தீபாவளிப் படுகொலை.
ஒக்ரோபர் 21, 22 1987.
யாழ். மருத்துவமனையில் இந்திய இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதலில் நோயாளர், மருத்துவர்கள், தாதியர், பணியாளர் உள்ளிட்ட 68 பேர் கொல்லப்பட்ட முப்பத்து மூன்றாமாண்டு நினைவு.
ஒக்ரோபர் 21, 1987.
மாலை 04.20 மணிக்கு இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர்.
நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர்.
அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர். இவர்களில் மேற்பார்வையாளர், முதலுதவி வண்டிச் சாரதியும் அடங்குவர்.
ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கைக்குண்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.
8ம் எண் விடுதியிலிருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காகத் தங்கியிருந்தனர்.
இறந்துவிட்டது போன்று தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.
இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் தொடர்ந்தன.
ஒக்ரோபர் 22, 1987.
காலை 08.30 மணி – மருத்துவர் சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்” எனக் கத்தியபடி சென்றனர்.
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதில் மருத்துவர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார். தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.
முப 11.00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் விடுதி ஒன்றினுள் நுழைந்தார்.
ஒரு பெண் மருத்தவர் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அந்த அதிகாரி ஏனைய பணியாளர்களைக் கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார்.
அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர்.
வெளியேறும் போது அவர்கள் மருத்துவர் கணேசரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர்.
அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.
மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் கூறியது.
லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என விடுதலைப் புலிகளும் இலங்கை அரச தரப்பினரும் தெரிவித்தனர்.