×

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986

மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேசசெயலர் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத் இராசநாயகம் என்பவர் வழமைபோல 1986.10.15 அன்று தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். பாடசாலை சென்று திரும்பிய அவரது இரு பெண் பிள்ளைகளும் மதிய உணவை முடித்துக் கொண்டு தோட்டத்தில் நின்ற தந்தைக்கு உணவு கொண்டு வந்தார்கள். தந்தையும் அயற் தோட்டத்தில் காவல் காக்கும் எழுபத்திரண்டு வயதான ஜோசப் பிரான்சிஸ் உட்பட நான்கு பேரும் தோட்டக் குடிசையில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த வேளையில் பெரியபண்டிவிரிச்சான் காட்டுப் பகுதியால் வந்த சிறிலங்கா இராணுவத்தினர் தோட்டப் பகுதியை நோக்கிச் சுட்டார்கள். பின்னர் தோட்டக் குடிசைப் பகுதிக்கு வந்த இராணுவத்தினர் இராசநாயகத்தைப் பலமாகத் தாக்கினர். பின்னர் இராசநாயகத்தின் மகளான சிறுமியின் பெண்ணுடல், மார்பு என்பவற்றை வெட்டிச் சித்திரவதை செய்ததுடன், ஜோசப் பிரான்சிஸ் அவர்களையும் துண்டுதுண்டாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதில் இராசநாயகமும் ஒரு பெண் பிள்ளையும் காயங்களுடன் தப்பிவிட்டனர். இராசநாயகத்தின் படுகோரமாக சித்திரவதை செய்யப்பட்ட மகள் மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜோசப் பிரான்சிஸ் அதே இடத்தில் உயிரிழந்தார். சிறுமியின் உடல் மடு சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது. ஜோசப் பிரான்சிஸின் உடல் சம்பவ இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

15.10.1986 அன்று பெரிய பண்டிவிரிச்சான் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. இராசநாயகம் மரியஎனஸ்ரின் (வயது 11 – மாணவி)
  2. ஜோசப் பிரான்சிஸ் (வயது 72 – கூலி)

15.10.1986 அன்று பெரிய பண்டிவிரிச்சானில் காயமடைந்தவர்களின் விபரம்:

  1. இராசநாயகம்
  2. இராசநாயகம் மரியராணி (மாணவி)

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments