×

ஐந்து ஈஸ்வரங்கள்

ஐந்து ஈஸ்வரங்கள்

பஞ்ச ஈஸ்வரங்கள் என்பது இலங்கை தீவின் தற்போது உள்ள நிலப்பரப்பில் ஐந்து வேறு வேறு திசைகளில் சிவனுக்காக கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்கள்.

இவை இராவணன் காலத்தில் இருந்தே இருந்து உள்ளது என்பது தொன்மங்கள் ,வரலாறுகள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது.

  1. முன்னேசுரம் – சிலாபம் (மேற்கு)
  2. திருக்கேதீச்சரம் – மன்னார் (வட மேற்கு)
  3. நகுலேச்ச்சரம் – யாழ்ப்பாணம் ( வடக்கு)
  4. திருக்கோனேச்ச்சரம் – திருகோணமலை ( கிழக்கு)
  5. தொண்டீச்ச்சரம்/சந்திர சேகர ஈச்சரம் – காலி ( தெற்கு)

முன்னேச்ச்சரம்

அழகேச்ச்சரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இப் பிரதேசத்தில் ஐந்து ஆலயங்கள் அமைய பெறப்பட்டுள்ளது. மிக முக்கியமானது பெரியதுமான ஆலயம் சிவன் கோவில். காளி கோவில் ,பிள்ளையார் கோவில், அய்யனார் கோவில் என்பனவும் உண்டு. இது ஆரம்பத்தில் தமிழ் பௌத்தர்களால் ஆதரிக்கப்பட்டு இப்போது சிங்கள பௌத்த ஆலயம் ஒன்றும் அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காளி கோவில் பதினெட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக (இடுப்பு பகுதி வீழ்ந்த இடமாக ) கருதப்படுகின்றது.

திருக்கேதீச்சரம் 

மன்னார் மாவட்ட கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. அக்காலத்தில் இப்பகுதி மிக பிரசித்தமான துறைமுக பகுதியாக மாதோட்டம் என்னும் பெயருடன் விளங்கியது.கேது வழிபட்ட தலம் என்பதால் கேதீச்சரம் என்று அழைக்கப்பட்டது என்பது தொன்மம். திருஞான சம்பந்தர் மூர்த்தி நாயனரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. 1505 போர்த்துகேய ஆக்கிரமிப்பாளர்களால் இடிக்கப்பட்டது. 1910 ல் இவ்வாலயம் மீண்டும் கட்டப்பட்டது.  1952  ஆவணி கும்பாபிசேகம் செய்யப்பட்டது. 1990 க்கு பின்னர் இரு தசாப்தங்கள் பூசைகள் இன்றி உயர்பாதுகாப்பு வளையமாய் சிறைப்பட்டது. தற்போது மீண்டும் பூசைவழிபாடுகள் நடந்து வருகின்றன. இருப்பினும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன.

 நகுலேச்ச்சரம்

யாழ்பாணம் கீரிமலை என்னும் பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் இராவணன் காலத்தில் இருந்தே மிக பிரசித்தமானதாய் இருந்துள்ளது. 1895 ஆம் ஆண்டு மிக முக்கியமான கும்பாபிசேகம் இடம் பெற்றது. 1918 ல் பாரிய தீவிபத்து இவ்வாலயத்தை பாரிய சேதத்துக்கு உள்ளாக்கியது.1955 , 1973 களிலும் கும்பாபிசேகம் இடம்பெற்றது. இங்குள்ள தீர்த்தத்தின் நம்பிக்கை காரணமாக பல நாடுகளிலும் உள்ள யாத்திர்கர்கள் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.

திருக்கோணேஸ்வரம்

இலங்கையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும். இராவணனுடன் நெருங்கிய தொடர்புடைய தலமாகும். குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

மூன்று பெரும் ஆலயங்கள் கொண்டு இருந்த இம்மலை போர்த்துகேயரின் கைப்பற்றலுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டது. தென் கைலாயம், திருகூடம்,மச்சேஸ்வரம் என்னும் பெயர்களாலும் இத்தலம் அழைக்கபட்டு உள்ளது.

 தொண்டீச்ச்சரம்

தென்னாவரம் ,தொண்டீச்ச்சரம் என்று அழைப்பட்ட ஆலயம் தற்போது முழுமையாக தன் அடையாளத்தையே இழந்து விட்டது.

இபின் பத்தூட்டா முதலிய பிற நாட்டு யாத்திரீகர்களும் வந்து, பார்த்து, வியந்து பாராட்டி, தமது வரலாற்று ஏடுகளில் எழுதி வைத்துச் செல்லுமளவுக்கு இத் திருக்கோயில் அழகிலும், செல்வாக்கிலும், தெய்வீகத்திலும் சிறந்து விளங்கியிருக்கின்றது.
தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், அத் திருக்கோயில் சைவ, வைஷ்ணவ பேதங்களுக்கு இடமளிக்காமல், முழு இந்து மதத்தவர்க்கும் பொதுவாக விளங்குமாறு, சிவபெருமான், மகா விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் ஒரே வளாகத்துள்ளேயே கோயில்களைக் கொண்டு அமைந்திருந்தது என்பதாகும்.

தற்போது முழுமையாக சிங்களவர்களின் விஸ்ணு கோவிலாக மாறியுள்ளது. சிங்களக் கலாச்சார முறையில் ஒரு கூரைக் கோயிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கோயிலினுள்ளே காணப்படும் மகாவிஷ்ணுவின் திருவுருவம் நீல வண்ணத்தில், சிங்களக் கலாசார முறையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், கோயிலின் சுவர்களும் நீல வண்ணத்தில் காட்சியளிக்கின்றன.ஒட்டு மொத்த இந்த பஞ்ச ஈச்சரங்களும் போர்த்துகேயரால் தமது பிரமாண்டத்தையும் செல்வங்களையும் அடையாளத்தையும் இழந்தன. போர்த்துகேயர் மற்றும் பிற மேலைத்தேய ஆக்கிரமிப்பு நிகழாது இருந்து இருப்பின் இவை பல ஆயிரம் ஆண்டு வரலாற்றுடன் கம்பீரமாக இருந்து இருக்க கூடும்.

http://thuruvi.com/பஞ்ச-ஈஸ்வரங்கள்/

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments