எகிப்து செராபிஸ் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழக மிளகு பானை [Two Ancient Tamizhagam made large Pots buried at the floor of the Serapis temple at Berenike contained 7.5 kg of black pepper]
ரோமானிய உலகில் மிக அதிகமான மிளகு, எகிப்தில் உள்ள பெரனிகே என்ற இடத்தில் கிடைத்துள்ளது
1994 முதல் 2001 வரை எகிப்தின் செங்கடல் துறைமுக பகுதியான பெரெனிகெ-வில் டெலவேர் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) -University of Delaware, லைடன் பல்கலைக்கழகம் (நெதர்லாந்து)[Leiden University] – மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் லாஸ் ஏஞ்சல்ஸ் – யு.சி.எல்.ஏ (அமெரிக்கா) [Unversity of California Los Angeles (UCLA)] மற்றும் பல நிறுவனங்களின் கூட்டாளர்களுடன் எட்டு கட்டங்களாக தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் புவியியற்பியல் கணக்கெடுப்பின் (Geo-Physical Surveying) குறுகிய பருவத்துடன், இது 2009 மற்றும் 2010 இல் தொடர்ந்தது. சுருக்கமான இரண்டு வார அகழ்வாராய்ச்சி பணி 2009-ஆம் குளிர்காலத்தில் நடைபெற்றது. தற்செயலாக, பெரெனிகேவின் உயரமான பகுதியில் அமைந்துள்ள கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கடவுளான செராபிஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலின் வடக்குப்புற முற்றத்தின் தரைப்பகுதியில் கழுத்து வரை புதைக்கப்பட்டிருந்த பழந்தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செம்பழுப்பு வண்ண சேமிப்பு மற்றும் ஏற்றுமதி பானைகளில், மர மூடி இல்லாத கொள்கலன் ஒன்றில் 7.5 கிலோ (17 பவுண்ட்) கருமிளகுத்தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் தென்மேற்கு இந்தியாவில் மட்டுமே பயிரிடப்பட்ட மிளகு, மருத்துவத்தில் (Medicine), கடவுள்களுக்கு படைக்கப்படும் பிரசாதத்தில் (as Offering to the Gods), சுவையூட்டியாக உணவில் (Food Flavouring), கோவில் சடங்குகளில் தூய்மைப்படுத்துதல் (Fumigation in Temple Rites) உள்ளிட்ட பல விடயங்களுக்காக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. விலை மதிப்பற்ற வர்த்தகப் பொருட்களை சேமிக்க ஒரு பாதுகாப்பான இடமாக (அல்லது) சர்வதேச வர்த்தகத்தில் தீவிரமாக செயல்பட்ட இடமாக அந்த கோவில் இருந்திருக்கலாம். ரோமானிய காலத்தின் பிற்பகுதி முழுவதும், நகரத்தில் மிளகு பரவலாகப் பயன்படுத்தப்பட்டதையும், தென்னிந்தியாவின் தென்மேற்கு பகுதியிலிருந்து பெரெனிகெ வழியாக, ரோமானியப் பேரரசு மிளகு ஏற்றுமதி செய்ததையும் இக்கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.
மிளகுத்தூள் இந்திய கடற்கரையிலிருந்து (மலபார்) மட்டுமே வந்திருக்க முடியும் என்கிறார் ஆய்வை முன்னெடுத்தவர்களில் ஒருவரான ஸ்டீவன் சைட்போதம். [Archaeologist Steven Sidebotham, Professor of History at the University of Delaware]
தொகுப்பு:- முத்தமிழ்வேந்தன்