×

மாவீரர் துயிலுமில்லப் படிமங்கள்

நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்

நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய வேண்டும்.

” செத்தவர் என்றுமை செப்புவமோ உமை
சென்மத்தில் நினைந்திட தப்புவமோ
குத்துவிளக்கதும் நீரல்லவோ நாம்
கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ
நித்தமும் வாழுவீர் மாவீரரே எங்கள்
நெஞ்சுகளில் இள பூவீரரே! “

{ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ நினைவுக்கல்லினையோ அது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு –  மாவீரர் துயிலும் இல்லங்கள் –போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை  நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது படிப்படியாக செய்து விடுகிறேன்.}

மாலை,

  1. 6:05 மணி– நினைவொலி எழுப்புதல்
  2. 6:06 மணி– அகவணக்கம்
  3. 6:07 மணி– பொதுச்சுடர் ஏற்றுதல்… தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றுதல். மாவீரர் நாள் பாடல் ஒலிக்கத்தொடங்கும்

வாழ்கின்ற காலம்வரை
வாழ்த்துங்கள் வீரர்களை
பிறர்கென உயிர்க்கொடை
கொடுப்பது தெய்வீகம்

1991-1996

யாழ்ப்பாணத்தில்

கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்கள் 2005 மாவீரர் நாளுக்கு வெளியிட்ட கட்டுரை ஒன்றிலிருந்து,

“விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன.

  1. பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன.
  2. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன.

போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.

இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.

போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலுமில்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.

புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது.

முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன.

1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.

வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.

தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.

எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்)

அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

  1. களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது.அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன.
  2. மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
  3. அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  4. நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன.
  5. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது.
  6. உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர்.
  7. வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.
  • ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது.
  • 1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு.
  • 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது.
  • 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 05 மணிக்கு மாற்றப்பட்டது.
  • முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும்.
  • அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும்.
  • மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும் – மொழியாகி எங்கள் மூச்சாகி– முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.”

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட எச்சங்கள் இவ்வாறு கண்ணாடிப் பெட்டியில் இடப்பட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  ஏனைய மாவட்டங்கள் பற்றி நானறியேன்!

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் உங்கள்
கனவுதனை நினைவாக்கித் தொடர்கிறோம்

ஈகைச்சுடர்கள்

மக்கள் ஏற்றும் சுடரின் பெயர் ஈகைச்சுடர் என்பதாகும்

விதைகுழி

மண்ணில் விதையாய் விழுவது
மீண்டும் மீண்டும் முளைப்பது என்றும்
மீண்டும் மீண்டும் முளைப்பது
எங்கள் மாவீரர் தானது!
தமிழா உன் திருநாளாம் 
மாவீரர்கள் தினமதுதானே!

விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர், பெரும்பாலான இடங்களில்

போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர்

பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது இரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு

வித்துடல் மேடை

மாவீரர் துயிலுமில்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு மாவீரரின் சந்தனப் பேழையானது அங்குள்ள வித்துடல் மேடையில் வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்படும். இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்கு ஆகும்.

தமிழீழத் தலைநகர்

திருக்கோணமலையில் இருந்த ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

இது சம்பூரில் அமைந்திருந்தது. இதன் சிறப்பு யாதெனில் தமிழீழத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களிலே மிகவும் வேறுபாடான தோற்றங்கொண்ட கல்லறைகளாக இங்கிருந்த கல்லறைகள் காணப்பட்டன.

இந்தச் சாரணர்கள் அங்கு வரும் மாவீரர் பெற்றொருக்கு அவர்களின் செல்வங்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் இருக்கும் விதப்பான இடத்தினை குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்தக் கையில் இருக்கும் ஒற்றையில் மாவீரர்களின் பெயர் விரிப்புகள் மற்றும் கல்லறை எண்கள் உள்ளது. அதை வைத்து விதப்பான மாவீரரின் பீடத்தின் இடத்தை தெரிவிப்பார்கள்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments