
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது
கல்வி
இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார்.[2]
1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்
சிறப்புக்கள்
1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
ராமானுஜன் ஆய்வுகளில் “தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்”, “தியரி ஆஃப் நம்பர்ஸ்”, “டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்”, “தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்”, “எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்” எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
இவருடைய “மாக் தீட்டா ஃபங்சன்ஸ்” எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.