×

புகழேந்தி

புகழேந்தி (பிறப்பு: 1967) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர். தமிழீழப் போராட்டத்தைப் பற்றிய ஓவியங்களுக்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

ஓவியர் புகழேந்தி தஞ்சாவூர் மாவட்டம் தும்பத்திக்கோட்டை என்னும் சிற்றூரில் 1967ம் ஆண்டு குழந்தைவேல்- நாகரத்தினம் ஆகியோருக்குப் பிறந்தார். தும்பத்திக்கோட்டை துவக்கப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியை முடித்து மேல உழுவூரில் மேல்நிலைக் கல்வி பயின்றார். புகழேந்தி தனது 16வது வயதிலேயே ஓவியத்தின் மீது முழு ஈடுபாடு கொண்டார். குடந்தை கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவிய பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். 1995ம் ஆண்டு சாந்தி என்பவரை மணந்தார் தற்போது இவர்களுக்கு சித்திரன், இலக்கியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர்.

ஓவியக்கண்காட்சிகள்

1983ம் ஆண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் இவரது சமூக அக்கறை கொண்ட ஓவியங்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றது. மக்களுக்கான கலைஞனாக தன்னை நிறுவிக்கொண்ட இவர் தனது ஓவியங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினார். முதலில் தஞ்சாவூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல இடங்களில் வெட்டவெளியில் ஓவியக்கண்காட்சியை நடத்தினார். புகழேந்தியின் ஓவியங்களுக்கு பொதுமக்கள் அளித்த நற்கருத்துக்களை தொகுத்து வண்ணங்கள் மீதான வார்த்தைகள் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

2000ம் ஆண்டில் சென்னை லலித்கலா அகாதமியில் நடந்த “இருபதாம் நூற்றாண்டு- ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள்” என்ற இவரது ஓவியக் கண்காட்சியைத் தொடர்ந்து தமிழகத்தின் பல முக்கிய இடங்களிலும் ஓவியக்கண்காட்சி பரவலாக நடைபெற்றது. 2001ம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய குஜராத் பூகம்பத்தில் கொத்துக்கொத்தாய் மனிதர்கள் செத்தும் இடர்பாடுகளில் மாட்டிக்கொண்டும் பட்ட வலிகளை கருவாக வைத்து சிதைந்த கூடு என்னும் தலைப்பில் 150 அடி நீளமுள்ள மிக நீண்ட ஓவியத்தினை வரைந்து கவனத்திற்குள்ளானார். இதற்காக இவருக்கு தருமபுரி மனித வள மேம்பாட்டு மையத்தின் சிறந்த ஓவியருக்கான விருது வழங்கப்பட்டது.

தந்தை பெரியாரின் பன்முகத்தோற்றத்தை வேறொரு பரிமாணத்தில் வரைந்து திசைமுகம் என்னும் தலைப்பில் இவர் நடத்திய ஓவியக்கண்காட்சி தமிழகத்தின் 25 முக்கிய நகரங்களில் நடைபெற்றது. 2000ஆம் ஆண்டில் உறங்கா நிறங்கள் என்னும் தலைப்பில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு மக்களிடம் ஓவியக்கண்காட்சி நடத்தினார். அதே ஆண்டில் சிகாகோ, வாசிங்டன், கனடா, பாரிஸ் ஆகிய பெருநகரங்களில் திசைமுகம், உறங்கா நிறங்கள் ஆகிய இருவகை ஓவியங்களையும் ஒரே கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.

2003 ஆம் ஆண்டு புகை மூட்டம் என்றத் தலைப்பிலான ஓவியக் காட்சி சென்னையைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் தென்னிந்திய அளவில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு உயிர்ப்பு என்றத் தலைப்பிலான ஓவியக் காட்சி சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்பட்டன.

2009 ஆம் ஆண்டு ஈழப் போர் குறித்த 50 ஓவியங்களோடு உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக் காட்சி சென்னையில் நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டு ஈழப் போர் குறித்த 80 ஓவியங்களோடு போர் முகங்கள் ஓவியக் காட்சி தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, Alliance Francaise of Madras ஆகிய இடங்களிலும் நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் பல நகரங்களிலும் நடைபெற்றன.

2015 ஆம் ஆண்டு சே குவேரா: புரட்சியின் நிறம் என்றத் தலைப்பிலான ஓவியக் காட்சி சென்னையில் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு போர் முகங்கள்: ஈழப் போர் ஓவியங்கள் ஓவியக் காட்சி 100 ஓவியங்களோடு பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் நகரத்திலும் மத்திய லண்டனிலும் நடைபெற்றன.

ஈழப்போராட்ட ஓவியங்கள்

1983ம் ஆண்டிலிருந்து ஈழப்போர் சார்ந்த ஓவியங்களை வரைந்தார். புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் என்னும் பல்வேறு தலைப்புகளில் ஈழப்போரின் அவலத்தை காட்சிப்படுத்தி தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கிலும் பல இடங்களில் கண்காட்சியாய் நடத்தினார். ஈழத்தில் ரத்தக்கறை படிந்த போர் பூமியில் 2005ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 15 இடங்களில் புயலின் நிறங்கள் என்னும் தலைப்பில் இவர் ஓவியக்கண்காட்சி நடத்தினார்.

Source: Wikipedia

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments