×

நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம்

நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம்

தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம்

வீரப்பிறப்பு : 25-01-1950

வீரச்சாவு : 13-05-1988

இது கதையல்ல, தமிழினத்துரோக வரலாற்றின் ஒரு பதிவு. இது சம்பவமல்ல, ஓங்கி ஒலித்த மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிகழ்வு.

திரு.கனகரெத்தினம் அதிபர் அவர்களின் நினைவுகளை எழுதுகின்றபோது மனதிலிருந்து எழுகின்ற நிழலாகஜமகா(jamaka1 25) உந்துருளியில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைக்கு 1982களில் வந்து செல்லும் அந்த சிரித்த முகம்தான் அடிக்கடி நினைவில் ஊசலாடிப்போகின்றது.

இப்படியான நல்ல தன்னார்வல தமிழ்ப்பற்றுக்கொண்டவரைத்தான் இந்தப்பாவிகள் அழித்திருக்கிறார்கள். 1987ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைத்தொடர்ந்து இந்தியப்படையினரும்தாய்மண்ணில் வந்திருந்தனர். இவர்களுடன் இணைந்து EPRLF,TELO,ENDLF ஒட்டுக்குழுவினரும், சிங்களப்படையினருடன் சேர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்த PLOT ஒட்டுக்குழுவினரும் தாய்மண்ணில் தங்கள் அடாவடித்தனங்களையும், அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர்.

ஈவிரக்கமின்றி சொந்த இனமக்களுக்கெதிராக கொலைவெறித்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின் போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர்முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது.

அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரைஉண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார்.

இவ் அறவழிபோராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்களுக்குள் ஒருவராகவும் கனகரெத்தினம் இருந்தார். இதனால் கனகரெத்தினம் அவர்களின் வீட்டுக்குச் சென்ற EPRLF ஒட்டுக்குழுவினரும் இந்தியப் படையினரும் அவரை வீட்டில் வைத்து சுட்டுகொலை செய்தார்கள்.

அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவி  24 நாட்களில் E.P.R.L.F ஒட்டுக்குழுவினரும் இந்தியப்படையினரின் தலைமையிலான முதல் அழிப்பாக  திரு.கனகரெத்தினம் அதிபரை இழந்தோம்.

சிங்களப்படையினர் காலத்தில் மக்கள் குழு அமைப்பு ஊடாக மக்கள் பணியில் செயல்பட்ட இவர்கள் எந்தஅச்சுறுத்தலை எதிர்கொள்ளாத நிலையில் இந்த ஒட்டுக்குழுக்களால்தான் எமது கல்விமான்கள்அச்சுறுத்தலுக்குள்ளாகி அழிக்கப்பட்டார்கள்.

மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார். இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா. கனகரெத்தினம் ஐயாவின் நினைவு, இன்றாகும்.

எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது மாற்றுருதிறமை. சிறிய உதவிகளாக இருந்தாலும் சரி, பலரை தொடர்பு கொண்டு முடிக்க வேண்டிய பெரியவேலைகளாக இருந்தாலும் சரி எப்படியும் அதை முடித்தே தீருவார். முடியவில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது இவர் அகராதியிலேயே இல்லை.

எந்நேரமும் எவருக்காவது உதவி செய்ய தயாராகவிருப்பது இவரது மற்றொரு பண்பு. தனக்குரிய பல வேலைக்கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘உதவி’ என்று கோரிவந்த ஒருவரையும் தட்டிக் கழிக்கமாட்டார். மட்டக்களப்பு பிரஜைகள்குழு செயலாளராகவும், ஆரையம்பதி சமாதானக் குழு அமைப்பாளராகவும், நெருக்கடியான கட்டங்களில் எல்லாம், இவர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியமை இங்கு நினைவுகூரத்தக்கது.

ஆரம்பகாலத்தில் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப்போராளிகளினால் அன்பாக மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவருமான நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் அவர்கள் ஊருக்காகவும், சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் பல. தளபதிகளான அருணா, பொட்டு அம்மான், குமரப்பா, ரமணன், தளபதி றீகன் ஆகியோரின் பெரு மதிப்பைப் பெற்றவரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவருமான மா. கனகரெத்தினம், காத்தான்குடி, ஆரையம்பதி கிராமங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் இனக்கலவரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் இரு சமூகங்களிடையேயும் இவர் சென்ற சமாதானத்தூதின் மூலம் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக செயற்பட்ட மாபெரும் மனிதர்.

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், மேற்படி அமைப்புகள் மூலமும் இவர் பெரிதும் உதவினார். தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு அவர் செய்த அந்த உன்னத பணியை இன்றுவரை அந்த மக்கள் நினைவுகூருவதோடு இன்னும் நன்றியுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

1988ம் ஆண்டு காலத்தில் EPRLF ஒட்டுக்குழுவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்விமான்களை அழிக்கும் செயல்பிள்ளையான் ஒட்டுக்குழுவினராலும் மட்டக்களப்பில் 2005ம் ஆண்டுகாலப்பகுதியிலும் நடந்தேறியது. மட்டக்களப்பில் உறுதியான, இறுதியான அரசியல் தலைமையாக இருந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஆயுதம் ஏந்தியது  மக்களின் விடுதலைக்காக ஆனால் அதே ஆயுதம் மக்களையும் கல்விமான்களையும் அழித்து அதன் பின்பு அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பது எதற்காக? திரு.கனகரெத்தினம் என்ற அன்பான, பண்பான பொது நலசேவையாளனை இழந்து 33 ஆண்டுகள் மறவாத வராகதலைமுறையாக நினைந்து கொண்டிருக்கின்ற வேளையில் மக்கள் மன்றத்தில் மனிதநேயவாதிகளாக தீர்ப்புக்குகாக்கின்றோம்.

கனவான் கனகரெத்தினம் ஐயா வாழ்நாள் மக்கள் சேவையாளனாக மக்கள் மனதில் இப்பதிவுகள் ஊடாக என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

இது அழிவில்லா வாழும் வரம்.

ஆரையம்பதியில் இருந்து தமிழின் தோழன்.

வீரச்சாவு உறுதிச்சான்று

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments