அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987
யாழ். மாவட்டத்தில் கரவெட்டிப் பிரதேசத்தில் அல்வாய்க் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் இருநூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விவசாயக்குடும்பத்தை சேர்ந்த வள்ளிநாச்சியார் என்பவர் இந்தியாவிலிருந்து தருவித்த கருங்கற் சிலையைத் தனக்குச் சொந்தமான வேவிலந்தை என்ற காணியில் வைத்து வழிபட்டு வந்தார். ஆரம்ப காலத்தில் அச்சிலையை வழிபட்டு வந்த மக்கள் காலப்போக்கில் பெரிய ஆலயமாகக் கட்டினார்கள். வீதியின் முன்பாக பெருவிருட்ச மரங்கள் காணப்படுவதோடு, வடமராட்சிப் பகுதியில் இந்துக்களின் பிரசித்தமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது.
1987 மே இருபத்தாறாம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர் வடமராட்சிப் பகுதிமீது கூட்டுப்படைத் தளபதி சிறில் ரணதுங்க மற்றும் இராணுவ அதிகாரிகளான லலித் கொத்தலாவல, கொப்பேகடுவ போன்றோர் தலைமையில் ஒப்பிரேசன் லிபரேசன் (Operation Liberation) என்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். பலாலி இராணுவத் தளத்திலிருந்து எறிகணை வீச்சு, கடற் தாக்குதல், ஆகாய தாக்குதல் என மும்முனைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை உலங்குவானூர்தி மூலம்
துண்டுப் பிரசுரங்களைப் போட்டதுடன், பலாலியிலிருந்து ஒலிபரப்புச் செய்யப்பட்ட வானொலிச் சேவை மூலமும் மக்களைப் பாதுகாப்பாக ஆலயங்களில் இருக்கும்படி இராணுவத்தினர் அறிவித்தார்கள்.
29.05.1987 அன்று இராணுவத்தின் இந்த அறிவிப்புகளைச் செவிமடுத்த மக்கள் அச்சமடைந்து, கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு முத்துமாரியம்மன் கோயிலில் பாதுகாப்புக்காகத் தஞ்சமடைந்தனர். இதில் அல்வாய்க் கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி இன்பருட்டி, திக்கம், வதிரி, நெல்லியடி, தம்பசிட்டி, புலோலி, கரவெட்டி ஆகிய இடங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இவ் அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். ஆலயம் பெரிய ஆலயமாகவும், விசாலாமான வீதிகள், பெரிய மரநிழல்கள் கொண்டிருந்தமையாலும் அத்தனை மக்களும் அங்கு தங்கக் கூடியதாக இருந்தது.
29.05.1987 அன்றையதினம் மாலை 7 மணிக்கு அம்மன் கோயில் உள்மண்டபம் மக்களால் நிறைந்திருந்தது. இரவு 9 மணியளவில் வெளிவீதி எங்கும் ஒரே மக்கள் கூட்டம். இரவு 11 மணியளவில் இராணுவத்தினரால் வீசப்பட்ட எறிகணை ஆலயத்தின் முன்னுள்ள வேப்பமரத்தில் வீழ்ந்து வெடித்தது. இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. அடுத்த எறிகணை உள்மண்டபத்தில் கொடிக்கம்பத்தின் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த எறிகணை வசந்த மண்டபத்தில் வீழ்ந்ததினால் அவ்விடத்திலிருந்த இளைஞர்கள் உயிரிழந்தார்கள். இவ்வாறு மூன்று எறிகணைகள் ஆலயத்தில் வீழ்ந்து வெடித்ததால், ஆலயத்தில் ஒரே அவலக்குரல் எழுந்தது. அச்சமடைந்ததால் பாதுகாப்பைத் தேடிய மக்கள் நான்கு திசைகளிலும் சிதறி ஓடினார்கள். ஆலயம் இரத்த வெள்ளமானது. இதில் யார் யார் உயிரிழந்தார்கள் என்று அடையாளம் காண முடியாதளவிற்கு உடல்கள் சிதைந்திருந்தன. இராணுவத்தின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பைத் தேடி ஆலயத்தில் தஞ்சமடைந்த பொதுமக்களில் நாற்பது பேர்வரை எறிகணை வீச்சில் உயிரிழந்தார்கள். இருபத்திரண்டு பேர் வரை காயமடைந்தார்கள்.
29.05.1987 அன்று அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் மீதான எறிகணை வீச்சில் கொல்லப்பட்டோர் விபரம்:
காயமடைந்தவர்களின் விபரம:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.