பலம்பெற்று வளர அயராது உழைத்தார். இவரது பெரும் பணி என்றும் பாராட்டுக்குரியது.

திரு வ.விக்கினேஸ்வரன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

 

மாமனிதர்கள்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments