×

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள பிரதேசம் பரந்தன் ஆகும். இந்த மாவட்டத்திற் காணப்படும் நகரங்களில் முதன்மையான ஒரு நகரமாக பரந்தன் விளங்குகின்றது. இங்கு வாழ்பவர்களது பிரதான தொழில் நடவடிக்கையாக விவசாயம் காணப்படுகின்றது. அத்தோடு சிலர் பகுதிநேர மீனவர்களாகவும், கூலித் தொழில் செய்பவர்களாகவும் உள்ளார்கள்.

பரந்தன் நகரமானது, யுத்தகாலத்தில் பல்வேறு இராணுவ நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக இருந்தது. குறிப்பாக ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து இலங்கை – இந்தியப்  படையினர் 1987 இந்த பின்பு சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களுக்கும் முகம்கொடுத்த பிரதேசமாக இருந்தது.

28.06.1986 அன்று அதிகாலை 5.15 மணியளவில் ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து எறிகணைத் தாக்குதல் செய்தவாறு பரந்தனை நோக்கி முன்னேறி வந்த இராணுவத்தினர் நகரின் பிரதான வீதியை அண்டியுள்ள வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு நின்ற விவசாயிகள் ஏழு பேரைக் காரணமின்றிக் கைதுசெய்து, அவர்களை ஒன்றாகக் கயிற்றினால் பிணைத்துக் கட்டி சித்திரவதை செய்து கொன்ற பின்னர் உயிரற்ற அவர்களது உடல்களை அங்கிருந்த கழிவாற்றுப் பகுதியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

அன்றையதினம் 03.30 மணியளவில் வயல் வேலைக்காக வந்தவர்கள் இராணுவத் தாக்குதலினால் உயிரிழந்து கிடந்தவர்களைக் கண்டு அவர்களது உறவினர்களிடமும் கிராம மக்களிடமும் தெரிவித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் அவர்களது உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்தார்கள்.

இவ்வாறு இராணுவத்தினரின் தாக்குதல்களையும் கெடுபிடிகளையும் தொடர்ந்து பரந்தன் பகுதி மக்கள் 1980களில் சொந்த இடங்களை விட்டு வெளியேறினார்கள்.

28.06.1986 அன்று பரந்தன் விவசாயிகள் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. ஜோசப் செபஸ்டியன் (வயது 44)
  2. வைத்திலிங்கம் பாலசுப்பிரமணியம் (வயது 23)
  3. முனுச்சாமி உதயசூரியன் (வயது 17)
  4. நாராயணப்பிள்ளை நடராசா (வயது 75)
  5. வினாசித்தம்பி சண்முகநாதன் (வயது 18)
  6. சுப்பையா கனகசபை (வயது 39)
  7. ஆறுமுகம் சிவஞானசுந்தரம் (வயது 22)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments