×

”முன்னோக்கிப் பாய்தல்” மீது ”புலிப்பாய்ச்சல்” !

”முன்னோக்கிப் பாய்தல்” மீது ”புலிப்பாய்ச்சல்” ! 14-07-1995 அன்று அதிகாலை

முன்னைய அரசைப் போலவே தற்போதைய அரசும் குடாநாட்டைக் கைப்பற்றுவதிலேயே கண்ணங் கருத்துமாக இருந்து வருகின்றது. முன்னைய அரசின் திட்டம்: குடாநாட்டைச் சூழ ஒரு இராணுவ முற்றுகையை இட்டு – புலிகளின் நகர்திறனைச் சிதைத்து – பின்னர் புலிகளை அழிப்பது ஆகும். இருந்தபோதிலும், இந்த முற்றுகை முயற்சி புலிகள் இயக்கத்தால் முறியடிக்கப்பட்டதால், தற்போதைய அரசு வேறொரு திட்டத்தைத் தயாரித்து வைத்திருக்கின்றது.

அதாவது, யாழ்நகர் உட்பட, குடாநாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களைக் கைப்பற்றி, குடாநாட்டில் இருந்து புலிகளை அடித்து விரட்டுவதுடன் – புலிகளுடனான போரைப் பயன்படுத்தி, கணிசமான தமிழ் மக்களைக் கொன்று – இனப்படுகொலை செய்து – தமிழ் மக்களின் போராட்ட உறுதியையும் நசுக்கிவிடுவதே, சந்திரிகா – ரத்வத்த அரசின் புதிய திட்டமாகும்.

இந்தப் புதிய திட்டத்தின் முதற்கட்டம்தான், சிங்களப் படைகள் நடாத்திய ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கை ஆகும். சண்டிலிப்பாய் – சங்கானை – சித்தன்கேணி – சங்கரத்தை – சுழிபுரம் – பொன்னாலை – மூளாய் – வட்டுக்கோட்டைப் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டு, பின்னர், சண்டிலிப்பாய் ஊடாகவும் வட்டுக்கோட்டைப் பகுதியில் இருந்து அராலிக் கடற்கரை வழியாகவும் – இரண்டு முனைகளுடாக – யாழ் நகரத்தை நோக்கிப் படைகளை நகர்த்துவதே ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையின் இறுதி இலக்காக இருந்தது. கொப்பேகடுவ தயாரித்து நடைமுறைப்படுத்த விரும்பிய திட்டமும் கிட்டத்தட்ட இதை ஒத்தது என்பது கவனிக்கத்தக்கது.

கொப்பேகடுவவும் அவரது திட்டமும் அராலிக் கண்ணியில் சிதறுண்டது போல, சந்திரிகா – ரத்வத்தவின் திட்டம் ”புலிப்பாய்ச்சலுடன” புழுதியில் வீழந்துவிட்டது. அன்று – குடாநாடு எதிர்கொள்ள இருந்த ஒரு அபாயத்தை அராலிக் கண்ணி தற்காலிகமாகத தடுத்தது.
அதேபோல, இன்று – குடாநாடு சந்திக்க இருந்த ஒரு போராபத்தை ”புலிப்பாய்ச்சல்” தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த, தற்காலிகப் பாதுகாப்புக்களை நிரந்தரப் பாதுகாப்பாக மாற்ற வேண்டிய கடமை எமது இளைஞர் – யுவதிகளின் கைகளில்தான் தங்கியுள்ளது. அதாவது, புலிகள் இயக்கத்தின் ஆட்தொகையை அதிகரிப்பதன்மூலம் இந்த நிரந்தரப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும்.

”முன்னோக்கிப் பாய்தலில்” அரசுப்படைகள் கடைப்பிடித்த நகர்வு யுக்தியை ‘ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவிலான தந்திரோபாயம்’ என, சிங்களத் தளபதிகள் வர்ணித்துள்ளனர். அளவெட்டிப் பகுதியில் இருந்து சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியை நோக்கிய ஒரு நகர்வையும், மாதகலில் இருந்து கடற்கரை ஓரமாக மூளாய், பொன்னாலை வழியாக வட்டுக்கோட்டை வரை அடுத்த நகர்வையும் சிங்களப் படைகள் செய்தன. இந்த இருமுனை நகர்வையும் இணைத்து – ஒரு வழங்கல் பாதையை ஏற்படுத்தவும் – அதன்மூலம் படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் என, சண்டிலிப்பாயிலிருந்து வட்டுக்கோட்டை வரையுள்ள சங்கானை – சித்தன்கேணி – சங்கரத்தை ஆகிய இடங்களையும் சிங்களப் படைகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன. ஆயினும், இந்த ‘யூ’ வடிவ இராணுவ நிலைகளின் ஒரு பகுதியான சண்டிலிப்பாய் – சங்கானை – அளவெட்டிப் பகுதிகள் மீது, 14-07-1995 அன்று அதிகாலை, ‘யூ’ இனை நடுவில் பிளந்ததுபோல – நடந்த ”புலிப்பாய்ச்சலுடன்”, சிங்களப் படைகளின் படைநகர்வு வடிவம் சிதைவடைந்துவிட்டது.

”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையின் வெற்றி பற்றி, சிங்கள அரசு செய்த மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தால் ஆகர்சிக்கப்பட்ட சிங்கள மக்கள், தமது இனம் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுவிட்டது போல எண்ணி மகிழ்ந்தனர். சூனியத்தில் பிறந்த இந்த மகிழ்ச்சி நெருப்பை, சிங்களச் செய்திதாள்கள் நெய்வார்த்து வளர்த்தன. ”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை என்பது – ”புலிகள் தலையில் விழுந்த ஒரு குட்டு” என, ”டெய்லி நியூஸ்” செய்தித்தாள் ஆசிரியர் தலையங்கம் எழுதி மகிழ்ந்தது.

தாண்டிக்குளத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ‘ஐஸ்கிறீம்’ விநியோகித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர். சிங்கள தேசத்தின் மற்றைய இடங்களில் வெடிகொளுத்தி – இனிப்புப் பண்டங்களை வழங்கி – சிங்கள இனம் வெற்றியைக் கொண்டாடியது. கோட்டை இராச்சியத்தின் படைகள், யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றியது போன்ற உணர்வைச் சிங்கள மக்கள் பெற்றிருந்தனர் போலும்! பலாலிப் படைத்தளத்தைச் சேர்ந்த படையினரைத் தவிர மிகுதி அனைத்துச் சிங்களச் சிப்பாய்களும், தங்களைத் துட்டகைமுனுவின் மறுபிறப்புக்களாகவே எண்ணி மகிழ்ந்து இருந்தனர். ஆனால், ”புலிப்பாய்ச்சலின்” பின்னர் களநிலைமை வேறுவிதமாக மாறிவிட்டது என்ற உண்மையைச் சிங்கள இனம் அறிந்த பின்னர் என்ன செய்தனரோ தெரியவில்லை!

”முன்னோக்கிப் பாய்தல” இராணுவ நடவடிக்கைக்குச் சந்திரிகாவின் அரசியல் தலைமையும், ரத்வத்தவின் படைத் தலைமையும் சேர்ந்து செய்த முன்னேற்பாடுகள் பிரமாண்டமானவை. இப்பாரிய முன்னேற்பாடுகளைக் கண்டு திருப்தியுற்ற ரத்வத்த சொன்னார், ‘புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை எமது படைகள் தொடங்கும்போது நாடே வியப்புறும்’ என்று. இந்தப் படையெடுப்பிற்கான முன்னேற்பாடுகளில் பெரும் நம்பிக்கை கொண்ட சந்திரிகா அம்மையார் சொன்னார், ‘இது சமாதானத்திற்கான போர்!’ போரின் வெற்றியில் நம்பிக்கை வைத்து இவ்வாறு போருக்கு வியாக்கியானம் கொடுத்தார். சந்திரிகா அம்மையாரும் ரத்வத்தவும் நம்பியதுபோலவே படையெடுப்பிற்கான ஏற்பாடுகளும் பாரிய அளவில் நடந்தன.

‘முன்னோக்கிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கை தொடங்க முன்னர் ‘எடித்தாரா’ கப்பல் ஊடாகவும், தரையிறக்கு கலங்கள் ஊடாகவும், 2400 தொன் எடையுடைய வெடிப்பொருட்கள் – பிரதானமாக எறிகணை வகைகள் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கூடாக இறக்கப்பட்டிருந்தன ஜலண்ட் – 20-07-95 அதேவேளை 25 இற்கும் மேற்பட்ட ரஷ்யத் தயாரிப்பான டாங்கிகளும் – கவச வாகனங்களும் மேலதிகமாகப் பலாலிக்குக் கடல்வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. இத்துடன் சிங்கள வான்படையும் விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ரஷ்யத் தயாரிப்பு விமானங்களை வாங்கி வைத்திருந்தது.

முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்கை 09-07-1995 ஞாயிற்றுக்கிழமை, அளவெட்டிப் பகுதிக்கூடாகவும், மாதகல் பகுதிக்கூடாகவும் சிங்களப் படைகள் களத்தைத் திறந்தன. முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு பெருந்தொகையில் – பொதுமக்களது இடங்களை நோக்கி – சிங்களப் படைகள் எறிகணை வீச்சுக்களை நடாத்தின. மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்குரிய அவகாசத்தையோ அல்லது இன்ன இடத்தால் இடம்பெயர்ந்து செல்லலாம் என்று ஒரு பிரதேசத்தையோ ஒதுக்காது, அனைத்துத் திசைகளிலும் – அப்பகுதியின் அனைத்துக் குக்கிராமங்கள் மீதும் – எறிகணைகளை மழையாகப் பொழிந்தனர். இதனால், அவலமான ஒரு அவசர இடப்பெயர்வுக்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எறிகணைச் சிதறல்பட்டு இறந்த அல்லது காயமடைந்த தம் உறவுகளைக்கூட அந்தந்த இடத்திலேயே விட்டுச் செல்லும் அளவுக்கு, எறிகணை வீச்சுக்களின் கோரமும் – அவை கொடுத்த அதிர்ச்சியும் மக்களை வெகுவாகப் பாதித்தன. தம் கண்களுக்கு முன்னாலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்ததுடன் – காயமடைந்த உறவுகளைப் பாதுகாக்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாத அவலத்தை மக்கள் அனுபவித்தனர்.

இராணுவ நடவடிக்கை நடைபெற்ற பகுதிக்கு அப்பாலும் – எதுவித இராணுவ நோக்கமும் இல்லாமல் – சிங்களப் படைகள் எறிகணை வீச்சில் ஈடுபட்டன. ”புலிகளிடமிருந்து எதிர்ப்புக்களைக் காணவில்லை” என்று அரசே அறிக்கைவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த எறிகணை மழையை அரசுப் படைகள் பொழிந்தன. இங்கே தான் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவருகின்றது. அதாவது – ”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கையின் இலக்குகளில், தமிழ் மக்களின் அழிவும் – இடப்பெயர்வும் அடங்கியிருந்தன என்பதே அதுவாகும்.

இந்த இராணுவ நடவடிக்கையின்போது சிங்கள வான்படையின் சுப்பசொனிக்கும் – புக்காரா விமானங்களும் – உலங்கு வானூர்திகளும், தரையில் நகர்ந்த படையினருக்கு உதவும் வகையில் தாக்குதல்களில் ஈடுபட்டன. புக்காராவும் – சுப்பசொனிக் விமானமும்  8000 அடிக்கு மேலே நின்று குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டன. இதனால் இந்தக் குண்டுவீச்சு விமானங்கள் போர்முனைப் பகுதிகளில் குண்டுகளை வீசுவதை விட, அதற்கு அப்பால் மக்கள் தஞ்சமடைந்த பகுதிகளிலேயே குண்டுவீச்சுக்களை நடாத்தின. அதன் காரணமாக என்றுமில்லாத அளவுக்கு, விமானக் குண்டுவீச்சுக்களால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நவாலி தேவாலயத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலில் 120இற்க மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தரையில் நகர்ந்த படையினருக்கு உதவியாக அவர்களுக்கு மேல் பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்திகள், நகர்வின் திசைகளையும் இடங்களையும் மற்றும் புலிகளின் நடமாட்டங்களையும் அவதானித்ததுடன், காயமடைந்த படையினரை ஏற்றும் பணியிலும் ஈடுபட்டிருந்தன.
இந்த இராணுவ நடவடிக்கையின்போது இரண்டு உலங்குவானூர்திகள் தாக்கப்பட்டிருந்ததாக அரசுப்படைகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

அதில் ஒன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகி – பறக்க முடியாது – மாதகலில் அவசர தரையிறக்கத்துக்கு முயன்றபோது விழுந்து நொறுங்கியதாக, கொழும்புச் செய்திதாளொன்று (சண்டெ ரைம்ஸ் – 16-07-95) தெரிவித்தது. ஏறக்குறைய பத்தாயிரம் விசேட பயிற்சி பெற்ற படையினர் நன்கு ஆயுதமயப்படுத்தப்பட்ட நிலையில் – இந்த இராணுவ நடவடிக்கையில் பங்குகொண்டனர். பாரிய இழப்புக்கள் எதையும் அவர்கள் சந்திக்காததால், யாழ் நகர் நோக்கிய அடுத்த நகர்விற்காகச் சிங்களப் படைகள் ஆவலுடன் காத்திருந்தன.

”படை நகர்வு சுலபமாக அமைந்துவிட்டது என்ற யாழ். நகரிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவிலேயே படைகள் நிற்கின்றன” என்றும், அறிவிப்பு போர் முனையில் இருந்து சென்றபோது, சந்திரிகா அரசு பேருவகை அடைந்திருக்க வேண்டும்! இதன் விளைவாக இன்னும் சில நாட்களில் தீர்வுத் திட்டம் பகிரங்கப்படுத்தப்படும் என, நீதி அமைச்சர் பீரிஸ் அறிக்கையும் விடுத்தார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டு, தமிழ் இனத்தின் மீது அரைகுறைத் தீர்வுத்திட்டம் ஒன்றைத் திணிப்பதற்காக, அரசு காத்திருந்தது.

”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு நாளும், ”ரூபவாகினியும்” சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், போர்பற்றிய வர்ணனைகளை வெகு டாம்பீகமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தன. ஆனால் 14 ஆம் திகதியுடன், இந்த விசேட ஒளிபரப்புக்கள் திடீரென முன்னறிவித்தல்கள் இன்றி நின்று போய்விட்டன. அன்றிலிருந்து சிங்கள தேசத்தில் பல வதந்திகள் உலாவத் தொடங்கின. அதை மறுப்பதிலும் போர்க்கள நிலைமைகளை மறைப்பதிலுமே, ரூபவாகினியும் – ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஈடுபட்டன.

”புலிப்பாய்ச்சல்” நடவடிக்கை ஒப்பறேசன் ”முன்னோக்கிப் பாய்தலின்” போது சிங்களப் படைகள் கைப்பற்றிய பரந்த நிலப்பகுதி – அதில் கொல்லப்பட்ட மக்கள் தொகை – இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை மற்றும் கண்மூடித்தனமான எறிகணை, வான் தாக்குதல்களாலும் குடாநாட்டு மக்கள் பீதியடைந்த நிலையிலேயே காணப்பட்டனர்.

இந்த நிலையில்தான், சிங்களப் படைகளின் இராணுவ நடவடிக்கைக்குத் தக்க பதிலடி ஒன்று கொடுக்க, தலைவர் ஆயத்தங்களைச் செய்தார். புலிவீரர்களின் பாரிய படையணி ஒன்றை ஒருபெரும் எதிர்த்தாக்குதல் ஒன்றுக்காகத் தயார்ப்படுத்தினார்.

சண்டிலிப்பாய் – அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டபடி, யாழ். நகரை நோக்கிய அடுத்த கட்ட நகர்விற்காகக் காத்திருந்த படையினர் மீது, 14.07.1995 அன்று அதிகாலை, புலிவீரர்கள் ஒரு பெருந்தாக்குதலைத் தொடுத்தனர். தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் நடந்த இந்தப் பதில் இராணுவ நடவடிக்கைக்குப் ”புலிப்பாய்ச்சல்” எனத் தலைவரே பெயர் சூட்டினார்.பெயரிற்கேற்றாற்போல  புலி வீரர்கள் சிங்களப் படைமீது பாய்ந்து, அதைத் துவம்சம் செய்தனர்! பகல்போல நிலவு இருந்த அந்த இரவில், புலிவீரர்கள் துணிகரமான முறையில் தொடுத்த புலிப்பாய்ச்சல் நடவடிக்கையால், ”முன்னேறிப்பாய்தலில்” பங்கு கொண்ட படையினர் சிதறிப் பின்னோக்கி ஓடினர்! அவர்களது கட்டளைப்பீடமும் – விநியோகமார்க்கமும் சிதைந்து போயின. நூறிற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன், தரைப்படைக்குத் துணையாகக் குண்டுவீச்சில் ஈடுபட்டபடி – சிங்களச் சிப்பாய்களின் போரிடும் உறுதியை ஊக்குவித்துக் கொண்டிருந்த, ”புக்காரா” குண்டுவீச்சு விமானம் அவர்களின் கண்முன்னாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதால், சிங்களப் படைகளின் நம்பிக்கையும் சிதறிப்போனது.

இதேவேளை, ”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான விநியோகங்களைச் செய்துகொண்டிருந்த ”எடித்தாரா” என்ற கட்டளைக் கப்பல், காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து, 16.07.1995 அன்று அதிகாலை, கரும்புலித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது. 2628 தொன் நிறையுடைய இந்தக் கட்டளைக் கப்பலைச் சிங்கள அரசு இழந்ததால், ”முன்னோக்கிப் பாய்தலின்” விநியோக வழியும் மூடப்பட்டுவிட்டது. இவ்விதம், ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கைக்காக மூன்று போர் அரங்குகளிலும் பங்குகொண்டிருந்த சிறீலங்காவின் முப்படைகளும், புலிப்பாய்ச்சலுக்கு இலக்காகிப் பாரிய அழிவுகளைச் சந்தித்தன. இதனால், ”முன்னோக்கிப் பாய்தல்” பலத்த பின்னடைவைச் சந்தித்தது.

”புலிப்பாய்ச்சல்”, நடவடிக்கையின் வேகத்தையும் – வீரியத்தையும் – அது சிங்களப் படைகளுக்குக் கொடுத்த இழப்புக்களையும் கணிப்பீடு செய்த சிங்களத் தளபதிகள், தமது ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையை நிறுத்தி, கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து விரைவாகப் பின்வாங்க முடிவெடுத்தனர். புலிகளின் பாரிய சேனை ஒன்றை மிக விரைவாக ஒன்றிணைந்து, தாக்குதல் வியூகங்களையும் – தந்திரோபாயங்களையும் அவர்களுக்கு விளக்கி, மூவகைப் போர் அரங்குகளிலும், ஒழுங்கான முறையில், தலைவர் அவர்கள் படைநகர்த்தலையும் – தாக்குதல்களையும் செய்வித்த விதம், சிங்களத் தளபதிகளை வியப்பிற்குள்ளாக்கியிருக்கும்.

”புலிப்பாய்ச்சலின்” விளைவுகள்
புலிகள் இயக்கம் பெயர்சூட்டி நடாத்திய தாக்குதல்கள் எல்லாவற்றுககுள்ளும் ”புலிப்பாய்ச்சல்” தனித்துவம் மிக்கதாக இருக்கின்றது. அதற்குக் காரணம், மூன்று போர் அரங்குகளிலும் (தரை – கடல் – வான்) ”புலிப்பாய்ச்சல்” நடாத்தப்பட்டதே ஆகும். அத்துடன், பீதியுற்றிருந்த குடாநாட்டு மக்களின் மனங்களில் நம்பிக்கை விதையைத் தூவிய சமராகவும் ”புலிப்பாய்ச்சல்” அமைந்துவிட்டது. அதேவேளை, குடாநாட்டைக் கைப்பற்றும் எண்ணத்துடன் சிங்களப் படைத்துறைத் தலைமை வரைந்த ஒரு போர்த்திட்டத்தை, ”புலிப்பாய்ச்சல்” மறுபரிசீலனை செய்யவைத்து விட்டது. ”புலிப்பாய்ச்சலின்” போது ”புக்காரா” குண்டுவீச்சு விமானம் ஒன்றும் – சக்திவாய்ந்த கட்டளைக்கப்பல் ஒன்றும் அழிக்கப்பட்டுவிட்டன. தனித்த ஒரு விமானம், தனிய ஒரு கப்பல் என்றில்லாமல் சிங்கள வான்படைக்கும் கடற்படைக்கும் இந்த இழப்புக்கள் பெரிய பாதிப்புக்களைக் கொடுத்துள்ளன. ஏனெனில் புலிகளின் விமான எதிர்ப்பு ஆயுதங்களில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காகவே, 8,000 அடிக்கு மேலே நின்று விமானங்கள் குண்டுவீசின. அத்துடன் இத்தகைய விமான எதிர்ப்பு ஆயுதங்களை ஆபத்து நிறைந்த போர்முனைக்குப் புலிகள் எடுத்துவரமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையும், சிங்களத் தளபதிகளுக்கு இருந்தது. அதனால்தான் சமர்க்களத்துக்கு மேலேயே பறந்து திரிவதில் அக்கறை காட்டின. ஆனால், சிங்கள வான்படையின் அந்த நம்பிக்கையும் – முற்பாதுகாப்பும் பொய்த்துவிட்டன. இதனால், இனிவரும் சமர்களில் எப்படித் தமது பங்கை ஆற்றவது என்று, சிங்கள வான்படை குழம்பியபடி உள்ளது.

இதேபோன்றுதான், சிங்களக் கடற்படையும் திகைத்தபடி உள்ளது. பூரண பாதுகாப்பு நிறைந்த ஒரு துறைமுகத்தில் – அதுவும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியில் – கடற்புலிகளின் துணையுடன் வெற்றிகரமாக உட்புகுந்து கடற்கரும்புலிகள் நடாத்திய தாக்குதலில், வடபுலக் கடலில் நம்பிக்கை நட்சத்திரமான ”எடித்தாரா” மூழ்கிவிட்டது. கரும்புலிகளின் மற்றைய படகு விபத்துக்குள்ளானதால், அதன் இலக்கான தரையிறங்கு கலம் தப்பிப் பிழைத்துவிட்டது. இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த எட்டு ‘டோறா’ சண்டைப் படகுகளுடன் கடற்புலிகள் நடாத்திய சிலமணிநேரக் கடற்சண்டையும், ஒரு முக்கிய இராணுவ பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. ஒரு டோறா படகைக் கொண்டு வடபுலக் கடற்பரப்பையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சிங்களக் கடற்படை. இப்போது, எட்டு டோறாப் படகுகளை ஒருங்கே வைத்துக்கொண்டும் ஒரு கட்டளைக் கப்பலைப் பாதுகாக்க முடியாது போய்விட்டது.

”எடித்தாராவின்” இழப்புடன், வடபுலக் கடற்பரப்பு மீதான கண்காணிப்பும் – வடபுலப் படை முகாம்களுக்கான விநியோகமும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், ‘புலிப்பாய்ச்சலின்’ விளைவால், சிங்கள அரசின் முப்படைகளினது நகர்திறனும் கடுமையாகச் சேதப்பட்டு விட்டது.
இதேவேளை, மரபுவழிப் போர்முனையில் புலிகளுடன் போரிட்டால் அரசுப் படைகள் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை, இராணுவத் தலைமைக்கு உண்டு, பெரியதொரு ஆட்பலத்தைக் கொண்ட தங்களது முப்படைப் பலமும் – அதற்கு இருக்கும் பாரிய படைக்கல சக்தியும் அந்த நம்பிக்கைக்குப் பிரதான காரணம் ஆகும்.

”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான படையின் பங்கு கொண்டிருந்தனர். அதில் பயன்படுத்தப்பட்ட படைக்கல சக்தியின் அளவு (எறிகணைகள் – ரவைகள் – விமானக்குண்டுகள்) உண்மையில் பாரியதாகும். ஆனாலும், படையினரால் சமரை வெல்ல முடியவில்லை. எனவே, மரபுவழிப் போர்முறைமூலம் இடங்களைக் கைப்பற்றுதல் என்பதுபோல, கைப்பற்றப்பட்ட இடங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்பது மிக முக்கியமானதாகின்றது. புலிவீரர்களின் போர்த்திறனும் – போர்த்தந்திரங்களும் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து படையினரை விரட்டியடித்துவிட்டன. ஆயினும், சிங்களப் படைகளின் ஆட்தொகைக்குப் புலிப்படையின் ஆட்தொகையும் ஈடுகொடுக்காதுவிட்டால், நிரந்தர வெற்றியைப் புலிப்படை பெறமுடியாது போய்விடும், எனவே, இனிவரும் சமர்களில் புலிகள் இயக்கம் வெற்றிபெற வேண்டுமாயின், அதன் ஆட்பலம் அதிகரிக்கப்பட்டேயாக வேண்டும். புலிகள் இயக்கத்திற்காக ஆட்தொகையின் அவசியத்தைப் பொறுத்தளவில் போரின் வளர்ச்சிக் கட்டத்தை அது சுட்டிக்காட்டுவதுடன், வெற்றியின் இன்றியமையாத தேவையாகவும் அது மாறிவிட்டது.

வளர்ச்சியும் வெற்றியும்
14.07.1991 அன்று, சிங்களப் படையின் ஒரு வெற்றிகரமான கடல்வழித் தரையிறக்கம் வெற்றிலைக்கேணியில் நடந்தது. அந்தத் தரையிறக்கத்துடன், ஆனையிறவுத் தளம் மீது புலிவீரர்கள் நடாத்திய தாக்குதலின் போக்கு திசைமாறி, சிங்களப் படைகளுக்குச் சாதகமாக மாறிவிட்டது. தேபோல, சரியாக 4 ஆண்டுகளுக்குப் பின்னர், 14.07.1995 அன்று சண்டிலிப்பாய் – அளவெட்டிப் பகுதியில் புலிவீரர்கள் செய்த ”புலிப்பாய்ச்சலால்” சிங்களப் படைகளின் ஒரு இராணுவ நடவடிக்கையே சிதறடிக்கப்பட்டுவிட்டது!

 

 

Munnokki Paythalmeethu Pulipaychal

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments