வன்னிப் படையெடுப்பிற்கான பிரதான பொருதரங்கத்தை சிங்களம் ஆனையிறவுத் தளத்திலிருந்து திறந்து விட்டது. ‘சத்ஜய’ நடவடிக்கை அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் – முல்லைத்தீவில் புலிகள் பெற்ற எண்ணுதற்கரிய வெற்றியையும், தம்மீது சுமத்தப்பட்டுவிட்ட அவமானகரமான தோல்வியையும் ஈடுகட்டிச் சமப்படுத்துவதாகவே இருந்தபோதும் – இப்போது – புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி அத்தியாயம் என்ற வடிவத்தை சிங்களத் தலைமை அதற்குக் கொடுத்துவிட்டது 70 நாட்களாக மூன்று கட்டங்களில் நகர்த்தப்பட்ட ‘சத்ஜய’ படையெடுப்பு, 12கிலோ மீற்றர்கள் முன்னேறி கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியதுடன் – அடுத்த நகர்விற்கான தயார்படுத்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ‘சத்ஜய’ நடவடிக்கைத் தொடரின் முதலாம் கட்டம் ஆடி 26ஆம் திகதி ஆரம்பித்தது.
உப்பளப் பகுதியிலிருந்த ஆனையிறவுத் தளத்தின் தென்புற முன்னரங்க நிலைகளிலிருந்து, பரந்தனை நோக்கிய முன்னேற்றத்தை சிங்களத்துப்புக்கள், இருள் கலையும் அதிகாலையில் ஆரம்பித்தனர். பிரதான வீதிக்கும் புகையிரதப் பாதைக்கும் அருகே நகர்ந்து, புலிகளின் தொடர் காப்பரண் பகுதியை உடைத்து முன்னேறும் எதிரியின் ஆரம்ப முயற்சி கைகூடாமல் போன அதே பொழுதில் மாற்றுவழியாக பிரதான வீதிக்கு கிழக்கே 2கிலோ மீற்றர் தூரத்தில் தட்டுவன்கொட்டிப் பகுதியூடாக முன்னேற எடுத்த முயற்சி அவனுக்கு சாத்தியமானதாகியது.
பெருமெடுப்பில் நகரும் படையினரை மிகச் சில படைப்பிரிவுகள் கொண்டு வழிமறித்து மோதுவது சாத்தியமற்றது என்பதாலும் சாதகமற்ற அந்தக்களத்தில் கடும் எதிர்த்தாக்குதலில் இறங்குவது பெருமழிவுக்கே வழிவகுக்கும் என்பதாலும் – மட்டுப்படுத்தப்பட்ட வகையான ஒரு சண்டையை நடாத்திய வண்ணம், தந்திரோபாயப் பின்வாங்கலொன்றைப் புலிகள் செய்யவேண்டியிருந்தது. தனக்கெதிரான தீவரம் குறைந்த மோதலையே புலிகள் நடாத்தியதன் காரணமாகச் சுலபமாக முன்னேறிய எதிரியால் – அன்றைய பகற்பொழுது முடிவதற்குள்ளாகவே – 6 கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து பரந்தன் சந்தியைக் கைப்பற்றவும் அதுவரையான இடைத்தூரத்தில் பிரதான வீதிக்கு மேற்கே 1 கிலோ மீற்றருக்கும், கிழக்கே 2 கிலோ மீற்றருக்கும் அகன்று நிலைகொள்ளவும் முடிந்தது. அன்றைய சண்டையில் தனது 16 துருப்புக்கள் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்தது. எமது 16 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
தொடர்ந்த எட்டு நாட்களாக – புதிதாகக் கைப்பற்றிய பிரதேசத்தில் காப்பு நிலைகளைப் பலப்படுத்தியதுடன், தன் சண்டையணிகளை மீளொழுங்கு செய்து தயார்படுத்திக்கொண்ட எதிரியுடன் நடந்த மோதல்களில் மேலும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஒன்பதாம் நாள் – ஆவணி 4 ஆம் திகதி, ‘சத்ஜய’ வின் 2 ஆம் கட்டத்தை எதிரி ஆரம்பித்தான். பரந்தனை சிரமமின்றிக் கைப்பற்ற முடிந்ததனால், முல்லைத்தீவில் புலிகளின் ஆட்தொகை வெகுவாகப் பலவீனப்பட்டு விட்டதாகக் கருத்திலெடுத்த சிங்களத் தலைமை புலிகளின் போர்வலு பற்றிய தவறான கணிப்பீட்டினைச் செய்ததால், ;சத்ஜய’வின் 2 ஆம் கட்டத்தின் மீது பெரு நம்பிக்கை வைத்து, கிளிநொச்சி நோக்கிய இறுதி நகர்வு எனப் பிரச்சாரம் செய்தது.
சிங்களத்தின் புகழ்பூத்த போரணியான ‘சிறப்புப் படை’க் ‘கொமாண்டோ’க்கள் மேஜர் ஜெனரல் ஜனேக பெரேராவின் வழி நடாத்தலின் கீழ் களத்தை திறந்தனர். பரந்தனிலிருந்து நகரத்தொடங்கிய துருப்புக்கள், ஒரு கிலோ மீற்றருக்கும் மிகக் குறைவான தூரத்திற்குள் பிறை வடிவில் தம்மை வளைத்து நுட்ப வயூகமிட்டுக் காத்திருந்த புலிகளைச் சந்தித்த போது வெடித்த சமர் அசாதாரணமானது. எதிரி பலமுனைகளுடு முன்னேற முயன்றான் புலிகளின் அரண்களை உடைத்தெறிய தன்னால் இயலுமான வரைக்கும் எத்தனித்தான். ஒவ்வொரு முனையும் முறியடிக்கப்படும்போது இன்னொரு முனையைத் திறந்து முயன்றான். விடிந்ததிலிருந்து இருளும் வரை – பகற்பொழுது முழுவதுமே – பரந்தன் பகுதி பெரியதொரு போர்க்களமாக மாறியிருந்தது.
பிரதான வீதிக்குக் கிழக்குப் பக்கமாக முன்னேறியவர்களைப் புலிகள் இரு முனைகளில் மறித்தனர். ஒரு முனையில் இரு ‘ராங்க்’ குகள் தாக்கியெரிக்கப்பட மேலும் ஒன்று சேதப்படுத்தப்பட்டன. இதே சமயத்தில் பிரதான வீதிக்கு மேற்கப் பக்கமாக முன்னேறியவர்களைப் பூநகரி வீதிக்கு வலதுபுறமும், இடதுபுறமும் இரு முனைகளில் எதிர்கொண்டு தடுத்தனர். முதல்நாள் சண்டைகளில் மட்டும் 75 படையினர் கொல்லப்பட்டதையும், தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் முயற்சியெடுத்த எதிரியை முறியடித்த சண்டைகளில் மேலும் 75 வரையான படையினர் கொல்லப்பட்டதையும் களச் செய்திகள் ஊர்ஜிதப்படுத்தின. இந்தச் சண்டைகளில் எமது 89 போராளிகள் வீரச்சாவடைந்தனர். அதைத் தொடர்ந்த நாட்களில் ‘சத்ஜய’ வின் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கும் வரை, எதிரியின முன்னரங்கப் பகுதிகளில் நடந்த மோதல்களில் மேலும் 11 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
‘சத்ஜய’வின் இரண்டாம் கட்டத்தை முளையிலேயே முறியடித்த புலிகளின் சமர், பகைத் தளபதிகளைத் திகைப்பில் ஆழ்த்தியது. யாழ்ப்பாணச் சமரிலேயே இல்லாத விதமாக வான்படையையும் களத்திலிறக்கியதோடு, ‘றிவிசர’வில் பிரயோகித்ததை விடவும் மிகக் கூடுதலான வளங்களை ஒழுங்கு திரட்டிய போதும் ஏன் தம்மால் முடியாமல் போனது என்பதே அவர்கட்கு ஆச்சரியம். புலிகளின் பெரும் படைக்கல பிரயோகம் தமக்கு அதிக சேதத்தைத் தந்ததனால், அவர்களை விட அதிகமான படைக்கல சக்தியைத் தாம் பிரயோகித்தபோது புலிகளுக்கும் பெருஞ்சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்; அத்தோடு, முல்லைச் சமரில் ஏற்கனவே புலிகளின் ஆட்பலம் பெருமளவில் பலவீனப்பட்டிருக்கக்கூடிய சாத்தியப்பாடும் இருக்கையில், எப்படிப் புலிகளால் எதிர்த்து நிற்க முடிந்தது; ‘றிவிசர’வை விடவும் உக்கிரமான தாக்குதலை நிகழ்த்திய போதும் ஏன் துருப்புக்களால் வெல்ல முடியவில்லை?
இந்தக் கேள்விகளுக்கு விடைதேட முனைந்த சிங்களப் படைத்துறைத் தலைமை, முல்லைத் தளத்திலிருந்தும் வேறு வழிகளிலும் புலிகள் பெற்றிருக்கும் ஆயுத கரவிகள் காரணமாக கிளிநொச்சிப் படையெடுப்பிற்கான தன் போர்முறைத் திட்டத்தில் முழுமையான மாற்றம் செய்யவேண்டியதை மட்டுமல்ல – தமிழீழப் போரில் தனக்கு ஒரே வாய்ப்பாக இருந்த மரபுவழிச் சமர்முறையும் சிக்கலுக்குரியதாக மாறுவதையும் உணர்ந்தது. இரண்டாம் கட்டத்தில் சறுக்கிய ‘சத்ஜய’வை மூன்றாம் கட்டத்திலாவது நிமிர்ந்த, சிங்களத் தளபதிகள் ஒன்றரை மாத காலமாகச் சிந்தித்தனர். பரந்தன் சண்டைகளில் பெற்ற பாடங்களிலிருந்து, அடுத்த நடவடிக்கையில் புதிய வழிமுறைகளைக் கையாள்வது பற்றி ஆலோசித்தனர்.
பரந்தன் பகுதி முன்னரங்க நிலைகளுக்கப்பால் கிளிநொச்சி வரையான நேர்ப்பாதையை மையப்படுத்தி அடுக்கடுக்கான போர்வியூகங்களை இட்டிருக்கும் புலிகளின் ‘மரணப்பொறி’ களுக்குள் சிக்கிவிடாமல் கிளிநொச்சியை அடையும் மார்க்கத்தை, எதிரி தேடவேண்டியிருந்தது. ‘சத்ஜய’வின் இரண்டாம் கட்டம் அந்த வியூகங்களுக்குள் சிக்கியே சின்னாபின்னமானது. முழு வளங்களையும் ஒருங்குதிரட்டி நாட்கணக்கில் முயன்றபோதும் உடைத்தெறிய முடியாத இறுக்க வியூகங்களாகவே அவை இருந்தன. ‘கிபிர்’ உந்துவிசைப் போர்விமானங்கள், ‘புக்காரா’, ‘சியா மாசெற்றி’, ‘எம்.ஜ.24’ தாக்குதல் வானூர்திகள் கொண்டு அவற்றை நெருக்கவந்த சிங்கள வான்படை எதையுமே சாதிக்கவில்லை. ‘ஆட்லறி’கள், பீரங்கிக் கவசவண்டிகள், 120 மில்லி மீற்றர் மோட்டர்கள். மற்றும் சிறுரக மோட்டர்கள், ஏவுகருவிகள் சகிதம் சிறப்புக் ‘கொமாண்டோ’க்கள் கையாண்ட – ஒரே சமயத்தில் பல முனைகளிளுடு நகரும் – தந்திரோபாயமும் துளியளவு பயனையும் தரவில்லை.
எனவே – அந்த ‘அழிவு வலய’த்தை ஊடறுத்து நுழையும் விஷப் பரீட்சையில் மீண்டும் முயற்சிக்காமல் – அதனை விலக்கி, மேவி வளைத்து – பரந்தன் சந்தியிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலிருந்த கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு, 15 கிலோ மீற்றர் நீளமான ஒரு அரைவட்டச் சுற்றுப்பாதையில் படையை நகர்த்த எதிரி தீர்மானித்தான், இதில் அவனுக்கு வேறு இலாபங்களும் இருந்தன. சுற்றுப்பாதையொன்றில் நகர்வதன் மூலம் சமரரங்கை விரித்து பல கிலோ மீற்றர்களுக்கு அகட்டும்போது – குறிப்பிட்ட சில மையங்களில் ஒருங்குதிரட்டப்படுவதற்குப் பதிலாக – புலிகளின் பலம் ஜதாக்கப்படும் அப்போது, தீவிரம் குறைந்த ஒரு எதிர்த் தாக்கத்தையே தனக்கு புலிகளால் கொடுக்கக்கூடியதாயிருக்கும். அத்தோடு – திட்டமிட்ட ரீதியில் ஏற்கனவே தாயார்செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பான சண்டையரண்களுக்குள்ளிருந்து புலிகளை வெளிக்கொண்டு வந்து, போரிற்கு அரண் செய்யப்படாத புதுப்பிரதேசங்களில் சண்டைக்கிழுத்து, முல்லைத்தீவுக்கு ஈடான உயிரழிவையும் கொடுக்கலாம் என்ற கணக்குகளையும் எதிரி போட்டான்.
அவ்வாறான ஒரு சுற்றுவளைவு நீள்பாதையைத் தேர்வதற்கு, எதிரிக்கு இரண்டு வழிகள் இருந்தன. முதலாவது, கிழக்குப் புறத்தில் முரசுமோட்டைப் பகுதியூடாக கனகராயன் ஆற்றை எல்லையாகக்கொண்ட பரப்பினூடு நகர்ந்து, திருவையாறின் வழியாக கிளிநொச்சியை அடைவது. இரண்டாவது, மேற்குப் புறத்தில் குஞ்சுப்பரந்தன் பகுதியூடாக உருத்திரபுரம் – ஜெயந்திநகர் பிரதேசத்தை எல்லையாகக் கொண்ட பரப்பினூடு நகர்ந்து, டிப்போ வீதி வழியாக கிளிநொச்சியை அடைவது. இவற்றில் இரண்டாவது வழியில்தான் எதிரி நடவடிக்கையைச் செய்து முடித்தான். ஆனால், முதல் நகர்வை அவன் முதலாவது வழியிலேயே எடுத்தான்.
புரட்டாதி 22 ஆம் திகதி, ‘சத்ஜய’வின் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முன்பு – ‘றிவிரச’வை விடவும் கூடுதலான வளங்களோடு சத்ஜய’வின் இரண்டாம் கட்டம் முயற்சிக்கப்பட்டது. இப்போது – இரண்டாம் கட்டத்தை விடவும் கூடுதலான வளங்களோடும், சுற்றுப்பாதையில் நகர்ந்து புலிகளைச் சண்டைக்கிழுத்துக் கொல்லும் புத்திசாலித்தனமான தந்திரோபாயங்களோடும் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் சிறிலால் வீரசூரியாவின் நெறிப்படுத்தலில், பிரிகேடியர் வசந்த பெரேரா களத்தை வழிநடத்தினார். பரந்தன் பகுதியில் – யாழ். வீதிக்குச் சமாந்தரமாக – கிழக்கே 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தமது முன்னரங்க நிலைகளிலிருந்து, முல்லைத்தீவு வீதிக்கு வடக்கே ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வெளியேறி முரசுமோட்டைப் பகுதியை நோக்கி நகர முயன்ற சிங்களத் துருப்புக்களை 2 ஆம் கட்டைக்கு வடபுறத்தில் இடைமறித்த புலிகள், உக்கிர எதிர்த்தாக்குதலை நடாத்தி வழிமறித்து நிறுத்தினர்.
மீண்டும் மறுநாள் விடியற் பொழுதில் – அதே திசையில் தொடர்ந்து நகரத் தொடங்கிய படையினரை, 3ஆம் கட்டைக்கும் முரசுமோட்டைக் குளத்துக்கும் இடையால் வியூகமிட்ட புலிகள், கடுமையான எதிர்ச்சண்டையை நிகழ்த்தி இடைமறித்துத் தடுத்தனர். கிழக்குத் திசையில் இரண்டு நாட்களாக நடந்த இந்தப் பெருஞ்சண்டைகளையடுத்து, இரண்டாம் நாள் நள்ளிரவு வேளை திடீரென, மேற்குத்திசையில் மிகவேகமான இரவு நகர்வொன்றைச் செய்ததுடன், முதலிரண்டு நாளாய் முரசுமோட்டைப் பகுதியில் தான் முன்னேறியிருந்த இடங்களிலிருந்து எதிரி பின்வாங்கவும் செய்தான். முரசுமோட்டைப் பகுதியூடாக நகர்வை இடைநிறுத்தியமைக்கு அல்லது மேற்கொள்ளாமைக்கு, மூன்று காரணங்கள் கூறலாம்.
ஒன்று – மறைவுகளும் காப்புகளுமற்ற, வயல் நிலங்களான ஒரு வெளியான பிரதேசமாகவே அந்த வழி இருந்தமை. இரண்டு – புலிகளின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகவே, அது மேற்கொள்ளப்பட்டமை. மூன்று – புலிகள் கடுமையான எதிர்ச்சண்டைகளை நிகழ்த்தியமை. இந்தக் காரணங்களில் ஒன்றுக்காக அந்த முனையிலிருந்து பின்வாங்கிய எதிரி – உண்மை நகர்வை, அடுத்த முனையில், இரவில் செய்தான். யாழ். வீதிக்குச் சமாந்தரமாக ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தனது மேற்குப் பகுதி முன்னரங்க நிலைகளிலிருந்து, பூநகரி வீதிக்கு வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவில் புறப்பட்ட எதிரித் துருப்புக்கள் – குமாரபுரம், பெரியபரந்தன் பகுதிகளுக்கு வடபுறத்தால் நகர்ந்து, குஞ்சுப்பரந்தனூடாக வளைந்து, உருத்திரபுரம் பிரதேசத்தை அடைந்தனர்.
அந்த இரவு நகர்வுக்கு எதிராக தீவிரத்தன்மையற்ற ஒரு சண்டையிலீடுபட்டபடி புலிகள் பின்வாங்கலைச் செய்யவேண்டித்தான் இருந்தது. முடியுமான அளவுக்கு எதிரியைத் தாமதப்படுத்துவதைத் தவிர, முழுமையான ஒரு எதிர்ச்சண்டையை நடாத்த அது சாதகமான களம் அல்ல. சன்னங்களையும், குண்டுகளையும் அள்ளியிறைத்த வண்ணம் முன்னேறும் படை நகர்வை இடைமறிப்பதென்பதும், மட்டுப்படுத்தப்பட்ட படைக்கல வளத்தினையே கொண்ட புலிகளுக்குச் சாத்தியமற்ற காரியம். அவதானித்து, இனங்கண்டு, குறிபார்த்து சண்டையிட்டு, படைக்கல வளங்களை தேவைக்கு அளவாக மட்டுமே பயன்படுத்துவது என்பது பகல் சண்டைகளிலேயே சாத்தியமானது. இரவிலெனில், எதிரியின் நிலைகள் அசைவுகள் பற்றிய தெளிவான வேவுத் தகவல்கள் இருந்தாலே அது முடியும். எங்கு வருகிறான்? என்ன செய்கிறான்? எப்படி அசைகிறான்? எவ்வித வியூகத்தை இடுகிறான் என்பதை அறிய முடியாத இருளுக்குள் நகரும் துருப்புக்களைத் தடுத்துமறிக்க நினைத்து எதிர்கொள்வது, அழிவைத் தருகின்ற ஒரு களமாகவே முடியும்.
அந்த இரவு நடவடிக்கையில், மேற்குத் திசையில் 6 கிலோ மீற்றர்கள் வளைந்து நகர்ந்த துருப்புக்கள், விடியும் பொழுதில் உருத்திரபுரம் கட்டுக்குளத்துக்கருகில் நிலைகொண்டனர். இரண்டாம் கட்டப் படையெடுப்பில் மிகக்கடுமையாகச் சண்டையிட்டு வழிமறித்து மோதிய புலிகள், மூன்றாம் கட்டத்திலும் அதே வகையான முறியடிப்புச் சமரை நிகழ்த்துவர் என்பதைத்தான் ஏற்கனவே எதிரி எதிர்பார்த்திருந்தான். சண்டைக்கு அரண் செய்யப்பட்டிருக்கும் – காப்பு மிகுந்த – பிரதேசத்தில் மட்டுமன்றி, சண்டைக்குத் தயார் செய்யப்படாத காப்புகளற்ற – பிரதேசத்திற்கு சண்டையரங்கு மாற்றப்பட்டாலும் கூட அதேவகையான முறியடிப்புச் சமரை உக்கிரமாக நிகழ்த்துவர் என்றும் அவன் நம்பினான் அப்படி நடக்க வேண்டுமென்றுதான் விரும்பினான். அப்போது – அவர்கட்கு வாய்ப்பற்ற பிரதேசத்தில் தமக்கு முட்டாள் தனமாக முகம் கொடுக்கும் புலிகளுக்கு, பாரிய உயிரழிவை வழங்கலாம் எனத் திட்டமிட்டான்.
‘எதிரி எதை விரும்புகின்றானோ அதை நீ செய்யாதே’ என்பது ஒரு போரியல் அறிவுரை. புலிகளும், எதிரி விரும்பிய – புத்திசாலித்தனமற்ற அந்த முடிவை எடுக்கவில்லை. போரரங்கை வழிநடத்திக்கொண்டிருந்த தளபதிகள் பானு, தீபன் ஆகியோர். மாற்றமடைகின்ற களநிலவரங்களுக்கு ஏற்ப உடனுக்குடன் அறிவுறுத்தல்களை வழங்கிக்கொண்டிருந்த தலைவர் அவர்களின் ஆலோசனைக்கிணங்க, சமர்க்களத்தில் மாற்றத்தைச் செய்தனர். தம்மை அழிப்பதற்கென்றே திட்டமிட்டுக் கவர்ந்திழுக்கப்படும் அந்தப் பாதகமான மரபுவழிச் சண்டைக் களத்துக்குள் ஈர்க்கப்படாமல் புலிகள் விலகிக்கொண்டனர். ஆட்பல, படைக்கல வளங்கள் பற்றாக்குறையான – உள்ள வளத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய – புலிகளைப் போன்ற ஒரு கொரில்லா இயக்கத்திற்கு, அத்தகைய விலகல் அத்தியவசியமானது. எதிரியின் தந்திரோபாயப் போர்முறை நகர்வுக்கு ஏற்ப, தமது போர்முறையின் தந்திரோபாயத்தையும் புலிகள் உடனடியாக மாற்றினர்.
ஏதிரியை இடைமறித்துத் தடுத்துச் சமரிடுவதற்குப் பதிலாக – அவனது நகர்வுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட சண்டையொன்றை நடாத்தியபடி அவனை முன்னேற அனுமதித்துவிட்டு – வெற்றிக்கு வாய்ப்பான, சாதகமான’ கள நிலைமைகளில் ஊடுருவற் தாக்குதல்களை நடாத்தி அவனுக்கு இழப்பை உண்டுபண்ணும் போர்முறைக்குப் புலிகள் மாறினர். புலிகளை சண்டைக்கிழுத்துக் கொல்லும் நுட்பமான திட்டம் தவிடுபொடியானது மட்டுமல்ல எதிரிடையாக – தம் வரலாற்றில் என்றுமே சந்தித்திராத ஒரு முறியடிப்புத் தாக்குதலுக்கும் சிங்களப்படை இலக்கானது. 2 ஆம் நாள் இரவு உருத்திரபுரம் கட்டுக்குளம் வரை நகர்ந்து நிலைகொண்டிருந்த படையினர், 3 ஆம் நாள் காலை, அங்கிருந்து 8 ஆம் வாய்க்கால்பகுதியை நோக்கி முன்னேறியபோது – துருப்புக்களின் முன்னணித் தாக்குதற்படைப் பிரிவின் நகர்வினுள், சிறியளவான ஒரு திடீர் ஊடுருவற் தாக்குதலைப் புலிகள் நடாத்தினர்.
2 அல்லது 3 யுத்த ‘ராங்க்’குகளைச் சேதப்படுத்தியதுடன், ஜி.பி.எம்.ஜி, எல்.எம்.ஜிகள் உட்பட 12 ரைக்விள்களைக் கைப்பற்றினர். இந்தச் சண்டையை அடுத்து மறுநாள் எதுவித நகர்வையும் மேற்கொள்ளாது அமைதியாக இருந்த எதிரி – அதற்கடுத்த நாள் வேறொரு புதுவழி மூலம் நகரத் தயாராகிக்கொண்டிருந்தபோது 5 ஆம் நாள் – 26 ஆம் திகதி வியாழக்கிழமை – ‘சத்ஜய’ துருப்புக்களுக்கு அழிவுக்குரிய நாளாகவே விடிந்தது. அன்றுதான் பேரழிவு மிக்க அந்தப் பெருந்தாக்குதலை அவர்கள் எதிர்கொண்டனர். உருத்திரபுரம் புனித பற்றிமா கல்லூரிக்கருகில் நிலைகொண்டிருந்த ‘சத்ஜய’ துருப்புக்களின் முன்னணிப் பகுதிக்குள் மூன்று முனைகளில் ஊடறுத்து நுழைந்த புலிகள், எதிரிக்கு மரண அடியைக் கொடுத்தனர். அந்த முன்னரங்க நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்புக் ‘கொமாண்டோ’ப் படையணிகளைச் சிதறடித்தனர்.
காலை 5.30 மணியிலிருந்து 3 மணிநேரம் அந்த உக்கிரமான அதிரடித் தாக்குதலைப் புலிகள் நிகழ்த்தினர். வான்படையின் போர்விமானங்கள், ‘ஆட்லறி’கள், யுத்த ‘ராங்க்’குகள் மற்றும் கனரக – சிறுரக போர்க்கருவிகள் சகிதம் அந்தத் தாக்குதலை முறியடிக்கப் பகைவன் எடுத்த உச்சகட்ட முயற்சியை முறியடித்த புலிகள், தாக்குதலை வெற்றிகரமாக பூர்த்திசெய்த பின்பு களத்திலிருந்து வெளியேறினர். குறைந்தது 200 வரையான சிங்களச் சிப்பாய்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது உறுதியானது. 190 படையினர் கொல்லப்பட்டதாக சண்டே ரைம்ஸ் தனது 29.09.96 ஆம் திகதிய இதழிலும், 206 படையினர் கொல்லப்பட்டதாக மிட்வீக் மிறர் தனது 16.10.96 ஆம் இதழிலும் குறிப்பிட்டுள்ளன. 32 ஆயுத கருவிகளைப் புலிகள் கைப்பற்றினர்.
புலிகளின் 42 வீரர்கள் அந்தக் களத்தில் வீழ்ந்தனர். கரும்புலிகளின் அணியெதுவும் தாக்குதலில் பங்கேற்கவில்லை. ஆனால், சிங்கள அரசு, தாக்குதலைத் தாம் முறியடித்ததாகவும், அதில் புலிகளின் தற்கொலைப் படையினர் உட்பட 450 புலிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 136 போரின் சடலங்களைத் தாம் மீட்டுள்ளதாகவும் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்களைச் செய்தது. எனினும், இந்தத் தாக்குதலின் போது எமது 17 மாவீரர்களின் உடல்கள், களத்திலிருந்து மீட்டுவரப்பட முடியாமல் விடுபட்டுவிட்டன என்பது உண்மையாகும். களப்பிரதேசத்தில் ஆங்காங்கே வயல் வெளிகளிலும், வீதியோரங்களிலும் தாம் பொறுக்கியெடுத்த 100 வரையான புலிகளின் உடல்களை ஒப்படைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்மூலம் அரசு அறிவித்தது. எமது மாவீரர்களின் உடல்களைப் பெறுவதற்குச் சம்மதம் தெரிவித்துக் காத்திருந்தபோதும், பின்னர் உடல்களை அரசு வழங்கவில்லை. 6 ஆம் நாள் – சண்டையின் பிரதான மையமும், புலிகளின் கணிசமான சண்டையணிகளும் உருத்திரபுரம் பகுதியில் நிலைகொண்டிருந்தவேளை – திடீரென, அதிகாலையில், பரந்தன் முன்னணி நிலைகளிலிருந்து கரடிப்போக்குச் சந்தியை நோக்கி, பிரதான வீதிக்கு மேற்குக் கரையால் நகர முற்பட்ட பகைவனை – ஏற்கனவே அரண் செய்யப்பட்டிருந்த காப்பான நிலைகளிலிருந்து உக்கிர எதிர்த் தாக்குதலை நிகழ்த்திய புலிகள், பலத்த இழப்பைக் கொடுத்து வழிமறித்து நிறுத்தினர்.
7 ஆம் நாள் – மீண்டும் உருத்திரபுரப் பகுதியிலிருந்து, ஜெயந்திநகரூடாக நகர்ந்த துருப்புக்கள் மீது, குருகுலத்திற்கு அருகில் புலிகள் ஒரு அதிரடியைக் கொடுத்தனர். யுத்த ‘ராங்க்’ ஒன்று முழுமையாக அழிக்கப்பட்டது. 8 ஆம் நாள் – குருகுலப் பகுதியிலிருந்து திருநகரூடாக ஒரு அணியும், பரந்தனிலிருந்து இன்னொரு அணியும் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தபோது – திருநகருடாக நகர்ந்த அணி கிளிநொச்சி மருத்துவமனையையும், பரந்தனிலிருந்து நகர்ந்த அணி கரடிப்போக்கு புனித திரேசா கல்லூரியையும் அடைந்தன. இந்தச் சண்டைகளில் 2 ரைவிள்கள் கைப்பற்றப்பட்டன. 9 ஆம் நாள் – ‘சத்ஜய’ 3 ஆம் கட்டத்தின் இறுதி நாள் – புரட்டாதி 30 ஆம் திகதி, ஜெயந்திநகர், பகுதியிலிருந்து தென்திசையால் நகர்ந்த அணி, அம்பாள்குளம் சந்தியூடாக வளைந்து, டிப்போ வீதிவழியாக பிரதான வீதியை அடைந்தது.
சத்ஜய படையெடுப்பின் 3 ஆம் கட்டம் முடிவடைந்துவிட்டது. இப்போது – ஆனையிறவுத் தளத்திலிருந்து, கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை, பிரதான வீதியை மையப்படுத்தி 3 கிலோமீற்றர் அகலத்தில் சிங்களப் படைகள் நிலைகொண்டுள்ளன. ‘சத்ஜய’ 3 ஆம் கட்டச்சமரில் தனது 269 படையினர் உயிரிழந்ததாக, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமைச் செயலகம கூறுகிறது.
எனினும், களத்திலிருந்து கிடைத்த செய்திகள், 500 இற்கும் குறையாத படையினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. ‘சத்ஜய’வில் உயிரிழந்த படையினரின் தொகையை அரசு அரைப்பங்காகக் குறைத்தே வெளிப்படுத்தியது.’ என்று திரு.ரணில் விக்கிரமசிங்கா, ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலும், ‘கொழும்பு மாவட்டத்திற்கு மட்டும் 300 படையினரின் சடலங்கள் வந்தன. ஏனைய மாவட்டங்களிற்கு எத்தனை வந்தனவோ தெரியாது’ என கொழும்பு மாவட்ட உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எச். முகமட், நடாளுமன்ற உரையிலும் தெரிவித்திருப்பது இங்கு கவனத்திற்குரியதாகின்றது. ‘சத்ஜய’ 3 ஆம் கட்டச்சமரில் எமது 133 வீரர்கள் வீரச்சாவடைந்தனர். கிளிநொச்சிச் சமரின் போரியல் பரிமாணம் வித்தியாசமானது; வழமையைவிட மாறுபட்டது; தமிழீழப் போரின் புதிய கட்டமொன்றைப் புலப்படுத்துவது. தனது யுத்த சரித்திரத்தில் முதற்தடவையாக விடுதலைப் புலிகளின் படைத்துறையானது, மரபுவழிச் சமர் ஒன்றை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் – ‘றிவிரச’ படையெடுப்புக்கு எதிரான சமரை விடவும், ‘சத்ஜய’ படையெடுப்புக்கு எதிரான சமர் முன்னேற்றகரமானது என்று சொல்லலாம். முன்னைய சமர்களில் கிடைத்த அனுபவங்களும், புலிகள் புதிதாகக் களத்திலிறங்கிய போராயுதங்களும் இந்த மேம்பாட்டில் பங்கு வகிக்கின்றன. புலிகளின் கைகளிற்கு 120 மில்லி மீற்றர் மோட்டர்களினதும் மற்றும் பெயர் குறிப்பிட முடியாத சுடுகருவிகளினதும் வருகை, மரபுவழிச் சமர் முறையை எதிரிக்கு முதற்தடவையாக சிக்கலுக்குரிய தாக்கியுள்ளதுடன், மரபுவழிச் சமரொன்றைச் சந்திக்கவல்ல போர்த்திறனின் ஆரம்பக்கட்டத்தைப் புலிகளுக்கும் வழங்கியுள்ளது.
‘சத்ஜய’வின் 2 ஆம் கட்டமும் 3 ஆம் கட்டமும், புலிகளது போர்வலுவின் இருவேறு பரிமாணங்களைக் காட்டுகின்றன. நிலத்தை இழந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனும், அதற்காக எத்தகைய உயிர் விலையைக் கொடுக்கவும் தயாரான நிலையுடனும் இருந்தால், படையெடுப்பு நடவடிக்கையொன்றை முழுமையாகத் தடுத்து முறியடிக்கலாம் என்பதற்கு, 2 ஆம் கட்டச்சமர் சான்று. ஆட்பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தந்திரோபாயப் பின்வாங்கலொன்றைச் செய்யவேண்டியிருந்தது. ஆனால் அதற்காக, நிலத்தைத் தற்காலிகமாக இழக்க – விட்டுக்கொடுக்க – நேர்ந்தாலும் கூட, படையெடுப்பு நடவடிக்கை ஒன்றை எதிர்கொண்டு மோதி, குறைந்த சேதத்துடன் எதிரிக்கு மிகக் கூடிய அழிவைக் கொடுக்கமுடியும் என்பதற்கு, ‘சத்ஜய’வின் 3 ஆம் கட்டச் சமர் சான்று. கெரில்லாப் போருபாய யுத்த முறையில் புலிகள் பெற்றுவிட்ட பூரணப்பட்ட வளர்ச்சி நிலைக்கு, முல்லைத்தீவுத் தாக்குதல் ஒரு குறியீடு. மரபுவழி யுத்த முறையில் ஈடுபட புலிகள் பெற்றுள்ள புதிய போர் வலுவுக்கு, கிளிநொச்சிச் சமர் ஒரு அடையாளம்; இதனை – தமிழீழ யுத்தகளத்தில் வருங்காலத்தில் நிகழப்போகும் பெரும் மாற்றங்களின் எதிர்வுகூறல் என்றுதான் சொல்லவேண்டும்!
தி. இனியவன்
ஆவணம் – Sathjaya Padaiyeduppum