ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன் குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள் முடியுமட்டும் அங்கேயே தங்கியிருந்து தமது அறுவடையினை முடித்துக்கொண்டு நெல் மூட்டைகளுடனேயே திரும்புவது வழக்கமாகும். இவ்வாறே 1986 ஆம் ஆண்டு மாசி மாதமும் வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள்.
1986.02.19 அன்று காலை 6.30 மணியளவில் கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினரால் உடுப்பன்குள வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு கைகள், கண்கள் கட்டப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்தவர்களில் பெண்கள் இராணுவத்தினராற் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண்களின் ஆண் உறுப்பு வயலில் நெல் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாளினால் வெட்டப்பட்டது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். பலர் இராணுவத்தினரின் துன்புறுத்தலினாலேயே தமது உயிரினை இழந்தார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களைச் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடலினை அறுவடை செய்யப்பட்ட நெற்சூட்டினுள் ஒன்றாகப் போட்டு எரித்தார்கள்.
இவ்வாறு 1986.02.19 அன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், வாடியில் தங்கியிருந்தவர்கள் என நூற்றுமுப்பத்துமூன்று பேரிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து 21.02.1986 அன்று மட்டக்களப்பு பிரசைகள் குழு வணபிதா சந்திரா பெர்ணான்டோ, நாளேட்டாளர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த
தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள்.
உடும்பன் குளத்தில் வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக லெப்டினன்ட் சந்திரபால தலைமை தாங்கினார். இச்சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லீம் குழுக்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.
19.02.1986 அன்று உடும்பன்குளம் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.