“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கையும் சேர்ந்துகொண்டான். சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்தியதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம். மீண்டும் வேர்விடுவான் விழுதெறிவான்.
புதிதாகப்பிறக்கும் புலிகளுக்குள்ளே இவன் புகுந்துகொள்வா. நெஞ்சுகனக்கும் தாயக விடுதலைக் கனவோடு எமைப்பிரிந்து செல்லும் இவனின் கனவை நாங்கள் நனவாக்குவோமென்று இவனின் விதைகுழி மீது உறுதியெடுத்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வீரச்சாவடைந்த இவ் வீரவேங்கைக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் இவ்வேளையில் எங்கள்; தாயக மீட்புப் போருக்கு மீண்டும் எங்களை தயார்படுத்திக் கொள்கின்றோம். ஒருகண நேரம் இந்த வீரனுக்காக குனிந்து கொண்ட எமது தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்.
“புலிகளின்தாகம் தமிழீழத்தாயகம்”