×

“ஓயாத அலைகள்…”

“ஓயாத அலைகள்…”

இராணுவ பரிமாணத்தைப் பொறுத்தளவில், ஓயதா அலைகள் இராணுவ நடவடிக்கைக்கும், 1991இல் புலிகள் நிகழ்த்திய ஆ.க.வெ (ஆகய கடல் வெளி) சமருக்குமிடையே சில ஒத்த தன்மைகள் உண்டு. இரண்டும் இருவேறு முனைகளில் – இருவேறு வடிவிலான சண்டைகளைக்கொண்ட, பாரிய இராணுவ நடவடிக்கைகள் ஆகும்.

‘ஆ.க.வெ நடவடிக்கை’ யானது ஆனையிறவுத் தளம்மீதான ஒரு தாக்குதற் சண்டையும் (Offensive),வெற்றிலைக்கேணியில் தரையிறக்கப்பட்ட துருப்பினரைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தைக்கொண்ட தற்காப்புச் சண்டையும் (Defensive) கொண்டமைந்திருந்தது. இதுபோல, ‘ஓயாத அலைகள்’ இராணுவ நடவடிக்கையும், முல்லைத்தீவுத் தளம் மீதான தாக்குதலையும், சிலாவத்தையில் தரையிறக்கப்பட்ட ‘கொமாண்டோக்களுக்கான தற்காப்புத் தாக்குதல்களையும் கொண்டமைந்துள்ளது.

எனினும், ‘ஆ.க.வெ நடவடிக்கை’யின்போது புலிகள் இந்த இரண்டுவகைப் போர் அரங்குகளிலும் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், ‘ஓயாத அலைகள்’ நடவடிக்கையில் இருவகைச் சண்டைகளிலும் புலிகள் முழு வெற்றியைப் பெற்று விட்டனர்.

ஐ.    பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தை அழித்தமை.

ஐஐ.  பெருந்தொகையில் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டமை.

ஐஐஐ. தரையிறக்கத்தை முறியடித்தமை.

ஐஏ.  நிலத்தை மீட்டெடுத்தமை.

இந்தத் தாக்குதலில் 1200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டமை, உலக இராணுவ வரலாற்றில் ஒரு சாதனையாகவே பதியப்படக்கூடியது. நாடுகளுக்கிடையேயான பாரிய யுத்தங்களில் நடைபெறக்கூடிய இத்தகைய பெருந்தொகைச் சாவுகள், ஒரு விடுதலைப்போரில் கெரில்லாமுறையிலான ஒரு திடீர்த் தாக்குதலில் நிகழ்வது என்பது அரிதான விடயமாகும். 1954 ஆம் ஆண்டு, தீன்-பின்-பூ(வியடநாம்) சமரில், இதேபோன்றதொரு பெரும் அழிவை பிரான்சுப் படைகள் சந்தித்துள்ளன. ஆனால், அந்த முற்றுகைச்சமர் 56 நாட்கள் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது. ஆதில் 8000பிரான்சுப் படையினர் பலியாகினர்; ஆனால், அதைவிட அதிக தொகையான வியட்னாம் போராளிகள் பலியாகினர்.

குறைந்த எண்ணிக்கையான போராளிகள் வீரச்சாவடைந்து பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரைக் கொன்றது. முல்லைத்தளத் தாக்குதலின் சிறப்புப் பரிமாணம் ஆகும். அத்துடன், இரண்டு மூன்று நாள் சண்டையில் ஆயிரத்திற்கும் அதிகமான அரசுப்படையினர் கொல்லப்பட்டமை, அதிசிறப்பு வாய்ந்த ஒரு இராணுவ நிகழ்ச்சியாகும். மொத்தத்தில் இராணுவ கின்னஸ்’ புத்தகத்தில் பதியப்படவேண்டிய ஒரு வீரசாதனை என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

‘ஒப்பறேசன் தவளையில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ‘ஓயாத அலைகளுக்குள்’சிக்கிச்செத்த படையினரின் தொகை, ஏறக்குறைய இருமடங்காகும்.

‘சூரியக்கதிர்’களுடன் புலிகள் இயக்கத்தின் பற்களும் – நகங்களும் பிடுங்கியெறியப்பட்டு விட்டன என்ற அரசின் பரப்புரையை நம்பிய சிங்கள மக்கள், செய்தி அறிந்து திகைத்திருப்பார்கள். எனினும், படையினர் மத்தியில் பீதியூட்டும் விடயம் யாதெனில்இ இந்த இராணுவ அழிவு எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய முடியாத கையறுநிலையில் இராணுவத் தலைமை இருப்பதாகும். ‘ஓயாத அலைகள்’ நடவடிக்கையில் புலிகள் பெற்ற இராணுவ வெற்றியின் உளவியல் பரிமாணம் இதுவாகும்.

அத்துடன் தளத்தினுள் சிக்குண்ட படையினரை மீட்டுவர அனுப்பிய ‘கொமாண்டோ’ படையினரையே மீட்டெடுக்க வேண்டிய அளவுக்கு களநிலைமை சிக்கலாகிவிட்டது!

முல்லைத்தீவுத் தளம் மீதான தாக்குதலைப் பொறுத்தவரை காலம் முக்கிய இடத்தை வகித்துள்ளது.

‘புலிகளின் பலத்தில் 70வீதம் அழிக்கப்பட்டுவிட்டது: மிகுதி 30 வீதத்தையும் வன்னியில்வைத்து அழிக்கப்போகின்றோம்’ என்ற ரத்வத்தவின் எண்கணித விமர்சனம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்திருந்த காலம் அது

புலிகளின் இயக்கத்தின் இறுதி அத்தியாயம் எப்படி அமையப்போகின்றது என்று, உலகம் அவதானித்துக்கொண்டிருந்த நேரம் அது-

இத்தகையதொரு கஷ்டகாலத்தில் – அகில உலகுமே ஆச்சரியப்படும் வகையில் – முல்லைத்தீவுத் தளத்தை நிர்மூலம் செய்து,தமிழினத்திற்கு ஒரு பெரிய வெற்றியைத்தலைவர் பிரபாகரன் பெற்றுக்கொடுத்துள்ளார்.

1200 இற்கும் மேற்பட்ட படையினரைக் கொன்றது மட்டுமல்ல – ‘ஆட்டிலறி’ ஆர்.சி.எல், பவள் மற்றும் 120 எம்.எம் மோட்டர்களுடன் பெருந்தொகையான வெடிபொருட்களையும் கைப்பற்றியதோடு, ஒரு பீரங்கிக் கப்பலையும் அழித்து,சிங்களப்பேரினவாத பூதத்திற்கு புலிகள் ஒரு ‘அதிர்ச்சி வைத்தியம்’ செய்துள்ளனர். இந்தக் கதைகள் வெளியே உறுதிப்படுத்தப்பட்டபோது உலகம் ஆச்சரியப்பட்டது.  விமர்சகர்கள் வாயடைத்துப்போயினர். இந்த இராணுவ அற்புதம் எப்படி நடந்தது என்று அவர்கள் மலைத்துப்போயினர், இதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக உலகப்போர் வரலாற்றை மீட்டுப் பார்த்தனர்.

1968 ஆம் ஆண்டு, அமெரிக்கப் படையினர் மீது வியட்நாம் போராளிகள் நிகழ்த்திய – ரெற் தாக்குதல் (Tet offensive) என்று அழைக்கப்பட்ட – ஒரு பெருந்தாக்குதலை முல்லைத்தீவுத் தளத்தாக்குதலுடன் ஒப்பிட்டு உலகச் செய்தியாளர் ஒருவர் வர்ணித்திருந்தார்.

அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தென் வியட்னாமின் பிரதான நகரங்கள் மீது ஒருநாள், திடீரென வியட்கொங் இயக்கம் போர்தொடுத்தது. இதற்கு ‘ரெற் தாக்குதல்’ என்று பெயரும் இட்டது.

இந்தத் தாக்குதலிலும் காலம் மிக முக்கிய இடத்தை வகித்தது. தென் வியட்னாமில் இருந்து வியட்கொங் இயக்கத்தைத் தாம் நசுக்கிவிட்டதாக, அமெரிக்கத் தலைமை தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த காலம் அது: எல்லாம் முடிந்துவிட்டது என்று அமெரிக்க மக்களும் நம்பியிருந்த வேளை அது. அந்தச் சூழ்நிலையில்தான், ஒருநாள் விடிகாலை, ‘ரெற் தாக்குதல்’ என்ற பெயரிலான அந்தப் பாரிய மரபுவழித் தாக்குதலை, அமெரிக்கப் படைநிலைகள் மீது வியட்கொங் போராளிகள் தொடுத்தனர். இந்தப்பெருந்தாக்குதல் அமெரிக்க அரசுக்குப் பெரிய அரசியல் நெருக்கடியைக் கொடுத்துவிட்டது.

இதுபோலவே, ‘புலிகளின் கதையும் முடிந்துவிட்டது’ என்று சிங்கள அரசு பிரகடனப்படுத்தியிருந்த காலகட்டத்தில்தான்,முல்லைத்தீவுத் தளம்மீதான பெருந்தாக்குதலும் நிகழ்ந்தது.

எனினும் வியட்னாமின் புகழ்பூத்த தளபதி ஜெனரல் ஜியாப் தலைமை ஏற்று நடாத்திய ரெற் தாக்குதலுக்கும், தலைவர் பிரபாகரன் திட்டமிட்டு தலைமைதாங்கி நடாத்திய ‘ஓயாத அலைகள்’ தாக்குதலுக்குமிடையே அரசியல் மற்றும் உளவியல் பரிமாணங்களில் ஒற்றுமை இருந்தாலும் இராணுவ பரிமாணத்தில் வேறுபாடுகள் பல உண்டு.

‘ரெற் தாக்குதல்’ அமெரிக்கப்படையினரைத் திணறடித்தது என்பது உண்மை; ஆனால் ஒரு சில நாட்களில் அப்பெருந்தாக்குதலை அமெரிக்கப் படைகள் முறியடித்துவிட்டன. ஆகவே ‘ரெற் தாக்குதல்’ இராணுவ ரீதியில் வியட்கொங் இயக்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

ஆனால் ‘ஓயாத அலைகள்’ நடவடிக்கையானது அரசியல் மற்றும் உளவியல் பரிமாணங்களுடன் – ஒரு பாரிய இராணுவ வெற்றியையும் புலிகள் இயக்கத்திற்குப் பெற்றுக்கொடுத்துள்ளது. ‘ரெற் தாக்கு’ தலைப் போலல்லாது இங்கே தாக்குதல் இலக்கைப் புலிகள் முழுமையாகக் கைப்பற்றி – தம்வசப்படுத்தி விட்டனர். அங்கிருந்த சிங்களப்படையை முழுமையாக அழித்து விட்டனர். எதிரி வைத்திருந்த ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றினர். எதிரி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலப்பகுதியையும் மீட்டுவிட்டனர்.

‘ரெற் தாக்குதலை’ ‘ஓயாத அலைகள்’ தாக்குதலுடன் இணைத்துப்பார்த்த அந்த வெளிநாட்டுச் செய்தியாளரின் ஒப்பீடு,புறச்சூழல் ரீதியாக மிகச்சரியானதே.

எனினும், ‘ஓயாத அலைகள்’ தாக்குதலின் இராணுவ பரிமாணத்தை 1941இல் ஜப்பான் நடாத்திய பேள் துறைமுகத்தாக்குதலுடன் சில விடயங்களில் ஒப்பிட முடியம்.

‘பேள்’ துறைமுகத்தின் பலம் உட்புக முடியாத அதன் பாதுகாப்பான அமைவிடம் என்பவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய படைகள் நடாத்திய துணிகரமான – ஆச்சரியமூட்டும் வெற்றித்தாக்குதல் இராணுவ வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

தாக்குதலின் தன்மை எதிரிப்படைக்கு ஏற்படுத்திய அழிவு என்பவற்றுடன் ஒப்பிடும்போது ‘பேள்’ துறைமுகத்தாக்குதல் ‘ஓயாத அலைகள்’ நடவடிக்கையின் சில இராணுவ அம்சங்களுடன் ஒப்புநோக்கத்தக்கது.

கடந்த வருடம் (1995), புலிகள் இயக்கம் பல இராணுவப் பின்னடைவுகளைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது காரணமாக விடுதலைப்போராட்டம் ஒரு ஸ்தம்பித நிலையில் நின்றது.

இவ்விதம் ‘போராட்ட வண்டி’ புதையுண்டுபோகும் சந்தர்ப்பங்களிலெல்லாம், தலைவர் பிரபாகரன் தானே நேரடியாக முன்னின்று போராட்ட வண்டியை முன்னோக்கி உந்தித்தள்ளும் வரலாற்றுப் பொறுப்பை ஆற்றிவந்துள்ளார்.

‘ஓயாத அலைகள்’ இராணுவ நடவடிக்கை வாயிலாக இம்முறையும் அதையே செய்துள்ளார்.

தென்மராட்சி – வடமராட்சியிலிருந்து போராளிகளை வன்னிக்குப் பின்வாங்குமாறு உத்தரவிட்ட பின்னர் வன்னியில் ஒரு பாரிய தாக்குதலை நடாத்தி இராணுவபல சமநிலையில் தமிழினத்திற்குச் சார்பான மாற்றத்தை ஏற்படுத்த தலைவர் தீவிரமாக உழைத்தார் – முல்லைத்தீவு இராணுவத் தளத்தை நிர்மூலமாக்கி அந்த பலச் சமநிலையை உருவாக்க முடிவெடுத்தார்.

ஏற்கனவே பல இராணுவ இழப்புக்களை அடுத்தடுத்துச் சந்தித்த நிலையில் முல்லைத்தளம் மீதான தாக்குதலும் புலிகளுக்கு ஒரு இராணுவப் பின்னடைவைக் கொடுக்குமாயின் போராட்டத்தின் தலைவிதி என்னவாகும் என்பதையும் தலைவர் தெரிந்து வைத்திருந்தார். எனவே, தாக்குதலிக் வெற்றியை நூறு வீதம் உறுதிப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இருந்தது இதனால் தாக்குதலின் முழுப்பொறுப்புக்களையும் தலைவர் தன்வசம் எடுத்தார்.

தாக்குதலுக்கான பயிற்சி, வேவு, சமரின் போதான மருத்துவம், வழங்கல் தேவைகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தாக்குதலணிகளை இடம் மாற்றுதல் என்று….. தாக்குதல் தொடர்பான எல்லா வேலைகளையும் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தார்.

திட்டங்களின்படி அச்சொட்டாகத் தாக்குதல்களை நடாத்தவம் – தாக்குதல் தொடர்பான இரகசியம் பேணலை முழுமையாக உறுதிப்படுத்தவும் அவ்விதம் செய்தார்.

முல்லைத்தீவுத் தள வெற்றிக்கான அடிப்படைகளில் ‘இரகசியம் காத்தல்’ முக்கிய இடத்தை வகித்தது. அத்துடன் அற்புதமான தாக்குதல் திட்டம் வெற்றியின் முதுகெலும்பாக இருந்தது. அதேவேளை தாக்குதலின்போது காட்டப்பட்ட வேகமும், – திகைப்பூட்டலும் வெற்றிக்கு அணிசேர்த்தன.

இந்த வகையில் சோர்வடைந்திருந்த தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் வகையிலும் – தமிழர் படையின் ஆயுதபல உயர்ச்சிக்கு வழிகோலும் வகையிலும் ‘ஓயாத அலை’ களின் வெற்றி அமைந்து விட்டது.

இந்தப் பெருந்தாக்குதலைத் திட்டமிட்டு – நெறிப்படுத்தி நடாத்தியதன் மூலம் தலைவர் பிரபாகரன் ஒரு வரலாற்று வெற்றியைத் தமிழினத்திற்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

‘ஓயாத அலைகளி’ல் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையைப்போலவே அதில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களின் வகைகளும் – தொகைகளும் போராட்டத்திற்குப் புதிய பலத்தைக் கொடுத்துள்ளன.

முதன்முதலாக புலிகளின் கைகளிற்கு நடுத்தர தூர வீச்சைக் கொண்ட (15.கி.மீ. பாயக்கூடிய) ‘ஆட்லறி’களில் இரண்டு வந்து சேர்ந்துள்ளன. அத்துடன் ஆர்.சி.எல். மற்றும் 120 எம்.எம் (ஐந்து அங்குல)  மோட்டர்களுடன் அவற்றிற்கான எறிகணைகளும் கணிசமான அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

மரபுவழிப் படையாக வளர முனையும் புலிகளின் முயற்சிக்கு, கைப்பற்றப்பட்ட இந்த மரபுப்போர் ஆயுதங்கள் பெரிதும்  உதவியுள்ளன. இந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு – எதிர்காலத்தில் – போரில் பல அதிசயங்களை தலைவர் பிரபாகரன் நிகழ்த்திக்காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கைப்பற்றப்பட்ட ஆயதங்களின் வகைகள், கொல்லப்பட்ட படையினரின் தொகை என்ற வகையிலான இராணுவ பரிமாணம் ஒருபுறம் இருக்க ‘ஓயாத அலைகள்’ இராணுவ நடவடிக்கை, சிங்களர் – தமிழர் படைகளுக்கிடையேயான போர் வரலாற்றிலும் ஒரு பிரத்தியேக இடத்தை வகிக்கப்போகின்றது.

சிங்கள அரசின் முப்படைப் பலப்பிரயோகத்துடன் நடந்த கடல் – வான்வழித் தரையிறக்கத்தை முறியடித்த செயலே அதன் பிரத்தியோக முக்கியத்திற்குக் காரணமாகும். தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்ட வரலாற்றில் இந்தச் சம்பவம், ஒரு மைல் கல்லாக அல்லது போராட்ட வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் ஒரு படிக்கல்லாக அமையும் என்பது உறுதி.

உதவிப்படை  என்பது மரபு வழிப் போர்முறையில் குருதிச்சுற்றோட்டம் போன்றது. நெருக்கடிக்குள் சிக்குண்டு திண்டாடும் படைத்தளங்களுக்குப் புதிய சக்தியை ஊட்டி அதைப்பாதுகாப்பது இந்த உதவிப்படை தான்.

கடற்படைப் பலத்தாலும் வான்படைப் பலத்தாலும் சிலாவத்தையில் தரையிறக்கப்பட்ட ‘கொமாண்டோ’ துருப்பினரைக் கொண்ட இந்த உதவிப்படை, தனது இலக்கை அடையமுடியாது – வந்தவழியே திரும்பிச்சென்றதற்குக் காரணமான புலிகளின் மரபுப்போர் வளர்ச்சிதான், சிங்களப் பேரினவாத இராணுவ சக்திகளுக்கு அதிக கவலையை ஏற்படுத்தியிருக்கும்.

தரையிறக்கப் போர்ச் செயற்பாடுகளை இரண்டு பிரதான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.

ஓன்று ‘கொமாண்டோ’ பாணியிலான தரையிறக்கம் மற்றது, மரபுவழித் தரையிறக்கம்.

‘கொமாண்டோ’ பாணியிலான தரையிறக்கம் கடல்வழிமூலமும் நடக்கும்; வானவழிமூலமும் நடக்கலாம். இந்த வகைத்தாக்குதல், ஆச்சரியமூட்டலை அடிப்படையாகக் கொண்டவை, தரையிறக்கம் இரகசியமாக நடைபெறும்.  வந்தா வா! போனால் போ! என்கின்ற துணிச்சலான நிலை இந்தவகைத் தறையிறக்கத்தில் இருக்கும்; ஈடுபடும் படையினரின் எண்ணிக்கையும் மிகக்குறைவாக இருக்கும்;  ஏதாவது நாச வேலைகள் செய்ய அல்லது எவராவது ஒருவரைக்குறிவைத்து அல்லது ஒரு சிறிய இராணுவ நிலையை அழிக்க இந்தவகைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் இந்த முயற்சி தோல்வியைத் தழுவினாலும் குறித்த ‘கொமாண்டோ’க்களின் இழப்பு என்கின்ற சிறிய விடயத்துடன் அதன் இராணுவ பரிமாணம் நிறைவுபெறும். இத்தகைய இழப்பையிட்டு சம்மந்தப்பட்ட இராணுவத் தலைமை பெரிதாகக் கவலைகொள்ள மாட்டாது.

ஆனால் மரபுவழித்தரையிறக்கம் இதற்கு முற்றிலும் நேர்மாறானது.

கடல் – வான் படைபலத்துடன் பெருமெடுப்பில் இந்தவகைத்தரையிறக்கம் நடக்கும். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்ற அல்லது அபாயத்தில் இருக்கும் ஒரு படைத்தளத்தை மீட்க என்று பாரிய இராணுவ இலக்குகளே இந்தவகைத் தரையிறக்கங்களின் நோக்கங்களாகும்.

இத்தகைய முயற்சிகள் தோல்வியடைவது என்பது பெருமளவிலான உயிர்ச்சேதத்தையும் ஆயுத இழப்பையும் உண்டாக்கும். அத்துடன் அரசுப் படையினதும் அதன் எதிர்ப் படையினதும் பலம் பற்றிய இராணுவ யதார்த்தத்தையும் அது புலப்படுத்தும்.

சுலாவத்தைத் தரையிறக்கம் ஒரு மரபுவழித் தரையிறக்கமாகும். தரையிறக்கப்பட்ட நோக்கத்தை அடைய முடியாது சிங்களப் படை தோல்விகண்டுவிட்டது, இதை எவரும் மறுக்க முடியாது.

இதன் காரணமாக கடற்பலத்தில் தங்கிநின்று – தரையிறக்கத்தை நம்பி வடபுலப்படை முகாம்களைப் பாதுகாத்து வைத்திருக்க முடியும் என்ற அரசின் இராணுவக் கொள்கைஇ இப்போது சவாலைச் சந்தித்து நிற்கின்றது.

வான்பரப்பு மீதிலும் – கடற்பரப்பு மீதிலும் புலிவீரர்கள் தொடுத்த எதிர்த் தாக்குதல்களையும் எதிர்கொண்டபடி அரசுப்படைகள் தரையிறக்கத்தைச் செய்துவிட்டன. ஆயினும் தரையிறங்கிய சிங்களச் சிறப்புப் படையினருக்கு முன்பாகத் தடுப்புச் சுவர்போல நின்ற புலிகளின் சேனையை ஊடறுத்துக்கொண்டு முன்னேற படையினரால் முடியவில்லை.

முல்லைத்தளம் மீதான தாக்குதல் தொடங்கிய தினமன்றே (18 ஆம் திகதி) மாலையில் உதவிப்படையின் ஒரு அணி தரையிறக்கப்பட்டு விட்டது. அதுவும் தளத்திற்கு மிக அருகில் – சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் – அவர்கள் தரையிறக்கப்பட்டனர். இவர்கள் சாதாரண படையினர் அல்ல. ‘கொமாண்டோ பயிற்சி பெற்ற சிறப்புப் படையினர் சண்டை அனுபவம் மிக்க ‘கொமாண்டோ’ப் படையினர்.

தளம் நோக்கிய இவர்களின் நகர்வுக்கு, கடற்படையும், வான்படையும் உதவின் எனினும் அவர்களது முயற்சி வெற்றிபெறவில்லை. அந்தளவிற்கு புலிகளின் தரைத்தாக்குதல்கள் அமைந்திருந்தன.

1991 ஆம் ஆண்டு வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் தம்மால் செய்ய முடியாததை – ஐந்து வருடங்களின் பின் – புலிகள் சிலாவத்தையில் செய்து முடித்தனர்.

மரபுவழி யுத்த முறையிலான தரைப்போரில் புலிகள் இயக்கம் பெற்றுவரும் வளர்ச்சியையே இந்த வரலாற்றுச் சம்பவம் சுட்டிக் காட்டுகின்றது.

சிலாவத்தை தரையிறக்கம் தோல்விகண்டது காரணமாக – எதிர்காலத்தில் மரபுவழித் தரையிறக்கத்திற்கு அரசுப்படைகள் துணியாதென்ற பிழையான முடிவுக்கு எவரும் வரக்கூடாது. எனினும் இத்தகைய தரையிறக்கங்கள் இனிமேல் சூது விளையாட்டைப்போல அமையும் என்பதையும் சிங்களத் தளபதிகள் மறுக்கமாட்டார்கள்

புரியாத புதிர்!

சூரியக்கதிர் – 1இ 2இ 3 நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தின் போரிடும் திறனை நசுக்கிவிட்டன என்பது, சிங்கள அரசினது கருத்து மட்டுமல்ல் பெரும்பாலான உலக இராணுவ – அரசியல் ஆய்வாளர்களும் அவ்வாறே கருதினர்.

புரிய முகாம் தகர்ப்புகளை புலிகளால் இனிமேல் நடாத்த முடியாது என்றும், அரசுக்கு தலையிடியைக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தாக்குதல்களை மட்டுமே புலிகளால் நடாத்த முடியும் என்றும், அவர்கள் கருத்துக் கூறியிருந்தார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், தீவிரழ் குறைந்த ஒரு போர்முனையை (Low intensive Warfare) மேற்கொள்ளவே புலிகளின் தற்போதைய இராணுவ பலம் இடங்கொடுக்கும் என்று, பெரும்பாலான ஆய்வாளர்கள் ஆரூடம் கூறியிருந்தனர்.

ஆனால், இத்தகைய படையியல் கணிப்பீடுகள் மற்றும் இராணுவ அபிப்பிராயங்கள் அனைத்தையும் ஓயாத அலைகள் மூழ்கடித்துவிட்டது.

தென்மராட்சி – வடமராட்சியிலிருந்து போரிடாது பின்வாங்கிய புலிகளின் செயலைப்புரிந்து கொள்ள முடியாது திண்டாடிய இராணுவ உலகம், முல்லைத்தீவு படைத்தளத்தைப் புலிகள் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தி வெளியானவுடனும், புலிகள் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது விழித்தனர்.

மொத்தத்தில் இராணுவ உலகிற்கு அன்றும் இன்றும் புலிகள் இயக்கம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

தலைவர் பிரபாகரனின் இராணுவச் செயற்பாடுகளில் உள்ள தனித்தன்மைகளே புலிகள் இயக்கத்திற்கு இத்தகைய புதிர்த் தன்மைகளைக் கொடுத்துள்ளன.

புலிகளின் இயக்கம் பற்றிய இராணுவ மதிப்பீடுகளை சமகால ஆய்வாளர்களால் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதற்குப் பிரதான காரணம், அந்த ஆய்வாளர் வைத்திருக்கும் இராணுவ அளவுகோல்கள் தான்.

இந்த அளவுகோல்கள் உலகின் இராணுவ சிந்தனையாளர்கள் மற்றும் புகழ்பூத்த படைத் தளபதிகள் ஆகியோரின் போதனைகள் அனுபவங்கள் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதற்கும் அப்பால் தலைவர் பிரபாகரனின் இராணுவ சிந்தனைகளும் செயற்பாடுகளும், பெரும்பாலும் தனித்தன்மை வாய்ந்தவைகளாக அமைந்துள்ளன. இது காரணமாக, தாம் வைத்திருக்கும் இராணுவ அளவுகோல்களைப் பயன்படுத்திப் பிரபாகரனின் போர்க்கலையைச் சரியாக அளந்து – கணிக்க முடியாது, வல்லுநர்கள் திண்டாடுகின்றனர்.

இதனால்தான், புலிகள் இயக்கம்பற்றி இராணுவ விமர்சகர்கள் கூறும் கருத்துக்கள் – கணிப்புக்களில் அடிக்கடி பெருந்தவறுகள்  ஏற்பட்டுவிடுகின்றன.

என்றைக்குத் தலைவர் பிரபாகரன் தனது போர்க்கலைமுறைகளை விரிவாக விளக்கி உலகிற்கு வழங்குகின்றாரோ அன்றைக்குத்தான், புலிகள் இயக்கம் பற்றிய புதிரும் விடுபடும்!

 

 

Oyatha Alaikal ஆவணம்

விடுதலைப்புலிகள் குரல் 71

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments